மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

killing 3

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1285; தேதி: 13 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது மூன்றாவது கட்டுரை

மாமன்னன் அசோகன் பற்றி மூன்று அதிசய விஷயங்கள், இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூலான மஹாவம்சத்தில் உள்ளன.

1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் அப்பாவைக் கொன்றுதான் பதவிக்கு வந்தனர்.

2) தர்ம அசோகனுக்கு முன்னர் கறுப்பு அசோகன் என்பவன் ஒருவன் ஆண்டான். ((வெள்ளைக்காரகள் எழுதிய இந்திய வரலாற்றில் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்)).

3) அசோகனின் மனமாற்றத்துக்கு காரணமான “கலிங்கப் போர்” பற்றி மஹாவம்சத்தில் எதுவுமே சொல்லவில்லை!!
150 ஆண்டுகளுக்கு உன் வெள்ளைக்காரர்கள் எழுதிய வரலாற்றைதான் இன்னும் நம்மவர்கள் படித்துவருகிறார்கள். அவர்கள் இந்துமத புராண அரசர் பட்டியலை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புத்தமத செய்திகள மட்டும் எடுத்துகொண்டனர். புத்த மதம் இந்து மதத்தின் எதிரி என்று எண்ணி ஏமாந்து அதற்கு மட்டும் ஆதரவு கொடுத்தனர். சமண மதம் பல நாடுகளுக்குப் பரவாததால் அந்த மதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

இந்துமத புராண அரசர் பட்டியலை ஏற்றால் மனித குலம் கி.மு.4004ல் தோன்றியது என்ற பைபிள் பிரசாரகர்களின் கூற்று எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் அது மட்டும் அல்ல. கலீலியோ, கோபர்நிகஸ் போல உயிரையோ கண்களையோ இழக்க நேரிடும். இதற்கெல்லாம் பயந்த ஆங்கில, ஜெர்மானிய அறிஞர்கள் (?? !!) இந்து புராண அரசர் வரிசையை அப்படியே குப்பையில் வீசிவிட்டனர். இதனால் கறுப்பு அசோகன் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

புராணங்களில் முன்னுக்குப் பின்முரணான அரசர் பட்டியல் இருப்பது உண்மையே. ஆனால் சமண, பௌத்த, கிறிஸ்தவ நூல்கள் எல்லாவற்றிலும் முரணான விஷயங்கள் உண்டு. நூற்றுக்கணக்கன பைபிள்கள் முரண்பட்டு நிற்கவே அத்தனையையும் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான் டி நோபிளில் தீக்கிரையாக்கிவிட்டு ஒரே பைபிள் வைத்துக் கொண்டனர். அதிலும் முரண்பாடு உண்டு, யூதமத கதைகளுக்கும் கிறிஸ்தவ மதக் கதைகளுக்கும் இடையேயும் ஒரே விஷயம் பற்றி முரண்பாடு உண்டு என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர்.

மஹாவம்ச படுகொலைப் பட்டியலைக் கொடுப்பதற்குக் காரணம் இது பற்றி இந்தியர்கள் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும் என்பதே—அதாவது இந்தியா பற்றி இதில் கூறப்பட்ட விஷயங்களின் உண்மையைக் கண்டறிதல் நம் கடமை. வெள்ளைக்காரன் எழுதியவற்றை இன்றும் அப்படியே பாடப்புத்தகத்தில் வைத்திருப்பது மடமை!!!

படுகொலைப் பட்டியல்:—

1)அத்தியாயம் 4:
பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அஜாத சத்ருவின் மகனான உதயபட்டகன் அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
உதயபட்டகன் மகனான அநிருத்தன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அநிருத்தன் மகனான முண்டா, அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.
முண்டாவின் மகனான நாகதாசகன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.

