‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்!

05FR-SMITHA__29950e
Dancer Smitha Madhav as ஆண்டாள் ( photo from The Hindu)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1442; தேதி 28 நவம்பர், 2014.

கட்டுரையின் முதற்பகுதி “தோன்றிற் புகழொடு தோன்றுக” — என்ற தலைப்பில் நேற்று வெளியாகியது அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எழுந்திரு (உத்திஷ்ட) என்று நான்கு முறை கூறியதையும் அதையே வள்ளுவரும் கூறியிருப்பதையும் கட்டுரையின் முதற் பகுதியில் கண்டோம்.

ஆண்டாளும் தன்னுடைய தோழிகளை இப்படி தட்டி எழுப்புவதைப் பார்க்கிறோம். குறைந்தது மூன்று இடங்களில் தோழிகளையும் ஏனைய இடங்களில் கடவுளையும் சுப்ரபாதம்/ பள்ளி எழுச்சி பாடி எழுப்புவதைப் படிக்கிறோம். மேம்போக்காகப் பார்த்தால் இது எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை பள்ளிக் கட்டிலில் இருந்து எழுப்புவது போலத் தோன்றும். உண்மையில் அவள் சொல்லும் உறக்கம் பேர் உறக்கமாகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—பிராமணன் ஆவதுதான். அதாவது பிரம்மத்தை நாடுவதே ஆகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—அந்தணன் ஆவதுதான். அதாவது அந்தத்தை அணவுவதே ஆகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—பார்ப்பான் ஆவதுதான். அதாவது மனதை உட்புறமாகத் திருப்பி உள்ளே உறையும் இறைவனைப் பார்ப்பதே ஆகும்.

இப்படி மனித குலம் முழுவதையும் ஐயர்களாக (ஹையர் அண்ட் ஹையர் Higer and Higer= Iyer உயர உயர) உயர்த்துவதற்கு பிரம்ம முஹூர்த்தமாகிய காலை நாலு மணிக்கு தியானத்திலோ வழிபாட்டிலோ ஈடுபட வேண்டும். இதற்காகத்தான் பாவை (மார்கழி) நோன்பு என்பதைக் குளிர் காலத்தில் வைத்தார்கள். அப்பொழுதுதான் போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள்.
andal

முதலில் உடல் விழித்துக் கொண்டால் பின்னர் உள்ளமும் விழித்துக் கொள்ளும். அதாவது அறியாமை என்னும் பேர் உறக்கத்தில் இருந்து ஆன்மா விழித்துக் கொள்ளும்.
இதைத்தான் ஆண்டாள் திருப்பாவையில்

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம் (பாவை 12) – என்றாள். இது போல திருப்பாவையில் குறைந்தது மூன்று எழுந்திராய் (பாடல்கள் 8, 12, 14) வருகிறது.

இதற்கும் முன்னர், கடோபநிஷத்தில் (1-3-14) உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராயவரான் நிபோதத! — (எழுந்திரு! விழிப்படை! குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!!) — என்ற வீரிய வாசகம் வருகிறது. இதைத்தான் எல்லோரும் பல வகையில் சொல்லுவர். விவேகாநந்தர் அடிக்கடி சொன்ன மேற்கோள் இது.

வால்மீகி சொன்ன உத்திஷ்ட!
தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் பிரபலமான வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் உத்திஷ்ட மிகவும் தெரிந்த ஒன்று. சு+ ப்ரபாத என்றால் நல்ல+காலை எனப் பொருள். ஆங்கிலத்தில் ‘’குட் மார்னிங்’’ என்று சொல்லுவோம். இதை பள்ளி எழுச்சி என்று மாணிக்கவாசகரும், பாரதியாரும் பாடி வைத்துள்ளனர்.

இதன் முக்கிய நோக்கம் இறைவனைக் காலையில் எழுப்புவது அல்ல. அந்தச் சாக்கில் நம் எல்லோரையும் அதி காலை பிரம்ம முகூர்த்தத்தில் – காலை 4 மணிக்கு — எழுந்திருக்க வைத்து உறங்கிக் கிடக்கும் ஆன்மாவை விழிப்புற வைப்பதாகும்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை இயற்றிய பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராசார்யார், முதல் பாடலாகத் தெரிந்தெடுத்தது வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் வரும் ஸ்லோகம் ஆகும்:–

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்ததே
உத்திஷ்ட நரசார்தூல கர்தவ்யம் தைவ மாஹ்னிகம்
……………….
உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த! உத்திஷ்ட கருடத்வஜ

பொருள்: கௌசல்யாவின் மகனாகப் பிறந்த உத்தமோத்தமனே! ராமா! கீழ் திசையில் காலைப் பொழுது மலர்ந்துவிட்டது! ஆண்களில் புலி போன்ற வீரனே! தினமும் செய்ய வேண்டிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. கருடக் கொடியை உடைய கோவிந்தா! எழுந்திரு!

bharatmata (1)

இந்தக் காலை வணக்கம் இறைவனுக்கு என்பதை விட அதைச் சொல்ல நம்மை எழுந்திருக்கத் தூண்டும் வணக்கமாகவே கொள்ளல் வேண்டும்.

பாரதியார் பாடிய பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியைப் பார்க்கையில் இது சட்டென விளங்கும். அதவது தூங்கிக் கொண்டிருக்கும் பாரத அன்னையை எழுப்புதல் என்பது சுதந்திர யுத்தத்தில் சேராமல் சோம்பித் திரிந்த பாரத மக்களைத் தட்டி எழுப்பிய சுப்ரபாதம் அது. இதோ பாடலின் முதல் பத்தியைப் படித்தாலேயே சுப்ரபாதம்/பள்ளி எழுச்சி யாருக்கு என்பது தெற்றென விளங்கும்:–

பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில்கின்றனை இன்னும் என் தாயே
வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே!

——பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளி எழுச்சி