செல்வம் செழிக்க, மகிழ்ச்சி பொங்க சுபிட்சமாக வாழ எளிய வழிகள் இதோ! (Post No.7391)

Written by S Nagarajan

Date – 28th December 2019

Post No.7391

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க சுபிட்சமாக வாழ  எளிய வழிகள் இதோ!

ச.நாகராஜன்

வேக யுகத்தில் சுபிட்சமான வாழ்க்கை சாத்தியமா?

இல்லத்தில் மகிழ்ச்சி; அதில் வாழும் குடும்ப உறுப்பினர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி!

சுபிட்சமான வாழ்க்கை!

இன்றைய வேக யுகத்தில் இது சாத்தியம் தானா?

சாத்தியம் தான் என நமது அறநூல்கள் உரத்த குரலில் கூவுகின்றன.

அதற்கான வழிகளை அன்றாட வாழ்க்கை முறையுடனும் வீட்டின் அமைப்பு முறையுடனும் கலந்து அதைக் கடைப்பிடிக்குமாறு அற நூல்கள் முறையாகச் சொல்லி இருக்கின்றன.

மறந்து விட்டோம்; அவ்வளவு தான்!

அதைக் கடைப்பிடிக்க உத்வேகம் கொண்டு, சிறிது நேரம் அதற்கென செலவழித்துக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும்; நல்லதே நடக்கும்.

அவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் பாங்க் பாலன்ஸைக் குறித்து வைத்துக் கொண்டு சில வாரங்கள் கழித்து மீண்டும் உங்கள் பாங்க் பாலன்ஸைச் சரி பார்த்தால் உள்ளம் மலரும்; இல்லம் மகிழ்ச்சியுறும்.

அதே போல மனதிருப்தியை அடையவும் (பார்க்கப் போனால் அது தானே வாழ்வின் இறுதி லட்சியம்) அந்த விதிகள் வழி வகுக்கும்.

பல நூல்கள் காட்டும் எளிய வழிமுறைகள்

இந்த முறைகள் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், சீன வாஸ்து முறைகள், புராண சாஸ்திரங்கள் உள்ளிட்ட நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. ஒவ்வொன்றையும் விரிப்பின் பெருகுமாதலால் சுருக்கமாகச் செய்ய வேண்டுவன மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

வீட்டின் மைய பாகம்

வீட்டின் மைய பாகம் பிரம்ம ஸ்தலம் எனப்படும். இந்தப் பகுதியில் எதையும் வைக்காமல் சுத்தமாக வெற்றிடமாக இருக்கச் செய்ய வேண்டும். இதற்கென சோபாக்கள், நாற்காலிகளைச் சிறிது மாற்றி வைக்க வேண்டுமெனில் அதை உசிதப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

வீட்டின் நுழைவாசல்

வீட்டின் நுழைவாசலை எடுத்துக் கொள்வோம்.

அங்கு வாசலில் முன்னே எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது.

வாயிலை ஒட்டி துடைப்பம், செருப்புகளை வைக்கும் ஸ்டாண்டுகள் இருக்கக் கூடாது.

கண்ணாடியைச் சிலர் நுழைவாயிலுக்கு எதிரே மாட்டுவது வழக்கம். உள்ளே வருகின்ற நல்ல சக்தியைப் பிரதிபலித்து இது வெளியே அனுப்பி விடும். ஆகவே கண்ணாடியை நுழை வாசலுக்கு எதிரே மாட்டக் கூடாது.

வீட்டின் வாயிலைப் பார்த்தவாறு லாஃபிங் புத்தா எனப்படும் புத்தரின் சிலையை வைப்பதன் மூலம் செல்வ வளம் சேரும்.

குபேரனின் திசை வடக்கு

வடக்குத் திசை செல்வத்தின் திசை. அங்கு கல்லா பெட்டியை – காஷ் பாக்ஸை வைத்திருத்தல் நலம்.

வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதை ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொண்டே இருந்தால் கடன்கள் தீரும்; செல்வம் சேரும்.

இந்த அமைப்பைச் செய்ய ஆரம்பித்தவுடன் வரு நல்ல அறிகுறியை இனம் காணுதல் முக்கியம். இப்படி ஒரு நல்ல செய்தி அல்லது வருமானம் (24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திற்குள்) ஏற்படின் நீரில் பூக்களைச் சேர்க்கலாம்; பன்னீரைச் சேர்க்கலாம். பலன்கள் அதிகரிக்கும். இதை அனுபவத்தில் கண்டால் மட்டுமே உண்மையை உணர முடியும்.