மக்களுக்கு ஒரே கோபம், “இதென்னடா அப்பனைக் கொல்லும் வம்சமாக இருக்கிறதே!” — என்று ஆத்திரம் கொண்டு நாகதாசகனை நாடு கடத்தி விட்டு மந்திரி சிசுபாலனை அரசன் ஆக்கினர்.
அவனுடைய மகன் காலாசோகன் (கறுப்பு அசோகன்) 28 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்தான். அவன் தான் புத்த மதத்தின் இரண்டாவது மாநாட்டை நடத்தினான்.

அப்போது புத்தர் சமாதி அடைந்து (பரி நிர்வாணம் எய்தி) நூறு ஆண்டுகள் ஆயிற்று. ஆளாளுக்கு “புத்தர் சொன்னது இது — புத்தர் சொன்னது அது” என்று பிரசாரம் செய்யத் துவங்கினர் (அதாவது புத்த மதத்துக்குள் பிளவுகள் தோன்றத் துவங்கின).

killing 2

2) அத்தியாயம் 5:
பிந்துசாரன் மகனான் ‘’தர்ம’’ அசோகன், அவனது சகோதர்கள் 99 பேரையும் கொன்றுவிட்டு ஜம்பூத்வீபம் முழுதையும் அரசாளத் துவங்கினான். இவர்கள் மாற்றாந் தாய்களுக்குப் பிறந்தவர்கள்.
(( புத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமான அவனது கலிங்கப் போர் பற்றி மகாவம்சம் எதையும் சொல்லவில்லை!! ))

3) அத்தியாயம் 7:
விஜயனின் முதல் மனைவி குவன்னா ஒரு யக்ஷிணி வம்சப் பெண். மதுரையில் இருந்து பாண்டிய நாட்டுத் தமிழ் பெண் வந்துவிட்டதால் அவரை ராணியாக்கப் போகிறேன், தயவுசெய்து நீ உன் இரண்டு மகன்களுடன் ஓடிப்போய்விடு என்று கெஞ்சுகிறான். அவள் முதலில் தயங்கிவிட்டு வெளியே போனவுடன் யக்ஷர்களில் ஒருவன் ஒரே குத்தில் அவளைக் கொலை செய்கிறான். இரண்டு பிள்ளைகளும் வெளியே நின்றதால் தப்பித்துவிடுகின்றனர்.

4) அத்தியாயம் 9:
இளவரசர்கள், காலவேலன் என்ற அடிமையையும், சித்தன் என்ற இடையனையும் கொலை செய்கின்றனர்.

5) அத்தியாயம் 10:
இளவரசர்கள் எட்டு மாமன்மார்களையும் எதிரிப் படைகளையும் கொன்று குவித்து எலும்புக்கூடு மலையை உருவாக்குகின்றனர்.

killing 1

தமிழர் படுகொலைகள்

6)அத்தியாயம் 33:
தளபதி கம்மஹாரதகன், மன்னன் கல்லாட நாகனை தலைநகரிலேயே வெற்றிகொண்டான். அந்த துரோகியை அரசனுடைய தம்பியான காமனி கொன்றான்.
பாஹியா என்ற தமிழன் புலஹதா என்ற தமிழனைக் கொன்று 2 வருடம் ஆண்டான்.
படைத்தலைவன் பணயமாறன், பாஹியாவைக் கொன்று 7 வருடம் ஆண்டான்.
பணயமாறனை பிழையாமாறன் கொன்று 7 மாதம் ஆண்டான்.
தாதிகன் என்ற தமிழன் பிழையாமாறனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
இந்த ஐந்து தமிழர்களும் ஆண்ட காலம் 14 வருடம், 7 மாதங்கள்.

