
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 September 2018
Time uploaded in London – 10-56 am (British Summer Time)
Post No. 5436
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரி நீதி சதகம்- 2
இந்தப்பகுதியில் நீதி சதகம் பாடல் 2, 3 ஆகியவைகளை பிற நூல்களுடன் ஒப்பிடுவோம்.
बोद्धारो मत्सरग्रस्ताः
प्रभवः स्मयदूषिताः ।
अबोधोपहताः चान्ये
जीर्णम् अङ्गे सुभाषितम् ॥ 1.2 ॥
போத்தாரோ மத்சரக்ரஸ்தாஹா ப்ரபவஹ ஸ்மயதூஷிதாஹா
அபோதோபஹதாஸ்சான்யே ஜீர்ணமங்கே சுபாஷிதம்- 1-2
படித்தவர்களுக்கோ பொறாமை அதிகம்;
பணக்காரர்களோ அகந்தை மிக்கவர்கள்;
ஆகையால் என் பொன்மொழிகள் பலமிழந்து விட்டன.
படித்தவர்களுக்கு கர்வமும் பொறாமையும் அதிகம்.
இதனால்தான் வள்ளுவர் சொன்னார்,
கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 130
கடும் சினத்தை விடுத்து, கற்பன கற்று அதற்குத் தக்க அடக்கமும் உடையவனை, அடைவதற்கு தரும தேவதை காத்திருப்பாளாம். அதாவது அவன் வழியில் நின்று கொண்டு காத்திருப்பாள் என்கிறார்.
‘வித்யா விநயன்ன சம்பதே’ என்று ஸம்ஸ்க்ருத்தில் சொல்லுவர். படித்தவர்களுக்கு அகந்தை வந்து விடும் என்பதால்தான் இதைச் சொல்லுகின்றனர்.
வள்ளுவர் வாழ்விலேயே இது நடந்தது. அவர் மீது பொறாமை கொண்டோர் அவருடைய திருக்குறளை ஏற்காமல் வாதாடியபோது சங்கப் பலகையானது பொறாமை கொண்ட புலவர் அத்தனை பேரையும் வெளியே தள்ளியது.
வில்லிப்புத்தூரார்க்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் வில்லிபுத்தூரார் தோற்றதை நாம் அறிவோம். அகந்தையாலும் பொறாமையாலும், போகும் வரும் புலவரை எல்லாம் வாதுக்கு அழைத்து அவர்கள் தோற்றுவிட்டதால் கையில் வைத்துள்ள குறடால் எதிரியின் காதுகளை அறுப்பது வில்லிப்புத்தூரார் வழக்கம். அருணகிரி நாதரிடமும் வாலாட்ட முயன்றபோது, அவருடைய கந்தரந்தாதிக்குப் பொருள் தெரியாமல் விழிக்கவே வில்லிப்புத்தூராரின் காதை அருணகிரி நாதர் அறுத்தார்.
இதே போல வட நாட்டிலும் பண்டி என்ற புலவர் செய்தார். மஹாபாரதத்தில் வன பர்வத்தில் ஒரு சம்பவம் உள்ளது. ஜனகரின் அவையிலிருந்த பண்டி என்ற புலவர் வாதத்தில் தோற்ற பிராஹ்மணர்களை எல்லாம் நதியில் தூக்கி எறிந்தார். கஹோதர் என்பவருக்கும் இந்த கதி ஏற்பட்டது. அவருடைய புதல்வன் அஷ்டாவக்ரர் வந்து, பண்டியை வாதத்தில் தோற்கடித்து நதியில் வீசி எறிந்தார். படித்தவர்களின் பொறாமை பற்றி நமது நூல்களில் இது போலப் பல கதைகள் உண்டு.
பணக்காரர்களின் அகந்தை பற்றி பல கதைகள் உண்டு.
இதனால்தான் செல்வந்தர்களுக்கு அடக்கம் அவஸியம் என்று வள்ளுவர் மொழிந்தார்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 125
பணிவும், அடக்கமும் எல்லோருக்கும் இருக்க வேண்டும்தான்; ஆயினும் பணம் படைத்தவர்கள் அகந்தையின்றி இருந்தால், அவருக்குக் கூடுதல் செல்வம் வந்தது போல ஆகும் என்பார் வள்ளுவர்.
xxxx

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கிறார்:-
பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.
ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்க்த் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.
படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,
‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேலும் சொல்கிறார்:-
பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் நல்ல உண்மையான மனிதன். பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்
ஆக பணத்துக்கு அடிமையானவன் மிருகம்; பணம், ஒருவனுக்கு அடிமையாகிவிட்டால் அவன் நல்ல மனிதன்.
அந்தக் காலத்தில் வேதத்தைக் கற்கச் சென்ற மாணவர்களுக்கு மாடு மேய்த்தல், பிச்சை எடுத்தல்,குருவுக்கு துணி தோய்த்துப் போடல், கொட்டில்களில் உள்ள மாடுகளைக் கவனித்து கொட்டிலை சுத்தமாக வைத்தல், குரு உறங்கும் போது விசிறி வீசல், மிகவும் தஒண்டுக் கிழவனாக குரு இருந்தால் கை, கால் பிடித்து விடல் போன்ற பல செயல் முறைப் பயிற்சிகளால் அடக்கத்தைப் போதித்து, அகந்தையைக் களைந்தெடுத்து, மாணவனைப் பக்குவபடுத்தி கல்வி கற்பித்தது பயனளித்தது என்பதை உபநிஷத்துக்களிலிருந்து அறிகிறோம்.
பணமும் பதவியும் வந்த பின்னர் ஆட்டம் போட்ட துருபதன் போன்ற மாணவர்களை மன்னன் ஆனபிறகு, துரோணர் தண்டித்த கதையை நாம் அறிவோம். துரோணரும் துருபதனும் அக்னிவேஷ் என்ற ரிஷியின் மாணவர்கள். படிப்பு முடிந்த பின்னர் துரோணர் ஏழ்மையில் வாடினார். துருபதனோ பஞ்சால நாட்டின் மன்னன் ஆனான். துரோணர் அவனிடம் உதவி நாடிச் சென்ற போது அவரை உதாசீனப் படுத்தினான். அவமானம் தாங்காத துரோணர் வாய்ப்பு கிடைத்த போது அவனுடைய அகந்தைக்குப் பாடம் கற்பித்தார். பஞ்ச பாண்டவர்கள், வில்வித்தை கற்று முடிந்தவுடன் துரோணரிடம் என்ன குருதட்சிணை வேண்டுமென்று கேட்டனர். உடனே துரோணர், தன்னை அவமத்தித்த துருபதனை இழுத்துவரச் சொன்னவுடன் அதை அர்ஜுனன் செய்து முடித்தான். தோற்றுப்ப்போன துருபதன், பாதி ராஜ்யத்தைத் துரோணருக்கு அளிக்க ஒப்புக் கொண்டவுடன் அவன் விடுதலை ஆனான்.
XXX
अज्ञः सुखम् आराध्यः
सुखतरम् आराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं
ब्रह्मापि तं नरं न रञ्जयति ॥ 1.3 ॥
அக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ
ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 2-3
அறியாதவனுக்குச் சொல்லிதருவது எளிது;
புத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;
கொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது.
An ancient saying from the Middle East says:
He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா- என்பது தமிழ்ப் பழமொழி. அதாவது அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதிடுவர். எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ அதைப் போல அவர்கலைத் திருத்த முடியாது. இதையெல்லாம் கருதிதான் ஒரு அராபிய பழமொழியும் சொல்கிறது.
He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.
எவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியவில்லையோ அவன் முட்டாள்; அவனை ஒதுக்கி விடு
எவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரிந்திருக்கிறதோ அவன் எளியவன்; அவனுக்கு சொல்லிக்கொடு.
எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ ஆனால் அவனுக்கு தான் அறிந்தவன் என்பது தெரியாமல் இருக்கிறானே அவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பு.
எவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ அவனும் தனக்கு எல்லாம் தெரியும் என்று அறிந்திருக்கிறானோ அவன் புத்திசாலி; அவனைப் பின்பற்று.
ஆக முட்டாள்களுக்கு உபதேசம் செய்வது வீண்; அவர்களாக அடிபட்டு, அடிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்
–சுபம்–