சான்றோரும் சந்திரனும்; சான்றோரும் பாம்புகளும்

moon

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1541; தேதி 4 January, 2015.

சான்றோரும் சந்திரனும் ஒன்றுதான்; ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்! சன்றோரும் சந்திரனும் பிரகாசமானவர்கள்; குளிர்ச்சி மிக்கவர்கள். இவை இரண்டுக்கும் பொது. ஆனால் சந்திரனில் மான் போலவும் முயல் போலவும் தோன்றும் களங்கம் உண்டு. சான்றோரிடத்தில் இப்படி ஒரு களங்கம் வந்தால் அவர்கள் மறு கணமே உயிர் துறப்பர். சந்திரனோவெனில் தேய்ந்தும் வளர்ந்தும் தொடர்ந்து இருக்கும்!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் மன் – திங்கள்

மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து

தேய்வர் ஒரு மாசுறின் (நாலடியார்)

வள்ளுவனும் கூட இதையே சொல்லுவான்:-

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (969)

குடிப் பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக் கண் மறுப்போல் உயர்ந்து 957

காளிதாசன் – குமார சம்பவம் 1-3

இவர்களுக்கு எல்லாம் முன்னரே உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் இதைச் சொல்லிவிட்டான். இமய மலை அழகை வருணிக்கும் அவன், அதில் பனி மூடியிருப்பது ஒரு குறையாகாது என்பான். இதற்கு நிலவையே எடுத்துக் காட்டுகிறான. சந்திரனில் ஒரு களங்கம் இருந்தாலும் அது வீசும் வெள்ளி நிற ஒளியில் அந்தக் களங்கம் பொலிவிழந்து போகவில்லையா? என்று குமாரசம்பவம் என்னும் அற்புத காவியத்தில் சொல்லுகிறான்.

pictures-of-king-cobra-snakes

மேன் மக்களும் பாம்பும்

மேன் மக்கள் — தண்ணீர் பாம்பு போன்றவர்கள்; விஷமில்லாத பாம்பு என்பதால் தண்ணீர் பாம்பு எப்போதும் கரையில் கிடக்கும்.யாரும் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுவும் அஞ்சி ஓடுவதில்லை! மேன் மக்கள் அதைப் போன்றவர்கள்.

கீழ் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். நல்ல பாம்பு விஷம் உடையது ஆகையால் அது கரந்துறையும்; மறைந்து வாழும். கீழ் மக்களும் அத்தகையோரே.

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத்தவர் – அவ்வையாரின் வாக்குண்டாம்

பசுவுக்குத் தண்ணீர் கொடுத்தால் அது பாலாகப் பொழிந்து தள்ளுகிறது.

பாம்புக்குப் பாலையே கொடுத்தாலும் அது விஷமாகக் கக்குகிறது.

மேன் மக்களும் கீழ் மக்களும் பசுவும் பாம்பும் போன்றவர்களே. எந்த நூல்களைப் படித்தாலும் மேலோர்கள் அதில் நல்ல பொருளையே காண்பர். இவர்கள் பசு அனையர். தண்ணீரை உட்கொண்டு பால் தருவது போல நல்ல கருத்துக்களை வெளியிடுவர்.

northern-water-snake

அதே நூல்கள் கீழ் மக்களிடம் கிடைத்தாலோ கெட்ட பொருளைக் காண்பர். அர்த்தத்தை அனர்த்தமாக ஆக்கிவிடுவர். வெளிநாட்டு அறிஞர்கள் என்ற பெயரில் இந்துமத நூல்களை இழித்துரைக்கும் மக்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். இந்து மத நூல்களில் எவ்வளவு நல்ல கருத்து இருந்தாலும் அதைத் திரித்தும் கரித்தும் மறித்தும் சிரித்தும் பழித்தும் பேசுவர்.