தனசிவன் என்பவனை அரசன், வில் எய்து கொன்றான்
கபதீசன் என்ற மந்திரி மரியாதையாக நடந்துகொள்ளாததால் அவனை அரசன் கொன்றான்

7) அத்தியாயம் 34:

ராணி அனுலா , வடுகன் என்ற தமிழ்த் தச்சனைத் திருமணம் செய்துகொள்கிறாள். விறகுவெட்டி மீது காதல் கொண்டு வடுகனை விஷம்வைத்துக் கொலை செய்கிறாள்.
அடுத்ததாக நிலீயன் என்ற பிராமணன் மீது காதல் கொண்டு விறகுவெட்டி திஸ்ஸனைத் தீர்த்துக் கட்டினாள்.
பின்னர் நிலீயனையும் விஷம் வைத்துக் கொண்ருவிட்டு தானே 4 மாதங்களுக்கு நாட்டை ஆள்கிறாள்.
அந்தக் காமாந்தகி அனுலாவை குடகன்ன திஸ்ஸா என்பவன் போரில் கொல்கிறான்.

8) அத்தியாயம் 35:
இலங்கைத்தீவு முழுதும் உயிர்க்கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். அவனை அவன் சகோதரன் கனிராஜனு திஸ்ஸ கொன்றுவிட்டு 3 வருடங்கள் ஆண்டான்!!
தீசவாபியில் நடந்த விழாவின்போது சந்தமுகசிவனைக் கொன்றுவிட்டு அவன் தம்பி யசாலக தீசன் 8 வருடங்கள் ஆண்டான்.
சுபா என்பவன் அரசன் போல நடிப்பது வழக்கம். அதை அரசனும் ரசித்து மகிழ்வான் அவன் ஒருநாள் அரசன் தலையைச் சீவுமாறு உத்தரவிட்டு தானே அரசாளத் துவங்கினான். விளையாட்டு வினை ஆயிற்று!!

வசபன் என்ற பெயர்கொண்டவன் அடுத்ததாக அரசாளுவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயருள்ள எல்லா இளைஞர்களையும் கொல்ல அரசன் உத்தரவிட்டான். அப்படியும் வசபன் என்பவன் அரசன் ஆகிவிடுகிறான்.

9) அத்தியாயம் 36:
குஜநாகன் தம்பி, குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு 2 வருடங்கள் ஆண்டான்.
அபயன் என்பவன் மலயத்தில் அரசனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
மூன்று லம்பகர்ணர்களில் ஒருவனான சங்கதீசன் விஜயகுமாரன் என்ற அரசனிடம் சேவகம் புரிந்து பின்னர் அவனைக் கொலை செய்கிறான். அவன் 4 வருடங்கள் ஆண்டான்.
அவனை மக்கள் விஷம் வைத்த நாவல் பழம் மூலம் கொலை செய்கின்றனர்.

ஜேததீசன் என்ற மன்னன் துரோகம் செய்த மந்திரிகளைத் தந்திரமாகக் கொல்கிறான். தந்தையின் சவ ஊர்வலத்தில் எல்லோரையும் வரவழைத்து சவம் அண்மனை வாசலைத் தாண்டியவுடன் கதவை மூடி அனைத்து அமைச்சர்களையும் தீர்த்துக்கட்டுகிறான். அவர்களின் உடல்களை கம்பத்தில் நட்டு வைக்கிறான்.

THAILAND-SOUTH-UNREST

10) அத்தியாயம் 37:
மகாவம்சம் படுகொலைகளுடன் துவங்கி படுகொலைகளுடன் முடிகிறது. மஹாவிகாரத்தை இடித்ததால் கோபம் கொண்ட ராணி ( மஹாசேனன் மனைவி ) தேரர் சங்கமித்ராவையும், அமைச்சர் சோனாவையும் ஒரு தொழிலாளி மூலம் படுகொலை செய்கிறாள்.

போரில் கொல்லப்படவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஆதிகாலம் முதல் போரில் கொல்வது அநியாயம் அல்ல, படுகொலை அல்ல என்று உலகம் ஒப்புக்கொள்கிறது. இன்றுவரை நீடிக்கும் சர்வதேச விதிமுறைகளும் நடைமுறைகளும் இதை ஏற்கின்றன.

அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் – பாரதியார்

–சுபம்–
Pictures are taken from different websites; not related to stories here;thanks.