பணப்பெட்டியில் (காஷ் பாக்ஸ்) சம்பிரதாயமாக பழைய காலத்தில் திருவிதாங்கூர் அம்மன் காசு, சங்கு பொறித்த காசு, தாமரை பொறித்த காசு, லக்ஷ்மி படம் பொறித்த பழைய கால காசு ஆகியவற்றை வைத்தல் மரபு. பெரியவர்கள் கொடுத்த ஆசீர்வாதப் பணங்களையும் செலவழிக்காமல் சேர்த்து வைப்பது சில குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கம். (குறைந்தபட்சம் ஒரு சில காசுகளையாவது அதிலிருந்து எடுத்து வீட்டில் நிரந்தரமாக வைத்திருப்பர்)

பூஜை அறையும் மங்கலச் சின்னங்களும்

பூஜை அறையில் இஷ்ட தெய்வங்களின் படங்களை முறையாக மாட்டி அதற்கு அன்றாடம் நைவேத்யம் (ஒரு இலை அல்லது சிறிது நீர், அல்லது ஒரு பழம், கல்கண்டு ஏதேனும் ஒன்று) செய்தல் அவசியம்.

மங்கலச் சின்னங்கள் ஏராளம் உள்ளன. ஓம், ஸ்வஸ்திகா உள்ளிட்ட ஏராளமான அடையாளச் சின்னங்கள் ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் விலைக்குள் அழகுறக் கிடைக்கின்றன. நுழை வாயில் கதவிலும் பூஜை அறை உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சின்னங்களை இடம் பெறச் செய்தல் மரபு.

மகிழ்ச்சி தரும் சித்திரக் காட்சிகள்

போர், வன்முறைக் காட்சிகளுடனான படங்கள், வேட்டையாடிய மிருகங்கள் ஆகியவற்றை வீட்டில் தொங்க விடக்கூடாது. இவை சண்டை சச்சரவை வீட்டில் தூண்டி விடும்

மாறாக மகிழ்ச்சியைச் சித்தரிக்கும் அழகிய குடும்ப உறுப்பினர்களின் போட்டோவை பிரதானமான இடத்தில் மாட்டி மகிழலாம்.

லவ் பேர்ட்ஸ் போன்றவற்றை பெட் ரூமில் மாட்டுவதன் மூலம் அன்யோன்யமான கணவன் மனைவி உறவு அமையும்.

தரித்திரமும் கண் திருஷ்டியும் நீங்க !

வீட்டில் சுத்தம் மிகவும் அவசியம்.

அளவுக்கு மீறிய கடன்கள், வருமானமின்மை, வரவுக்கு மீறிய செலவு ஆகிய அனைத்திற்கும் வீட்டில் இருக்கும் அழுக்குகளே காரணம். இவை நெகடிவ் எனர்ஜியின் பெட்டகங்கள்.

பழைய பேப்பர்கள், பால் பைகள், கிழிந்த துணிகள் இதர தேவையற்ற குப்பைகள் ஆகியவற்றைச் சேர்த்து பின்னால் வெளியில் விற்பதால் வரும் வருமானம் பத்து ரூபாய் என்றால் அதனால் இழக்கும் பணமோ ஆயிரம் என்பதை நினவில் கொண்டு இவற்றைச் சற்றும் தாமதிக்காமல் அகற்றி விட வேண்டும்.

வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் தினமும் வீட்டு அறைகளை நீரால் மெழுகித் துடைக்கும் போது அந்த நீரில் சிறிது கல் உப்பைச் சேர்த்தல் வேண்டும். (பவுடர் உப்பு அல்ல)

ரத்தினக் கற்களை அணிக என்பது சரகர் தரும் அறிவுரை. அவரவர் தேவைக்குத் தக உரிய ரத்தினக் கற்களையும் உபரத்தினங்களையும் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.

பூக்களும் சங்கும்

மலர்ந்த அழகிய புஷ்பங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. ஒவ்வொரு பூவிற்கும் என்ன சக்தி உள்ளது என்பதை அரவிந்த ஆசிரம் அன்னை விளக்கியுள்ளார்.

உதிர்ந்த பூக்களை அன்றாடம் அகற்றுதல் வேண்டும்.