பாம்புண்ட பால் எல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு தண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளியாம் உய்ர்ந்தார் கண் ஞானம் அதுபோற்

களியாங் கடையார் மாட்டு (அறநெறிச்சாரம்)

ஒரு குட்டிக் கதை

துரியோதனன், தர்மன் (யுதிஷ்டிரன்) ஆகிய இருவரும் கண்ணனிடம் சென்றனர். உலகிலேயே மிகக் கெட்டவனையும், மிக நல்லவனையும் கண்டுபிடித்து வாருங்கள் என்கிறான் கண்ணன் – இருவரும் சென்றனர். உலகில் ஒரு கெட்டவர் கூட கண்ணுக்குத் தெரியவில்லையே என்று திரும்பி வந்து விட்டான் தர்மன். கொஞ்ச நேரம் கழித்து துரியோதனனும் வந்தான். உலகில் நல்லோரே இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்றான். வெளிநாட்டில் இருந்து இந்து மதத்தைக் குறை கூறி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் அறிஞர்கள் – துரியோதனனின் தம்பிகள்!!

Snake-5_1421019i

குன்றின் மேல் இட்ட விளக்கு

கன்றி முதிர்ந்த கழியப் பன்னாள் செயினும்

ஒன்றும் சிறியார் கண் என்றானும் தோன்றாதாம்;

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு  (பழமொழி)

கீழோர்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்குப் புதிய கெட்ட பெயர் என்று ஒன்று வராது. ஆனால் மேன் மக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் உலகமே அதைப் பற்றிப் பேசி இகழும். அது மலையின் மீது வைத்த விளக்கிற்குச் சமம். உலகமே அதைப் பார்க்கமுடியும்! ஆகையால் அவர்கள் மாசு மருவற்ற தூய வாழ்க்கை வாழ வேண்டும். எத்தனையோ சாமியார்கள் பற்றி பலவகையான செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் அந்த ஒரு கெட்ட செய்தி அவர்களை அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது.

light house

சங்க காலத்தில் வாழ்ந்த கபிலன் என்ற பார்ப்பனப் புலவனை ஐந்து சங்கப் புலவர்கள் பாராட்டுகின்றனர். ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று. மூவேந்தர்களுக்கு உலகமே பயந்து நின்றது — ஆனால் கபிலன் பயப்படவில்லை! அவர்களை எள்ளி நகை ஆடுகிறார். இதோ பார் பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டான். நேரே வந்து அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான் என்கிறார். ஆயினும் மூவேந்தர்களும் அவனை வஞ்சனையால் கொன்று விடுகின்றனர். புலன் அழுக்கற்று இருந்ததால் யாருக்கும் அஞ்சாத துணிவு சாணக்கியனுக்கும் கபிலனுக்கும் இருந்தது!

மண் குடமும் பொன் குடமும்

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று

அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் – சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால் – அவ்வையின் வாக்குண்டாம்

மண் குடம் உடைந்தால் குப்பைத் தொட்டியில் போடுவர். பொன் குடம் உடைந்தாலோ தங்கத்தை உருக்கி அழகான புதிய பொன் குடம் செய்து விடுவர். பெரியோர்களுக்கு, அவர்களுடைய முன்வினைப் பயனால் வறுமையோ, நோயோ வந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. மென்மேலும் புகழ் கூடும். அவர்கள் எப்போதும் மேலோர்களே என்கிறார் அவ்வையார். ரமண மகரிஷிக்கும், ராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் புற்று நோய் வந்தது. அவர்கள் மனம் கஷ்டப்படவும் இல்லை. அவர்கள் புஅழ் குன்றவும் இல்லை. பாரதியார் வறுமையில் வாடினார். ஆனால் சிறுமை என்னும் செயல்களில் இறங்கவில்லை. இன்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் என்ற பெயரே எஞ்சி நிற்கிறது.

தமிழ்ப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவோம். எளிய நடை! அரிய கருத்து! அழகான உவமை! தமிழ் ஒரு உலக மகா பொக்கிஷம்!!!

வாழ்க மேன்மக்கள்  வளர்க தமிழ்!!

contact swami_48@yahoo.com