வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2 (Post No.5472)

Written by S NAGARAJAN

Date: 26 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-22 AM (British Summer Time)

 

Post No. 5472

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வில்லிபாரதம்

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல் – 1 என்னும் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (கட்டுரை எண் 5394 – பதிவு தேதி 5-9-2018)

 

வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2

 

ச.நாகராஜன்

 

 

   வீர சோழியம், தண்டியலங்காரம் ஆகிய நூல்களில் சொல்லணியில் முதலாவதாக இடம் பெறும் அணி  மடக்கணி.

 

ஒரே சொல்லே வெவ்வேறு பொருளில் ஒரு பாடலில் வருவது மடக்கணியாகும்.

 

  வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தில் பல்வேறு இடங்களில் இந்த அணியைச் சிறப்பாக இடம் பெறச் செய்து கவிதா ரஸிகர்களை மனம் மகிழச் செய்கிறார்.

 

மடக்கணி இடம் பெறும் ஒரு பாடல் சபா பருவத்தில் சூது போர்ச் சருக்கத்தில் இடம் பெறுகிறது. பாடல் எண் 64.

அது வருமாறு:-

 

 

மூத்த தாதைதன் னோலையு மிளையவன் மொழியுமொத் தமை நோக்கி,

வார்த்தை வேறுமற்  றொன்றையு முரைத்திலன் மனுநெறி வழுவாதோன்,

சேத்த நாகவெங் கொடியவன் கொடியவன் சிந்தையின் நிலைதோன்றக்,

கோத்த கோவைநன் றாயினுந் தகுவதோ குருகுலத் தனக்கென்றான்.

 

 

பாடலின் பொருள் :- மனு நெறி வழுவாதோன் – மனு தர்மம் சிறிதும் வழுவாத தர்மபுத்திரன்

மூத்த தாதை தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்துமை நோக்கி – பெரிய தந்தையான திருதராஷ்டிரன் அனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன வார்த்தையும் ஒத்திருப்பதைக் கண்டு

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் – நியாயத்துக்கு மாறான வேறொரு வார்த்தையையும் சொல்லாதவனாகி,

சேத்த நாக வெம் கொடியவன் – கோபத்தினால் கண் சிவந்த சர்ப்பத்தின் வடிவம் பொறித்த பயங்கரமான கொடியை உடையவனாகிய துரியோதனன்

கொடியவன் சிந்தையின் நிலை  தோன்ற – மிகக்  கொடிய மனத்தின் இயல்பு விளங்கும் வகையில் தனது சிந்தைக்கு ஏற்றபடி

 

கோத்த – தொடர்ச்சியாக ஆலோசித்த

கோவை – ஆலோசனைத் தொடர்

நன்று ஆயினும் – அவனுக்கு நல்லதாக இருப்பினும்

குருகுலம் தனக்குத் தருவதோ என்றான் – குருகுலத்தின் பெருமைக்குத் தகுமோ என்றான்.

வஞ்சனையாக சூதாட வருமாறு அழைக்கின்றான் துரியோதனன். அது துரியோதனனுக்கு நலம் பயக்கும். ஆனால் குடிப்பெருமைக்கு இழுக்கல்லவா ஏற்படுத்தும் என்பது தருமனின் கூற்று.

 

 

இப்பாடலில் நாக வெங்கொடியவன், கொடியவன் என்ற வரியில் கொடியவன் என்ற சொல் இரு பொருள்களில் வருவதால் இது மடக்கணியாகும்.

 

சீற்றமுடைய பாம்பின் கொடியைக் கொண்டவன், உண்மையில் இயல்பாலும் மனத்தாலும் கொடியவன் அல்லவா?

 

Picture posted by Lalgudi Veda

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. கருத்துடையடைகொளியணி என்ற சிறப்பான ஒரு அணியும் இந்தப் பாடலில் உள்ளது.

 

இந்தச் செய்யுளில் தருமன் மனு நெறி வழுவாதோன் என குறிப்பிடப் படுகிறான். அதாவது எந்த நிலையிலும் தகுதி இல்லாத சொற்களை சொல்லாது தக்க மொழியையே பேசுபவன் தர்மன். ஆனால் அதற்கு நேர்மாறாக – நாக வெம் கொடியவன் – விஷப் பாம்பை கொடியிலே கொண்டு உள்ளத்திலும் தீக்குணங்களைக் கொண்டவன் துரியோதனன். எப்போதும் நல்லோர்க்குத் தீமை விளைவிப்பவன். தீயதையே சொல்வான்; தீயதையே செய்வான்.

 

ஆக இந்த இரண்டு கருத்துக்களையும் இந்தச் செய்யுள் கொண்டிருப்பதால் இது கருத்துடையடைகொளியணி எனப்படும் அணியைக் கொண்டுள்ளது.

வில்லிப்புத்தூரார் இடத்திற்கு ஏற்றபடி சொற்களையும் அணிகளையும் கையாளும் திறன் கொண்டவர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

***

குறிப்பு : பாடலின் உரை வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றியதைப் பின்பற்றியதாகும்.

தமிழில் அலங்காரம் என்ற கட்டுரையில் 25 வது அணியாக இடம் பெறுவது கருத்துடையடைகொளணி. இந்தக் கட்டுரை எண் 5455. வெளியான தேதி 22-9-2018

***