உன்னம், புதா, உளில், குரண்டம், கிலுக்கம், சென்னம் குணாலம்—கம்பன் தரும் பறவை லிஸ்ட் (Post No.3783)

Written by London swaminathan

 

Date: 3 APRIL 2017

 

Time uploaded in London:- 6-01 am

 

Post No. 3783

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குப் போனான்; எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பெரிய கோட்டைச் சுவரைப் பார்த்தான், அகழியைப் பார்த்தான்; பொன் மயமான செல்வச் செழிப்புள்ள இலங்கையைக் கண்டான்; இதெல்லாம் நாம் பல முறை படித்த அல்லது சொற்பொழிவுகளில் செவிமடுத்த செய்திகளே. இதை மட்டும் கம்பனும் சொன்னால் அவனை நாம் மதிக்க மாட்டோம்; போகிறபோக்கில் அவன் சொல்லும் அறிவியல், உயிரியல், மானுடவியல், உளவியல், புவீஇ யல், புவிகர்ப்பவியல், சமயம், பண்பாடு, இசை, நடனம் என்று ஏராளமான செய்திகளையும் சேர்த்துச் சொல்லும் பாங்குதான் கம்பனைக் கொம்பனாக்குகிறது!

 

 

சோழ மன்னனிடம் கோபித்துக்கொண்டு “உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?” என்று சவால் விட்ட கொம்பன் அல்லவா அவன்!

 

இதோ பாருங்கள், இலங்கை ((நகர)) கோட்டையைச் சுற்றியுள்ள மூன்று அகழிகளில் அவன் கண்ட பறவைகளைப் போகிற போக்கில் அடுக்கி விடுகிறான். நீங்கள் கம்ப ராமாயண உரைகளைப் படித்தால் கூட இந்தப் பறவைகளை அடையாளம் சொல்ல முடியாது. ‘தமிழ் வாழ்க’ என்றெல்லாம் கூத்தாடுகிறோம்; கூச்சலிடு கிறோம்; ஆனால் இந்தப் பறவைகள் என்ன என்று ஸூவாலஜி (Zoology) ஆர்னிதாலஜி (Ornithology) படித்தவர்கள் கூட சொல்ல முடியாது. உண்மையில் தமிழை வளர்க்க விரும்புவோர் இவைகளை அறிவியல் முறையில் அணுகி கம்பராமாயணத்துக்கு ஒரு விஞ்ஞான   உரை எழுத வேண்டும்.

உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,

அன்மை, கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்

கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,

சென்னம், காகம், குணாலம் சிலம்புமே

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்;

“உன்னம் போன்ற பறவைகள், நாரைகள், மகன்றில்கள், குருகுகள், உள்ளான்கள், அன்னங்கள், நீர்க் கோழிகள், பெருநாரைகள், சக்கரவாகப் பறவைகள் கின்னரங்கள், கொக்குகள், கிலுக்கங்கள், சிச்சிலி என்னும் பறவைகள், மீன்கொத்திப் பறவைகள், நீர்ப்பருந்துகள், நீர்க்காகங்கள், குணாலங்கள் ஆகிய பல்வகைப் பறவைகள் அவ்வகழியில் ஒலித்துக் கொண்டிருந்தன”.

 

உன்னம் -அன்னப் பறவைகளில் “ஒருவகை”;

புதா- குருகு;

உளில் – உள்ளான்;

வண்டானம்- பெருநாரை;

ஆழிப்புள் – சக்கரவாகப் பறவை;

மகன்றில்- அன்றிலில் “ஒரு வகை”;

கின்னரம் – நீர் வாழ்ப் பறவைகளில் “ஒருவகை”; ஆந்தையையும் இச் சொல் குறிக்கும்;

கிலுக்கம் – நீர் வாழ்ப்பறவைகளில் “ஒருவகை”;

சென்னம் – நீர்ப்பருந்து;

சிரல் – மீன்குத்தி;

குணாலம்- நீர் வாழ்ப்பறவைகளில் “ஒருவகை”;

 

இவ்வாறு சொல்லி உரைகாரர்கள் மழுப்பி விடுகிறார்கள் ‘ஒரு வகை’,’ ஒரு வகை’ என்றே எழுதிக்கொண்டு போனால் அது என்ன என்று சொல்ல வேண்டாமா?

பைபிளில் உள்ள தாவரங்கள், மிருகங்கள் பற்றி எல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே படங்களுடன் புத்தகம் போட்டுவிட்டனர். நாமோ சங்க இலக்கியத்தில் வரும் தாவரங்கள், மிருகங்கள், அதே போல மற்ற இலக்கியங்களில் வரும் விஷயங்களுக்கு மழுப்பலாகவே உரை எழுதி வருகிறோம். கம்பனும் கதையை மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே. அகழியில் உள்ள இத்தனை வகை நீர்வாழ்ப் பறவைகளையும் எதற்குச் சொல்ல வேண்டும் ? அறிவியல் தமிழ் அழியாமல் பாதுகாக்கத்தானே அவன் இப்படி பட்டியல் போடுகிறான்.

 

இது போல அவன் சொல்லும் ஆயுத வகைகளை நாம் இனம் காண முடியவில்லை. முயன்று பார்த்தால்  —- தமிழ் அறிஞர்கள், விஞ்ஞானிகள் கூட்டு மாநாடு போட்டால்— இவைகளை தெள்ளிதின் விளக்கமுடியும்

(கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டிலுள்ள 99 தாவரங்களின் படங்கள், தாவரவியல் (botanical names) பெயர்களைக் கண்டேன்; அதில் சில பிழைகளும் குறைபாடுகளும் உள; ஆயினும் ஒரு சிலர் முயன்று அதைச் செய்திருப்பது பாராட்டுக்குறியது; தாவரவியலாளருடன் அமர்ந்தால் குறைகளை நீக்க முடியும்).

தமிழ் வாழ்க! கம்பன் புகழ் ஓங்குக!