தமிழ் இலக்கியத்தில் அதிசய உத்தர குரு!!

map_mountains_central_asia_small

One of the probable location for Uttarakuru

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:– 1137; தேதி 29 ஜூன் 2014

(இக்கட்டுரை என்னால் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டது)

உத்தரகுரு பற்றி வேதகாலம் முதல் சங்க காலம் வரை உள்ள கருத்துக்கள் மிகவும் சுவையானவை. சர் தாமஸ் மூர் (1516) என்பவர் எழுதிய ‘உடோபியா’ என்ற கற்பனை உலகம் போன்றது இதுவா? அல்லது உண்மையிலேயே ஒருகாலத்தில் இப்படி இருந்ததா என்பது பலருடைய கேள்வி. வேதகாலத்தில் இப்படி உண்மையில் ஒரு இடம் இருந்தது உண்மையே.

வேதத்தில் காணப்படும் எல்லா விஷயங்களையும் வெளிநாட்டினர் கூட உண்மை என்றே நம்பி அதன் அடிப்படையிலேயே பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருவதே இதற்குச் சான்று பகரும்.

சிலப்பதிகாரம் (2-10)
முதலில் தமிழில் உள்ள சில குறிப்புகளைக் காண்போம்:-
தமிழர்களின் கலைக்களஞ்சியமான “நெஞ்சை அள்ளும்” சிலப்பதிகரத்தில் மனையறம்படுத்த காதையில் பூம்புகார் நகரத்தின் செல்வ வளத்தினை உத்தரகுருவுக்கு ஒப்பிடுகிறார் இளங்கோ அடிகள்.

“அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தரகுருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும்
மயன் வித்தித்தன்ன மணிக்கால் அமளிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி”—

வாழ்க்கையில் பெரும் தவம் செய்தவர்கள் அவர்களின் தவ வலிமையால் உத்தரகுரு என்னும் இடத்தில் வசிப்பர் (பிறப்பர்). அந்த உத்தரகுரு போலத் தோன்றிய பூம்புகாரில் கண்ணகியும் கோவலனும் வாழ்ந்தனர் என்கிறார் இளங்கோ. இதற்கு முந்திய வரிகளில் பூம்புகாரின் செல்வ வளம் வருணி க்கப்படுகிறது. அரசர்களும் விரும்பும் செல்வ வளம்— கடல் வழியாகவும் தரை வழியாகவும் குவிந்த புதிய பொருள்கள்— பண்பு குறையாத உயர்குல மக்கள்— ஏழடுக்கு உடைய மாடிக்கட்டிடம் என்று வருணிக்கிறார் அடிகள்.

பதிற்றுப்பத்து (9-14)
இந்த வருணனை உத்தரகுரு பற்றி நமக்கு ஓரளவுக்கு சித்திரம் கொடுக்கிறது. இதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த பதிற்றுப்பத்தில்

நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுல வாழ்நரின் பெரிதமர்ந்து அல்கலும்
இன்னனகை மேய பல்லுறை பெறுபகொல் — (ஏழாம் பத்து, கபிலர்)

பொருள்:– கள்ளுக்கடைகளில் கொடிகள் பறந்தன. பகை மன்னர்களின் யானைகளின் தந்தங்களை ஒடித்து கள்ளுக் கடைகளில் கொடுத்து மக்கள், ‘’கள்’’ வாங்கிச் சாப்பிட்டனர். அவர்களுடைய பயமே இல்லாத இன்ப வாழ்வு உத்தரகுரு (வடபுல வாழ்நர்) மக்கள் வாழ்க்கை போல இருந்தது என்று கபிலர் பாடுகிறார். பழைய உரையாசிரியர் இதை போகபூமியாகிய உத்தரகுரு என்பர்.

