நாடகமே உலகம்: அமீ யந்த்ரம், துமீ யந்த்ரீ (Post No.3607)

Research article written by London swaminathan

 

Date: 5 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  9-09 am

 

Post No. 3607

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகம் நிலையற்றது; நம் வாழ்வும் நிலையற்றது. நமக்கு வரும் சுக போகங்களும் நிலையற்றன. இவை அனைத்தும் நாம் நாடகத்தில் பல வேடங்களைப் போட்டுவிட்டு வேடம் கலைந்தபின் உண்மை நிலையை உணருவதற்குச் சமம் என்பதைப் பல்வேறு கவிஞர்களும் பாடி வைத்துள்ளனர்.

 

கீதையில் கண்ணன்

 

 

கீதையில் கண்ணன் கூறுகிறான் (18-61):இயந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட பொம்மைகள் போல எல்லாப் பிராணிகளையும் கடவுள் ஆட்டிவைக்கிறான்.

 

ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹ்ருத்தேசேஅர்ஜுன திஷ்டதி

ப்ராமயன் ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா (18-61)

 

பொருள்:-

அர்ஜுனா! தேகமாகிய இயந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட பொம்மைகள் போன்ற எல்லாப் பிராணிகளையும் மாயையயினால் ஆட்டிவைத்துக்கொண்டு ஈச்வரன் எல்லாப் பிராணிகளின் இருதயத்துள்ளும் நிற்கின்றான்.

 

இங்கே இயந்திர பொம்மைகள் என்பது நாடகத்தில் அல்லது பொம்ம லாட்டத்தில் பயன்படுத்தும் பொம்மைகள் ஆகும்

ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் உடலைச் சுட்டிக்காட்டி, வங்காளி மொழியில்,

அமீ யந்த்ரம், துமீ யந்த்ரீ என்பார். இதன் அர்த்தம் நான் யந்திரம்,  நீ/கடவுள் யந்த்ரீ.

 

 

புறநானூற்றில் நாடகம்

 

இதையே முதுகண்ணன் சாத்தனாரும் கூறுகிறார்: விழாவிலே ஆடும் கூத்தரைப் போல வகை வகையாக ஆடிக் கழிவதுதான் இவ்வுலக வாழ்வு.

 

.

கோடியர் நீர்மை போல முறை முறை

ஆடுநர் கழியும் இவ்வுலகத்து, கூடிய

நகைப்புறன் ஆக நின் சுற்றம்!

–(புறம் 29, முதுகண்ணன் சாத்தனார்)

 

திருவள்ளுவர்

 

திருவள்ளுவர் குறள்களிலும் இக்கருத்தை எடுத்தாளுகிறார்:-

கூத்தாட்டு அவைக்களத்தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அது விளிந்தற்று (332)

 

பொருள்:- கூத்தாடும் அரங்கில் (நாடக அரங்கில்) மக்கள் சிறிது சிறிதாக வருவது போல செல்வம் சிறுகச் சிறுக சேரும். நாடகம் முடிந்த பின்னர் எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியே போவது போல செல்வமும் போய்விடும்.

காமத்துப் பாலிலும் திருவள்ளுவர் பொம்மலாட்டத்தைக் குறிப்பிடுகிறார்.

நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி யற்று (1020)

 

நாணம் மனத்திலே இல்லாதவர், உலகத்தில் செயல்படுவது, மரத்தாலான பொம்மைகளை கயிற்றினால் கட்டி இயக்கி உயிருள்ளது போலக் காட்டி மக்களை மயக்குவதற்கு சமம்.

 

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந்தற்று (1058)

 

குளிர்ந்த நீரால் சூழப்பட்ட இந்தப் பெரிய உலகில், பிச்சை எடுப்போர் இல்லாமற் போனால், உலகம் பொம்மலாட்டப் பொம்மைகள் வந்து போவதைப் போல, உணர்ச்சியற்ற மக்களைக் கொண்டதாக இருந்திருக்கும்.

 

திருவாசகம்

 

திருவாசகம், திருக்கோவையார் நூல்களைத் தந்த மாணிக்க வாசகரும் நாடக நடிப்பு பற்றிப் பாடுகிறார்.

