
ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)
WRITTEN BY S NAGARAJAN
Post No.7456
Date uploaded in London – 15 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பொங்கல் 15, ஜனவரி 2020
எமது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ச.நாகராஜன்

1
சூரியனின் புகழ் பாடுவோம்:
அவன் புகழ் பாடுவது :-
புண்ணியத்தைத் தருகிறது.
எதிரிகளை அழிக்கிறது
வெற்றியைத் தருகிறது.
அழியாத மங்களத்தைத் தருகிறது.
கணவன் மனைவியை இடைபிரியாமல் அன்யோன்யமாக இருக்க வைக்கிறது.
ஆரோக்கியத்தைத் தருகிறது.
பூரண ஆயுளைத் தருகிறது.
செல்வத்தை வழங்குகிறது.
தலைமைப் பதவியைத் தருகிறது.
நல்லனவற்றை நாடிச் செய்ய வைக்கிறது.
புத்திர பாக்கியத்தைத் தந்து அவர்களின் புகழையும் ஓங்க வைக்கிறது.
ஞாயிற்றால் பெற முடியாது ஒன்றும் இல்லை.
அவனைத் தொழுவோம் உயர்வோம்.
2
மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் சூர்ய அஞ்சலியை மனதில் நினைத்து சூர்யனின் புகழைப் பாடுகிறோம்.
ஞாயிறு வணக்கம்
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வாள்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்
சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.
என்த னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்தன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
காதல்கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.
3

மஹாகவியின் வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழ் பாடும் அருமையான நீண்ட கவிதை ஞாயிறு.
அதில் சில பகுதிகளைப் பார்ப்போம்:
ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?
மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?
உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகின்றான்?
புகழ் எவனுக்குரியது?
அறிவு எதுபோல் சுடரும்?
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?
ஞாயிறு. அது நன்று.
நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி.
மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து —
இவை யெல்லாம் நினது திகழ்ச்சி.
கண் நினது வீடு.
புகழ், வீரம் — இவை நினது லீலை.
அறிவு நின் குறி. அறிவின் குறி நீ.
நீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்.
வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.
4
அகஸ்திய மஹரிஷி ஸ்ரீராமருக்கு உபதேசித்து அருளிய ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்.
அதைப் பாடுவோம்.
ராவண சக்திகளை அழிப்போம்.
5
சிவபிரான் அருளியுள்ள சூர்யாஷ்டகத்தைப் பொருளுணர்ந்து ஓதுவோம்.
சூரிய அஷ்டோத்திர சத நாமாவளியை ஓதித் துதிப்போம்.
6
கஸ்யப மஹரிஷிக்கும் அதிரிக்கும் மகனாப் பிறந்தவர் சூரியன். சூரிய வம்சத்தை உருவாக்கியவர் சூரியன்.
சூரியனின் ரதம் 9000 யோஜனைகள் நீளம் உள்ளது. இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. காலச் சக்கரம் மூன்று மையங்களையும் ஐந்து உருளிப்பட்டைகளையும் ஆறு ஆரைகளையும் கொண்டது.
ஏழு வேத சந்தங்களான ஏழு குதிரைகளைக் கொண்டது அந்தத் தேர்.
காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகியவையே அந்த ஏழு குதிரைகள்.
சூரிய ரதத்தின் இன்னொரு அச்சு 45,500 யோஜனைகள் நீளம் கொண்டது.
இந்த ரதத்தின் பெருமை மிக மிக நீண்டது.
ஆதித்யனைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் பெருமை எல்லையற்றது.
அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக சூரியனை சிவபிரான் நியமித்ததை மஹாபாரதம் சாந்தி பர்வம் விவரிக்கிறது. (அத்தியாயம் 112)
சுப்ரஜா, பாஸ்வரா ஆகிய இரண்டு ஏவலாட்களைத் சுப்ரமண்யருக்குச் சூரியன் தந்தார்.
7
எல்லையற்ற மஹிமை கொண்ட சூரியனுக்கு அளவற்ற நாமங்கள் உண்டு.
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஸ்மே திவாகரா என்று கூறித் தொழுவோம்.
சூர்யா, ஆர்யமா, ஆதித்யா, திவாகரா,அர்கா, மிஹிரா, லோக பாந்தவா, தின மணி, இனா, பர்கா, தர்ம நிதி … அடடா எத்துணை அற்புதமான பெயர்கள்!
அனைத்தையும் கூறி அனுதினமும் அவனைத் தொழுவோம்.
உயர்வோம்.
*******