கொள்ளுவன எது? தள்ளுவன எது? சங்கரர் பதில்

22. Shankaracharya VEDVYASA

Compiled by London Swaminathan.
Post No. 1133; Date: 27 June 2014

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்றழைக்கப்படும் ஆதி சங்கரரின் துதி பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். அதில் இதுவரை வெளியாகாத சில விஷயங்கள் இதோ:-

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா.

இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார்.

இதைப் படித்தால் என்ன கிடைக்கும் என்று முதல் பாட்டிலேயே கூறிவிடுகிறார். வாழ்க்கையில் நாம் எதிர் பார்க்கும் , மற்றும் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும், அதாவது தெரிந்த தெரியாத பலன்கள் கிடைக்கும்.

1. & 2. கொள்ளுவன எது? தள்ளுவன எது? என்பது கேள்வி.
ஒவ்வொரு பாட்டிலும் பல கேள்விகளும் அதற்கு ரத்தினச் சுருக்கமான பதில்களும் இருக்கும். இரண்டாவது பாட்டில் எதை எடுத்துக் கொள்ளவேண்டும்? என்று கேட்டதற்கு—- குரு வசனம், —-அதாவது குருவின் கட்டளை என்கிறார் சங்கரர்.

நாம் முதலில் வகுப்புக்குள் நுழைந்தவுடனேயே சொல்ல வெண்டிய ஸ்லோகம் “குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ”…………….. என்ற ஸ்லோகம் தான். எல்லோரும் அறிந்த ஸ்லோகம். குருவையே த்ரிமூர்த்திகளாக வணங்கும் ஸ்லோகம் அது. குரு என்பவர் ‘பிறவிப் பிணிக்கு மருந்து கொடுக்கும் டாக்டர்’ — என்று இன்னும் ஒரு ஸ்லோகமும் ( குரவே சர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்) உண்டு. ஆகையால் அவர் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.

எதை விட வேண்டும்? என்பது அடுத்த கேள்வி.. தகாத—செய்யக் கூடாத செயல்களை விட வேண்டும். பாவம் உண்டாக்காத செயல்களைச் செய்தால் இந்த ஜன்மத்திலேயே சுகங்களை அனுபவிப்பர்.

தடை செய்யப்பட்ட செயல்கள் என்ன என்பதை பஞ்ச மா பாதகங்கள் விளக்கும்:- கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல். சிறைச் சாலைக்குச் சென்றாலோ, பத்திரிகைகளில் வரும் குற்றச் செய்திகளை ஆராய்ந்தாலோ மேற்கூறிய ஐந்து வகைகளில் எல்லா குற்றவாளிகளையும் அடக்கிவிடலாம்.

(மூன்றாவது ஸ்லோக விளக்கம் 27-02-14 வெளியானது)

abhinava vidyatheerthar
Sri Abhinava Vidya Thirtha Swami, Sri Sringeri Shankaracharaya (1917–1989)

4.அறிஞர்கள் உடனே செய்யவேண்டிய செயல் என்ன?
பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதே முதல் கடமை.
வள்ளுவனும் இதையே சொல்கிறான்.:

கற்றதனால் ஆய பயன் என்? (குறள் 2)
கடவுளைத் தொழுவதே கல்வியின் பயன் என்பான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை புரியும்படியான உவமையுடன் சொல்வார்: ஒரு ஊருக்குப் போகும் யாத்ரீகன் முதலில் ஒரு நல்ல விடுதியைப் பார்த்து அறைகளை ஏற்பாடு செய்துவிட்ட பின்னர்தான் ஊர் சுற்றிப் பார்க்கப் போவான். இதே போல இந்த உலகில் வந்த நாம் முதலில் இறைவனை உணர்ந்துவிட்டுப் பின்னர் சுகங்களை அனுபவிக்கலாம் என்பார்.

5. விடுதலை என்ற மரத்துக்கு விதை எது?
சரியான அறிவு (ஞானம்), அதைச் செயலில் காட்டும் பயிற்சி என்பது சங்கரரின் பதில்.
அந்தக் காலத்தில் பெரியோர்களை மெத்தப் படித்தவர், வேத வித்து, கல்வியில் கரை கண்டவர் என்றெல்லாம் அறிமுகப் படுத்திவைப்பர். அதாவது ஒருவரைப் படித்தவர் என்று சொன்னால், அதை வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க சீலர் என்று பொருள். இந்தக் கால பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வரை யாரிடமும் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை. சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கிறது.

ஊருக்குதாண்டி உபதேசம் ,உனக்கில்லை என்ற பழமொழிக் கதையை நாம் அறிவோம். இப்பேற்பட்டவர்கள் யாரையும் முன்னேற்ற முடியாது.

லூயி பிஷர் என்பவர் காந்தி பற்றி எழுதிய கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்

He preached what he practised and practised what he preached. Had he lived two thousand years ago in India, they would have built him a temple for him by this time.