திருவாசகம், ஆனந்த மாலையில்,

 

சீலமின்றி நோன்பின்றிச்

செறிவேயின்றி அறிவின்றித்

தோலின் பாவைக்கூத்தாட்டாய்ச்

சுழன்று விழுந்து கிடப்பேனை

மாலும் காட்டி வழிகாட்டி

—–

-பாடல் 643

 

தோல் பாவை கூத்தாடுவதைப்போல இன்ப துன்பங்களில் சுழன்று மயங்கி விழுந்து கிடப்பதைப்போல உள்ளேன்- என்கிறார்.

 

 

திருச்சதகத்தில் (பாடல் 11)

நாடகத்தால் உன்னடியார்

போல் நடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

—–

 

உன் மெய்யடியார்களைப் போலவே நடித்து நானும், முக்தி உலகில் புக விரைகின்றேன் என்பார்.

 

திருவாசகம், திருச்சதகம் பாடல் 11-ல்

 

கழுதொடு காட்டிடை நாடக

மாடிக் கதியிலியாய்

 

என்ற இடத்தில் சிவபெருமான், சுடுகாட்டில் பேயோடு ஆடும் நாடகக் கூத்தை வருணிக்கிறார்.

 

அக்காலத்தில் தோல் பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நாடகம் முதலியன எல்லாம் ஊர்தோறும் விழாக்கள் தோறும் நடந்துவந்தன.

 

ஆதிசங்கரர்

 

ஆதிசங்கரர், விவேக சூடாமணியிலும் இந்த உவமையைப் பயன்படுத்துகிறார்:

 

யத் சத்யபூதம் நிஜரூபமாத்யம்

சித்தத்வயானந்த ரூபமக்ரியம்

ததேத்ய மித்யாவபுருத்ஸ்ருஜேத

சைலூஷவத்வேஷமுபாத்தமாத்மன: (292)

 

பொருள்:-  ஒரு நடிகன் எப்படி தனது வேஷத்தைக் கலைத்தபின்னர், தன் உண்மை சொரூபத்தை உணர்கிறானோ, அது போல நாமும் நம்முடைய உண்மை சொரூபத்தை உணர வேண்டும்; உடல் என்பது நாமல்ல என்பதை உணர வேண்டும். எது தனக்குவமை இல்லாததோ, எது ரூபம், செயல்களுக்கு அப்பாற்பட்டதோ, சத்யமோ, ஞானமோ ஆனந்தமோ அதை அடைய வேண்டும்..

கீதை முதல் திருக்குறள் வரை கூத்து, பொம்மலாட்டம், நாடகம் முதலிய எடுத்துகாட்டுகள் வருவது அக்காலத்தில் இக்கலைகள் எவ்வளவு உன்னத நிலையில் இருந்தன என்பதை அறிய உதவுகிறது.

 

அது மட்டுமல்ல. இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு, ஒரே உவமை 3000 ஆண்டுகளுக்கும் மேலான கால எல்லைக்குள் வழங்கிவந்ததையும் நிரூபிக்கிறது.

 

தம்மபதம்

தம்மபதம் (147) என்னும் நூலில் புத்தர் கூறுகிறார்:

இந்த உடலைப் பாருங்கள். பொம்மலாட்டப் பொம்மை உறுப்பு, உறுப்பாக சேர்த்துக் கட்டப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது போல இருக்கிறது. சில நேரங்களில் நோய்வாய்ப்படுகிறது. நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும்.

 

 

Shakespeare

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில நாடகாசிரியன் ஷேக்ஸ்பியரும் இதைப் பயன்படுத்தியுள்ளார்.

நாடகமே உலகம் என்பதை As You Like It நாடகத்தில் கூறுகிறார்:–

 

All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first, the infant,
Mewling and puking in the nurse’s arms.
Then the whining schoolboy, with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress’ eyebrow. Then a soldier,
Full of strange oaths and bearded like the pard,
Jealous in honor, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon’s mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slippered pantaloon,
With spectacles on nose and pouch on side;
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank, and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.

நாடகமே உலகம் (also Posted on March 30, 2012 in brief)

 

–subham–