அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்! (Post No.4067)

Written by S NAGARAJAN

 

Date: 10 July 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4067

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பிராத்தனை இரகசியம்

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்!

ச.நாகராஜன்

 

பிரார்த்தனையில் மகான்களும் ரிஷிகளும் வேண்டுகின்ற பான்மையே தனி. ஆகவே தான் அவர்களுடைய பிரார்த்தனையையே நாம் சொல்லி உய்ய வழி தேடுகிறோம். புதிதாகச் சொற்களைக் கோர்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

 

அருணகிரிநாதரின் திருப்புகழ் இந்த வகையில் ஒரு தனித் தன்மை கொண்டதாக இலங்குகிறது.

எடுத்துக்காட்டாக இரு இடங்களில் வரும் இரண்டிரண்டான பிரார்த்தனை வேண்டுகோளை இங்கு பார்க்கலாம்.

 

 “மதியால் வித்தகனாகி

மனதால் உத்தமனாகி” (கருவூரில் பாடியது – மதியால் வித்தகனாகி எனத் தொடங்கும் பாடல்)

 

இருக்க வரம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

மதியால் ஒருவன் வித்தகன். ஆனால் அவன் உத்தமன் இல்லை. மகா புத்திசாலித்தனத்தை ஊரை ஏய்ப்பதில் பயன்படுத்தி என்ன பிரயோஜனம்?

 

மனதால் ஒருவன் உத்தமன். ஆனால் சாமர்த்தியசாலி இல்லை. ஊரார் எல்லோரும் அவன் மேல் “குதிரை ஏற”த்தானே செய்வர்.

 

ஆகவே மனதால் உத்தமனாக இருக்கும் ஒருவன் மதியால் வித்தகனாக இருந்தால் தான் அவனும் செழிப்பான். ஊரும் செழிக்கும்.

 

அற்புதமான இந்த இரட்டை வேண்டுகோளை அருணகிரிநாதர் முன் வைக்கிறார்.

 

நானும் வாழ வேண்டும்; நான் சார்ந்திருக்கும்ச் சமுதாயமும் வாழ வேண்டும் என்ற அற்புதமான இந்தக் கொள்கையை என்ன ‘இஸம்’ என்று பிராண்ட் செய்வது.

 

கம்யூனிஸம். சோஷலிஸம் என்று பல இஸங்களைச் சொன்னாலும் அருணகிரிநாதரிஸம் முன்னால் எடுபடுமா, என்ன?

இன்னொரு இடத்தைப் பார்ப்போம்.

“அறிவால் அறிந்து உன்

இரு தாள் இறைஞ்சும்”

அடியார் இடைஞ்சல் களைவோனே

என இப்படி முருகனின் அருள் திறத்தைப் பாடுகிறார். (திருச்செந்தூரில் பாடியது – விறல்மாரனைந்து எனத் தொடங்கும் பாடல்)

 

அறிவால் அறிந்து முருகன் இருதாள் இறைஞ்சும் படியான வாழ்க்கை தர வரம் வேண்டுகிறார் அவர்.

 

ஒருவன் மிகப் பெரிய விஞ்ஞானி. அவன் அறிவால் ஆராயாத விஷயமே இல்லை. ஆனால் அவனுக்கு இறைவன் என்ற மஹாசக்தியின் மீது நம்பிக்கை இல்லை. அவன் இருந்து என்ன பிரயோஜனம். அவன் இருந்தும் இறந்தவனே!

 

 

இன்னொருவன் சதா இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நாள் நிச்சயம் அவன் இறைவன் அருளால் உய்வைப் பெறுவான். ஆனால் மஹாசக்தியின் உண்மையை அவன் அறிந்து கொண்டால், அந்த அறிவின் அடிப்படையில் தன் பிரார்த்தனையை அவன் புரிந்தால் அவனுக்கு ‘இன்ஸ்டண்ட்  அருள்’ அல்லவா கிடைக்கும்?!

இதைத் தான் அருணகிரிநாதர் விரும்புகிறார்.

இறைவன் தந்த அறிவு அவனை அறிவதற்கே.

 

 

கற்றதனால் ஆய பயன் என்கொல்?

வாலறிவன் நற்றாள் தொழார் எனின் (வள்ளுவரின் குறள்)

 

 

இப்படி இரண்டிரண்டாக அவர் வேண்டுவதைத் திருப்புகழ் நெடுகக் காணலாம்.

 

ஆகவே தான் அந்த அருளாளரின் திருப்புகழைப் பாடினால் அனைத்தும் நமக்குச் சேரும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

 

மகாத்மா காந்திஜி கூட மிக மோசமான பாவங்களைப் பட்டியலிட்ட போது இப்படி இரு விஷயங்களை இணைத்தே பட்டியலிட்டார்.

அந்த ஏழு பாவங்கள்:

 

உழைக்காமல் வரும் ஊதியம்

Wealth without Work

மனசாட்சி இல்லாத இன்பம்

Pleasure without Conscience

ஒழுக்கம் இல்லாத அறிவு

Knowledge without Character

அறப்பண்பு இல்லாத வாணிபம்

Commerce without Morality

 

மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் Science without Humanity

தியாகம் இல்லாத மதம்

Religion without Sacrifice

கொள்கை இல்லாத அரசியல்

Politics without Principle

 

இந்த ஏழு பாவங்களை விலக்கிய சமுதாயம் மேன்மையுறும்.

 

பெரியோர்கள், அருளாளர்கள், மகான்களின் வாக்குகளில் எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது என்பதை எண்ணும் போது மனம் உவகையுறுகிறது.

அவர்கள் கூறிய தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தங்களே, வேத மந்திரங்களே, உபநிடதங்களே நமக்குப் போதும். புதிதாக ஒன்றையும் புனைந்து பிரார்த்தனை செய்ய அவசியமில்லை என்று ஆகிறது.

 

 

ஆயிரக்கணக்கான நாமாவளிகள், பாடல்கள், தோத்திரங்கள், மந்திரங்கள் உள்ளன.

நமக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அறிவையும் பக்தியையும் இணைத்தவர்களாக ஆவோம்!

அவர்களின் பிரார்த்தனைகளை வாயால் ஓதி மனதால் இருத்தி முன்னேறுவோமாக!

***