உலர்ந்த பூக்களை வாங்கவும், பயன்படுத்தவும் கூடாது. (துளஸி மட்டும் இதற்கு விதி விலக்கு)

வில்வத்தில் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். மாதுளம் பூ, மாதுளம் இலை செல்வத்தை அபரிமிதமாக அள்ளித் தரும்.

வலம்புரிச் சங்கு கிடைப்பது அரிது. நல்ல வலம்புரிச் சங்கு கிடைத்தால் அதை வீட்டில் வைக்கலாம். அது செல்வம் சேர்வது உள்ளிட்ட பல நலன்களுக்கான ஒரு அஸ்திவாரம்.

கெமிக்கல் கலந்த கந்தக (சல்பர் கலந்த) ஊதுபத்தியை ஒரு நாளும் வீட்டில் ஏற்றக் கூடாது. இது உடல் நலத்தைப் பாதிக்கும்; சுவாசக் கோளாறுகளை உருவாக்கும். மாறாக இயற்கையான நறுமணம் தரும் நல்ல ஊதுபத்திகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

சுக கந்த மால்ய ஷோபே என்று லட்சுமி தோத்திரத்தில் வருகிறது. இதன் பொருள் நல்ல நறுமணம் வீசும் இடத்தில் வாசம் புரிபவள் என்பது தான். அது இன்றைய நாளில் சுக கந்தக மால்ய ஷோபே என்பது போல ஆகி விட்டது; சல்பர் இருக்கும் இடத்தில் லட்சுமி வாசம் நிச்சயம் இருக்காது.

நல்ல அருமையான சந்தனக் கட்டையின் சிறிய பகுதியேனும் வீட்டின் பூஜையறையில் இருக்கச் செய்தல் வேண்டும்.

எந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பது?

வடக்குப் பக்கம் தலையை வைத்துப் படுக்கக் கூடாது.

தெற்குப் பக்கம் தலை வைத்துப் படுப்பது ஆயுளைக் கூட்டும். வீட்டில் கிழக்கு நோக்கியும் வெளியிடங்களில் மேற்கு நோக்கியும் தலையை வைத்துப் படுப்பது மரபு.

கண்ணாடி தரும் உணவு வளம்

கண்ணாடியை பெட் ரூமிலும் சமையலறையிலும் மாட்டக் கூடாது.

டைனிங் டேபிளின் எதிரே கண்ணாடியை மாட்டுவதன் மூலம் சுவையான உணவும் ஆரோக்கியமும் நிரந்தரமாகக் கிடைக்கும்.

பெட் ரூமில் பெரிய நிலைக் கண்ணாடிகளோ, அல்லது பீரோக்களில் பெரிய கண்ணாடிகளோ இருந்தால் அவை கணவன் – மனைவி உறவில் சச்சரவையும் வாதங்களையும் உண்டாக்கிக் கொண்டே இருக்கும்; அத்துடன் மட்டுமன்றி தூக்கத்திற்கு இடைஞ்சலாகவும் அமையும்.

ஒருவேளை தவிர்க்க முடியாமல் கண்ணாடி இருப்பின் அதை ஒரு சிறிய திரையால் மூடி விடுவது நலம்.

ஃபேஷன் டேஞ்சர்!

திறந்த அலமாரிகள் இன்றைய நவநாகரிகத்தால் வந்த ஃபேஷன் டேஞ்சர்.  புத்தகங்களை இப்படித் திறந்த அலமாரியில் வைத்திருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆகவே அலமாரிகளுக்குக் கதவுகள் அவசியம்.

வீட்டைச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பங்களை மறைவான இடத்தில் வைக்க வேண்டும்.

வடகிழக்கில் கழிவறை இருத்தல் கூடாது. அப்படி ஒருவேளை அமைந்திருப்பின் அங்கு கல் உப்பை (காய்ந்திருக்கும் நிலையில் )ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்தல் வேண்டும். உப்பை ஈரம் பட்ட நிலையில் மாற்றி புது உப்பை கிண்ணத்தில் நிரப்பல் வேண்டும். இது தீய சக்திகளை ஓரளவு கட்டுப்படுத்தும்.

இயற்கையை அலட்சியம் செய்யக் கூடாது

‘சீரைத் தேடின் நீரைத் தேடு’ என்பதற்கு இணங்க ஒரு நாளும் வீட்டில் குழாயிலிருந்து நீர் ஒழுகக் கூடாது; கசியக் கூடாது. கசியும் நீர் செல்வம் குறைவதற்கான வழி. இயற்கை தரும் இனிய நீரைக் காத்தல் கடமை.

