12.சம்ஸ்கிருதச் செல்வம்
12. மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!
ச.நாகராஜன்
பாரத தேசத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப் பேசாத வீடே கிடையாது. யமுனை, ராதை, கோகுலம் போன்ற வார்த்தைகளை இன்றைய கவிஞர்கள், குறிப்பாகத் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதும் போது அது உடனடி ‘ஹிட்’ ஆகி விடக் காரணம் இந்த வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் பழைய பாரம்பரியத்தை ஒரு க்ஷணத்தில் கொண்டு வந்து அந்த வார்த்தைகளுக்குத் தனி ஒரு கௌரவம், ஆழம், அர்த்தத்தைத் தருவதால் தான்!
சந்தேகம் இருந்தால் தமிழ் திரைப்படப் பாடல்களில் கண்ணன் என்று வரும் சொல் உள்ள சில பாடல்களை இசைத்துப் பாருங்கள்!
கண்ணனின் லீலைகளை ஆழ்வார்கள் முதல் பாரதியார் ஈறாக எண்ணற்ற பெரியோர் அழியாத சொற்களில் பதித்து வைத்துள்ளார்கள்.
இந்தவகையில் லீலா சுகர் தனி ஒரு இடத்தைப் பெறுகிறார்.
அவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.
அவர் எழுதிய கிருஷ்ணகர்ணாம்ருதம் காலத்தால் அழியாத காவியம். இது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. மாதிரிக்கு ஒன்றைப் பார்ப்போம்:
க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா
ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா
தத்யம் க்ருஷ்ண க ஏவ-மாஹ முஸலீ
மித்யாம்ப பச்யானனம் I
வ்யாதேஹீதி விதாரிதே சிகமுகே
த்ருஷ்ட்வா ஸமஸ்தம் ஜகத்
மாதா யஸ்ய ஜகாம விஸ்மயபதம்
பாயாத் ஸ ந: கேசவ: II
(இரண்டாவது ஆஸ்வாஸம் 64ஆம் ஸ்லோகம்)
இதற்கு பிரபல உரையாசிரியர் அண்ணா (ஸ்ரீ ராம கிருஷ்ண மடம், சென்னை) தரும் விரிவுரை அழகான ஒன்று.
அம்ப – அம்மா!
ரந்தும் – விளையாடுவதற்கு
கதேன – சென்ற
க்ருஷ்ணேன. – கிருஷ்ணனால்
அதுனா – இப்பொழுது
ம்ருத் – மண்ணானது
ஸ்வேச்சயா – இஷ்டப்படி
பக்ஷிதா – தின்னப்பட்டது
கத்யம் க்ருஷ்ண – மண்ணைத் தின்றது உண்மையா, கிருஷ்ணா?
க: ஏவம் ஆஹ – யார் அப்படிச் சொன்னது?
முஸல: – பலராமன்
மித்யா அம்ப, பச்ய ஆனனம் – பொய் அம்மா, வாயைப் பார்!
வ்யாதேஹி – வாயைத் திற
இதி – எனவே
விதாரிதே சிசு முகே – குழந்தையின் திறந்த வாயில்
ஸமஸ்தம் ஜகத் – உலகம் அனைத்தையும்
யஸ்ய மாதா – எவனுடைய தாயார்
த்ருஷ்ட்வா – கண்டு
விஸ்மய பதம் – ஆச்சரிய நிலைய
ஜகாம- அடைந்தாளோ
ஸ: கேசவ: -அந்தக் கண்ணன்
ந: – நம்மை
பாயாத் – காப்பாற்றட்டும்
தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணன் நடத்திய லீலைகளை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்யம் செய்தவர்களே!
328 அம்ருதத் துளிகளை இந்த ஜன்மத்திலேயே ஒரு முறையேனும் படிப்போம்; மலர்வோம்; மகிழ்வோம்.
contact: swami_48@yahoo.com
*******