
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9138
Date uploaded in London – –13 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்ப ராமாயணத்தில் ராவணனின் வீணைக் கொடி பற்றி கம்பன் பாடிய இடங்களை முன்னொரு கட்டுரையில் கண்டோம். மன்மதனின் மீன் கொடி பற்றியும், மேலும் பலரின் சிங்கக் கொடி இந்திரஜித்தின் பேய்க் கொடி பற்றியும் கம்பன் பாடுகிறான்.
சிங்கம், வீணை , மகரம், மீன் என்றால் உடனே நம் மனக்கண் முன் அந்த உருவங்கள் வந்து விடுகின்றன. பேய்க் கொடி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் ? கற்பனை தான் செய்யவேண்டும்!
முதலில் யுத்த காண்ட பாடலைப் படித்துவிட்டு சிறிது ஆராய்ச்சியும் செய்வோம் .
இந்திர ஜித் போர்க்களம் வந்த காட்சியை யுத்த காண்டத்தில் வருணிக்கையில்
“பேய் ஆர்த்து எழுந்து அடு நெடுங்கொடி பெற்றது அம்மா”
— என்று வியப்புகுறியுடன் பாட்டை முடிக்கிறான் கம்பன்
பொருள்
இந்திரஜித் வந்து விட்டான், வந்துவிட்டான் என்று பேய்கள் ஆனந்தத்தால் கூத்தாடுகின்ற பெரிய கொடிகளைப் பெற்றது இந்திர ஜித் ஏறிய தேர்.

பேய்க் கொடியின் உருவம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தும் கப்பல்களில் கபாலம் என்னும் மண்டை ஓடுகள் காட்சி தருகின்றன. அவைகளைப் போல பேய் உருவம் பொறித்த , அச்ச்சுறுத்தும் கொடிகளை இந்திரஜித் பயன்படுத்தி இருக்கிறான் . இங்கு ஒரு உள வியல்- மனவியல் குறிப்பும் கிடைக்கிறது
கொடிய குணம் படைத்த துரியோதனனுக்கு பாம்புக் கொடி . பேய்க் குணம் படைத்த இந்திரஜித்துக்கு பேய்தான் கொடி! மனம் போல மாங்கல்யம் !
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மனத்தின் அழகு கொடியில் தெரிகிறது.
கம்பராமாயண உரைகாரர்களும் இந்திரஜித்தின் கொடியில் பேய்கள் இருந்ததை தெளிவாகக் கூறுகிறார்கள்

Xxxx
கும்பகர்ணனின் சிங்கக் கொடி
கும்பகருணன் , ராவணன் தம்பி. அவன் போருக்கு வந்த காட்சியை கம்பன் யுத்த காண்டத்தில் வருணிக்கிறான் மலை போன்ற தோள் , பரந்த மார்பு. ஆனால் அவன் தேரில் சிங்கக் கொடி பறக்கிறது. எல்லா வகையிலும் ராவணனை ஒத்து இருக்கிறான் ஆனால் வீணைக் கொடிக்குப் பதிலாக சிங்கக் கொடி பறக்கிறதே ! யாரப்பா இவன்? என்று விபீஷணனை வினவுகிறான் ராமன். அதற்குப் பதில் கூறிய விபீஷணன் அவன்தான் கும்ப கருணன் என்கிறான். இதோ சிங்கக்கொடி பாடல்…….
வீணை என்று உணரின் அஃ து அன்று விண்தொடும்
சேண் உயர் கொடியது வய வெஞ்சீயமால்
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால்
பொருள்
வானை முட்டும் உயரத்துக்கு கொடி. அதில் வீணையைக் காணவில்லையே .
சிங்கக் கொடி பறக்கிறது . அவனையோ காற் று வேகத்தைக் கடந்து மனோவேகத்தில் பார்த்தாலும் காண முடிவதில்லை . அணிகள் அழகு செய்யும் மார்பை உடைய இவன் யார் ?
இது ராமனின் கேள்வி
xxx
மன்மதனின் மகர கேது
கம்பராமாயணம் பால காண்டத்தில் மன்மதனின் மகரக் கொடி பற்றி பாடினான்.
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – என்று உண்டாட்டுப் படலத்தில் மகர கேது பற்றிச் சொல்கிறான்.
இதன் பொருள் – வைரம் போன்ற உறுதியுடைய வாளை உடைய மன்மதனின் மீன் கொடி — என்று உரை கூறுகிறது மகர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு சுறா மீன் , முதலை என்ற சிறப்புப் பொருள்களும் உண்டு .
–subham—

tags — பேய்க் கொடி , மீன் கொடி , சிங்கக் கொடி , மகர கேது