மதுரகவி திருப்புகழ்!

 bommai krishna

Post No.1808; Date: 18th April 2015

Written by S NAGARAJAN

Uploaded from London at 5-42 AM

 

By .நாகராஜன்

 

மதுரகவி ஶ்ரீநிவாச ஐயங்கார்

பிரமிக்க வைக்கும் புதியதொரு சந்த வகையைத் தந்து முருகனின் அருளுக்குப் பாத்திரமாக லட்சோப லட்சம் பக்தர்களை ஈர்த்து திருப்புகழ் பாட வைத்தவர் மகான் அருணகிரிநாதர்.

சொற்சுவையும் பொருள் சுவையும் சந்தமும் லயமும் பின்னிப் பிணைந்து ஒவ்வொரு பாடலிலும் அமுதூறும் தமிழை முருக பக்தியில் குழைத்தவர் அவர்.

அந்த வகையில் அரிய திருப்புகழ் சந்தத்தை இன்னொரு மகாகவியும் பின்பற்றி பல நூறு பாடல்களை இயற்றியுள்ளார்; ஆனால் அவை சற்று பிரபலமாகாமல் இருக்கின்றன; காரணம் நாம் அறிந்த ஒன்று தான்!

வாழ்ந்த காலத்தில் கவிஞர்களைத் தமிழர்கள்  கண்டு கொள்ள மாட்டார்கள்; யாராவது ஒருவர் வந்து – அதுவும் மேலை நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் வந்து –  அந்தக் கவிஞனின் புகழைப் பாராட்டியவுடன் விழித்துக் கொள்வார்கள்!

மதுரைக்கு அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்கள் தமிழ் கவிஞர்கள் வாழும் ஊர்கள். இயல்பாக ஊருக்குப் பல கவிஞர்கள் இந்த தமிழ் மண்ணில் தோன்றி வந்திருக்கின்றனர்.

இந்த கம்பம் பள்ளத்தாக்கிள் உத்தமபாளையத்தை அடுத்து அனுமன் – தன் – பட்டி என்ற அழகிய கிராமம் உள்ளது. ஊரில் அனுமனின் கோவில் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வைணவ மரபில் வந்து உதித்த பெரியார் மதுரகவி ஶ்ரீநிவாச ஐயங்கார்.

krishna flute

404 பாடல்கள் உள்ள திருமாலின் திருப்புகழ்

 

லட்சக்கணக்கான பாடல்களைத் தமிழில் இவர் யாத்துள்ளார். இவர் யாத்துள்ள சுமார் 62 நூல்களின் பட்டியல் நமக்கு இன்று கிடைத்துள்ளன. இந்த நூல்களில் ஒன்று மதுர கவி திருப்புகழ்.

இதில் 404 பாட;ல்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களோடு மங்களாசாசனம் பெறாத திருப்பவள வண்ணம் என்ற இடத்தையும் சேர்த்து 109 திவ்ய தேசங்களை இதில் இவர் பாடியுள்ளார்.

இந்த திருப்புகழில் சோழநாட்டுத் தலங்கள் – 40, பாண்டிய நாடு -18, சேர நாடு – 13, நடு நாடு – 2, தொண்டை நாடு – 23, வடநாடு – 13, புராணத்தலத் திருப்பதிகள் – 21 என திருப்புகழ் துதிகள் ஏழு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

கரும்பாலையில் வீழ்ந்த பறவை போல தளர்வேனோ

உற்பா தப்பூ சற்பா பத்தால்

உட்டா பத்துக்              குளைவாகி

உற்றா லைபா கிற்சேர் புட்போல்

உற்றே கத்தித்             தளர்வேனோ

இற்பா சந்தா வித்தே நெக்கா

வெய்த்தா பத்திற்           படுவேனோ

எக்கா லப்பா லிற்போய் நற்கா

லிற்றாழ் வுற்றுத்           தணிவேனே

உற்பாத பூசல் உற்று பாபத்தால் உள் தாபத்துக்கு உளைவாகி உற்று ஆலைப்பாகில் சேர் புள் போல் உற்றே கத்தி தளர்வேனோ1

பொருள் : கொடுமைகள் நிறைந்த போரினால் உற்ற தீவினையால் மன வெம்மைக்கு ஆட்பட்டு ஆலைப்பாகில் விழுந்த பறவை போல் கதறித் தளர்வேனோ?

இற்பாசத்தாவித்தே  நெக்கா எய்த்து ஆபத்தில் படுவேனோ!