பொருள்:– “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான் மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு கோவிலே எழ்ப்பி இருப்பார்கள்” — என்று எழுதினார். ஆகையால் ஞானம், அதில் பயிற்சி இரண்டும் அவசியம்.

periyava rudraksha
Sri Chandra Sekarendra Sarasvati, Kanchi Sri Sankaracharya (1894–1994)

உண்மைதான்! மனிதனும் தெய்வமாகலாம் என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ள கொள்கை. தமிழ் ஹிந்து வள்ளுவன் இதை மிக அழகாகச் சொல்கிறான்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)

–சுபம்–

ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்

secrecy

ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்
By London swaminathan
Post No.843 Date 16th February 2014.

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் ப்ரஸ்னம் போல வினா–விடை பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். இதில் ஒரு கேள்வி—
ஒருவனை சாகும் வரை வாட்டிவதைப்பது எது? அம்பு போலப் பாய்ந்து நெஞ்சில் உறுத்துவது எது?
அதற்கு அவரே சொல்லும் பதில்: ஒருவன் ரகசியத்தில் செய்த பாவம்.

இது அருமையான கேள்வி, அருமையான பதில்! நல்ல உளவியல் (சைகாலஜி) தெரிந்த ஒருவர் எழுப்பி விடை கூறிய கேள்வி. இதையே தமிழ்ப் புலவன் திருவள்ளுவனும் கூறுவது இன்னும் வியப்புக்குரியது.

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும் (293)

பொருள்:– தன் மனதுக்கு பொய் என்று தெரிந்த பின்னரும், மற்றவருக்குத்தான் தெரியாதே என்று பொய் சொல்லக் கூடாது. அப்படிச் செய்தால் மனச் சாட்சியே ஒருவரை சுட்டுப் பொசுக்கும்.

அதாவது அது அவன் மனதை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும். இதைத்தான் மனச் சாட்சி உறுத்துகிறது என்பர்.

tent large

சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்திலும் “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்” என்று கற்பிக்கின்றனர்.

மனத்திலும் (உள்ளம்=உண்மை), வாயிலும் (வாய்=வாய்மை) ஒரே எண்ணம் இருக்குமானால் தானம் தவம் செய்வாரைவிட உயர்ந்தவர் ஆவர் என்று வள்ளுவன் கூறுவான் (295)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை (295)

அரிச்சந்திரன், ராமன், சத்ய காமன் ஜாபாலா, தர்மன் ஆகியோரின் கதைகள் இதற்கு உதாரணம்.

திருவள்ளுவர் அதிகாரம்தோறும் சம்ஸ்கிருத சொற்களை கூசாமல் பயன்படுத்துவார். இங்கே தானம், தவம் என்ற சொற்களை பயன்படுத்துதுகிறார். குறள் 19 லும் இதைக் காணலாம். ராமாயணத்திலும், மஹா பாரதத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களில் வரும் தானம், தவம் என்ற சொற்களை அவர் பயன்படுத்துவது வள்ளுவரும், சங்கரரும் ஒரே சிந்தனை உடைய இரண்டு ரிஷிகள் என்பதைக் காட்டும்.

குறுந்தொகையில் மனச் சாட்சி

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் (184) ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடிய பாடல் ஒன்று வருகிறது. அவன் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்றும் ‘பொய்யா நாவில் கபிலன்” என்றும் பலராலும் போற்றப்பட்ட கபிலரிடம் தமிழ் கற்றவன். அவனும் இதே கருத்தைக் கூறுகிறான்:
“ கடற்கரைச் சோலையில் வாழும் பரதவர் மகள் பேரழகி. மயில் போல் கூந்தல் உடையாள். மடப்பம் பொருந்திய மகள். அவளுடைய கண் வலையில் விழுந்தவர்கள் தப்ப முடியாது. நானும் அவள் கண் வலையில் சிக்கினேன் (மயங்கிவிட்டேன்). சான்றோரிடம் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வழக்கம் இருக்காது. ஆகையால் நான் உள்ளதைச் சொல்லிவிட்டேன்:
‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை’ —என்பான்.

behind-curtain

நற்றிணையில் வெள்ளைக்குடி நாகனாரும் (196)

‘அறிகரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே’ என்று நிலவைப் பார்த்து தலைவி பாடுகிறாள். “என் தலைவன் பற்றி அறிந்தும் சொல்லாமல் இருந்தால் நீ தேய்ந்து போவாய்” என்று சந்திரனைச் சபிக்கிறாள்.
கலித்தொகை, அறநெறிச்சாரம் ஆகிய நூல்களிலும் இதே போன்ற வரிகளைக் காணலாம்.
ராமலிங்க சுவாமிகளும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பது இதைத்தான்.

ஆதி சங்கரரின் வினா—விடை துதியில் இன்னும் இது போல நிறைய ரத்தினங்கள் உள்ளன. தனித்தனியே காண்போம்.

contact swami_48@yahoo.com
Photos are taken from different sites.Thanks.