stairway-to-heaven

வேதத்தில் கூறுவதைச் சுருக்கமாகக் காண்போம்:
ஐதரேய பிராமணத்தில் (8-14), இமயமலைக்கு அப்பால் ஓரிடத்தில் உள்ள இடம் — (பரேன ஹிமவந்தம்) –என்று சொல்லப்பட்டுள்ளது. வாசிஷ்ட சாதஹவ்யா (8-23) என்பவர் இதை கடவுள் நாடு (தேவ க்ஷேத்ர) என்று அழைக்கிறார். ஜானம்தபி அத்யராதி என்பவர் அதை வெல்ல விரும்புவதாகவும் வேத இலக்கியம் கூறுவதால் உண்மையில் இப்படி ஒரு நாடு இருந்தது என்பது உறுதியாகிறது. வடபுல வாழ் ‘குரு’ இன மக்கள் கஷ்மீருக்கு குடியேறி பின்னர் குருக்ஷேத்ர பகுதிக்கு வந்ததாக சிம்மர் என்பவர் கூறுகிறார். இதிலிருந்து தழைத்ததே கௌரவ- பாண்டவ குரு குலம்.

மஹாபாரத சபா பர்வம்
அர்ஜுனனுக்கு உள்ள முக்கியமான பத்து பெயர்களில் ஒன்று தனஞ்செயன். உத்தர குரு வரை சென்று தனத்தை வென்று (ஜயித்து) வந்ததால் அவன் தனஞ்செயன் என்று அழைக்கப்பட்டான். சபாபர்வத்தில் யுதிஷ்டிர (தர்மர்) மஹாராஜாவுக்கு ராஜசூய யாகம் செய்து முடிசூட்டும் வைபவம் வருகிறது. ஒவ்வொரு சஹோதரரும் பூமியின் ஒருபகுதியை வெல்லச் சென்றனர். வட திசை நோக்கிச் சென்ற அர்ஜுனனை உத்தரகுரு வாசலில் நிறுத்தி ‘’இது மனிதர் புகமுடியாத இடம். அப்படியே புகுந்தாலும் அவர்கள் கண்களுக்கு எதுவும் புலப்பாடாது’’ என்கின்றனர். உடனே அர்ஜுனன் தர்மரின் ஆளுமையை ஏற்று அவருக்குக் கப்பம் செலுத்தினால் திரும்பிப் போவதகக் கூறுகிறான். அவர்களும் தெய்வீக அணிகலன்கள், ஆடைகள், தோல் முதலியன தந்து அனுப்புகின்றனர்.

Utopia

இதுதவிர ஆதிபர்வத்திலும் உத்தரகுரு வருகிறது. ராமாயணத்தில் வால்மீகி முனிவரும் இது பற்றிப் பேசுகிறார். ஆக இது ஒரு இன்ப பூமி, போக பூமி,, செல்வ வளம் கொழிக்கும் பூமி, ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக பாலியல் உறவு கொள்ளும் சுகபோக பூமி, தவ சீலர்கள் வசிக்கும் பூமி, சாதாரண மக்கள் புக முடியாத பூமி என்ற பல அரிய ஆச்சர்யமான தகல்கள் கிடைக்கின்றன. இதைப் பார்த்துதான் பிளாட்டோவின் ‘ரிபப்ளிக்’, தாம்ஸ்மூரின் ‘உடோபியா’ ஆகிய நூல்கள் எழுந்தனவோ என்று வியப்போரும் உண்டு!!

உத்தரகுரு பற்றி கிரேக்க ஆசிரியர் அமோதேயஸ் ஒரு புத்தகமே எழுதியதாக ப்ளினி சொல்கிறார். அது கிடைக்கவில்லை. டாலமியும் இந்த தேசத்தைக் குறித்துள்ளார்.

புத்த, ஜைன மத நூல்களில் பூகோள வர்ணனைப் பகுதிகளில் உத்தர குரு வடக்கில் உள்ளதேசமாகக் குறிப்பிடப்படுகிறது. பலரும் இதை இந்துகுஷ், பாமீர் பீடபூமியில் இருந்த இடம் என்றே கருதினர். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருந்தது என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.

நாம் புதிய உத்தரகுருவை சமைப்போம் ‘நாமம் அறியா ஏம வாழ்க்கை” – வாழ்வோம்!!
–சுபம்–