நீர்வீழ்ச்சி படத்தை வீட்டின் உட்பக்கம் நீர் உள்ளே பாய்ந்து வருவது போல மாட்டுவது செல்வம் அதிகரிக்க வழியாகும்.

தங்கமும் வெள்ளியும்

தங்கமும் வெள்ளியும் சிறிய அளவிலேனும் வீட்டில் இருக்கச் செய்வது தொன்று தொட்டு எல்லாக் குடும்பங்களிலும் இருந்து வரும் ஒரு நல்ல மரபு. (தாலியில் குந்துமணி அளவேனும் தங்கம் இல்லாத பெண்மணி யாரும் இல்லை)

வீட்டின் அந்தஸ்தைக் கூட்டுவது, பண நிலையை ஸ்திரம் செய்யும் பாதுகாப்பு என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க ரஸ ஜல நிதி போன்ற அருமையான நூல்கள் தங்கம் வீட்டில் இருப்பதாலும் தங்க நகைகளை அணிவதாலும் ஏற்படும் அதிசயக்கத் தக்க பலன்களை விளக்குகின்றன.

1) அமைதியைத் தரும் 2) சுத்தத்தைத் தரும் 3) விஷத்தை முறிக்கும் 4) க்ஷய ரோகத்தைப் போக்கும் 5) பைத்தியத்தை நீக்கும் 6) நினைவாற்றலைக் கூட்டுவதோடு நுண்ணறிவை அதிகரிக்க வைக்கும் 7) ஞாபக சக்தியோடு நினைத்தவுடன் ஒரு விஷயத்தை கணத்தில் நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லும் திறன் கூடும் 8) ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும் 9) மூன்று தோஷங்களை நீக்கும் – தங்கத்தின் பயன்களாக இவற்றைத் தான் ரஸ ஜல நிதி அறிவிக்கிறது.

இதே போல வெள்ளிக்கும் தனிப் பலன்கள் உண்டு. விரிப்பின் பெருகும்.

கடல் அளவில் ஒரு சிறு திவலையே இந்தக் குறிப்புகள்

இப்படி ஏராளமான குறிப்புகளை நமது நூல்கள் தருகின்றன; பாரம்பரியப் பழக்கங்கள் செல்வ வளத்தைத் தந்து மன சாந்தியை உறுதிப் படுத்தி சந்ததி விருத்தியை நல்ல விதத்திலும் செய்து வந்தன. இனியும் செய்து வரும்!

மேலே குறிப்பிட்டவை கடல் அளவு போன்ற குறிப்புகளில் ஒரு சிறு திவலை தான்!

அனைத்தையும் அறிய தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி அவற்றை பரிசோதனை முறை என்ற அளவிலாவது மேற்கொண்டு கடைப்பிடித்து சொந்த அனுபவத்தால் உணர்ந்து பலன்களைப் பெறலாம்.

இன்னும் ரத்தினக் கற்களின் பயன்பாடு, ஜோதிட சாத்திரத்தை உண்மையான முறையில் பயன்படுத்துவது, எண் கணிதத்தின் மேம்பாடு, மந்திர யந்திரங்களின் மஹிமை, இசை மற்றும் தோத்திரங்களால் துதித்தல், சிவ, விஷ்ணு, தேவி, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் தலங்களில் செய்யும் வழிபாடு, புண்ய தீர்த்தங்களில் குளிப்பதன் மேன்மை, மூலிகைகளின் மகிமை, யோகா, ஸ்வரோதய விஞ்ஞானம் எனப்படும் சுவாசத்தின் அடிப்படையிலான சாத்திரம், அற நூல் வழிப்படி நடக்கும் பெரியோரைச் சார்ந்து அவர்களை அணுகி அவர்களின் அறிவுரைப்படி நடப்பது, அன்ன தானம் உள்ளிட்ட அறங்களை மேற்கொண்டு சமுதாயத்திற்கு உதவுவது உள்ளிட்ட ஏராளமான வழிமுறைகள் நமது வாழ்க்கை முறையில் உள்ளன.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; நல்வழியில் பயணம் மேற்கொண்டால் நற்பலன் உண்டு.

முயற்சி திருவினையாக்கும் அல்லவா! முயல்வோம் வெல்வோம்!

***