எக்கால் அப்பாலிற் போய் நற்காலில் தாழ்வுற்று தணிவேனே!

பொருள்: மனை ஆசையில் ஈடுபட்டு நெகிழ்ந்து இளைத்து இடரில் வீழ்வேனோ!எப்போது இந்த பாசமெனும் இடர்களுக்கு அப்பால் வந்து  நல்ல திருவடிகளில் தாழ்ந்து பணிந்து வணங்குவேன்?

சோழநாட்டு திவ்ய தேச திருப்புகழ் இது.

krishna yoga

ஆயர்பாடியில் சஞ்சரித்த கண்ணா!

இன்னொரு பாடல்:-

உதய பானு நேரான திகிரி சாபம் வாளாதி

ஒளிகொள் ஜோதி சூழேம                 முடையோனே

உதய ராக மோடாயர் மருவு பாடி யூடாடி

உரலி னேறி யளைதேடு                   மொருவோனே

சதன சீத மாறாத பதும லோச னாதேவர்

தமது தாபம் வாராது                       தகைவோனே

தரும ராச னீராழி யுலகை யாள  வேமோது

சமர்செய் சூத  னேதேவர்                   பெருமாளே

பொருள்: உதய சூரியனை ஒத்த சக்கரம், வில், கத்தி முதலிய சுடர் விடும் பிரகாசம் சூழ்ந்து சேமம் உடையவனே! பூபாள ராகத்துடன் ஆயர்கள் வாழும் ஆயர்பாடியில் சஞ்சரித்து உரல் மீது ஏறி நின்று வெண்ணெயைத் தேடுவோனே! நீரின் குளுமை மாறாத தாமரைக் கண்ணா! தேவர்கள் துன்பம் வாராமல் தடுப்பவனே! தருமபுத்திரர் நீர் சூழ்ந்த இந்த உலகை ஆள்வதற்காக பாரதப் போரில் பார்த்தனுக்கு தேர் ஓட்டியவனே! வானோர் தலைவனாகிய திருமாலே!

எடுத்த இடமெல்லாம் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களிலிருந்து அற்புதமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுவதைக் காணலாம்.

perumal chintadripet

நம்மாழ்வார் மீது பக்தி

 

நம்மாழ்வார் மீது பரம பக்தி கொண்டவர் கவிஞர் மதுரகவியார். அவரைப் பலபடியாகப் போற்றுவதையும் அநேகம் பாடல்களில் காண முடியும்!

இசைமேவு சந்தம் இயல்மேவு பந்தம்

இசைவான தொந்தம்                 இனிஓசை

எளிதான இன்ப நலம்நாடும் அன்பர்

இதையாச னங்கள்                   இடையேகி

அசை சீர் பொருந்து  கவியாயி ரங்கள்

அருள் மாறர் நெஞ்சம்                அமர்வாய் நீ

பொருள் :- கீதம் விளங்கும் பொலிவு, இயற்கையான கட்டுப்பாடு, பொருத்தமான தொடர்புடைய இனிய ஒலி, சுலபமான மகிழ்ச்சியில் நலம் நாடுகின்ற பக்தர்களின் இதய ஆசனங்களில் சென்று சீரும் அசையும் பொருந்திய ஆயிரம் பாசுரங்கள் வழங்கும் நம்மாழ்வார் உள்ளத்தில் அமர்வாய் நீ!

ஐம்படைகளோடாழி அழகாக அங்கையவரி மாமாயன்

எங்கள் தனி ஆழ்வார்கள் அன்பனுயர் சீர்பாட அரணாமே (கங்கை தரு என தொடங்கும் பாடல்)  என இப்படி எங்கள் ஆழ்வார்களின் ஒப்பற்ற அன்பனே உன் சீரைப் பாடினால் அதுவே எமக்கு காப்பு ஆகும் என மதுரகவியார் பகர்கிறார்!

கம்பனின் உரையுடன் கூடிய நூல்

மதுரகவியின் வழித்தோன்றல்களான வேதவல்லி- கோவிந்தராஜனின் பெரு முயற்சியால் இந்த நூல் வெளிவந்துள்ளது.

இதற்கு அருமையான உரையை கம்பன் என்ற புனைப் பெயரில் கேரளம் பரப்பனங்காடியைச் சேர்ந்த மு.கோ.ராமன் வழங்கியுள்ளார்.

திருமாலின் திருப்புகழைப் பாடப் பாட மெய் சிலிர்க்கும்; பக்தி பெருகும். தமிழ் அன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் மதுரகவி திருப்புகழ்!

*************

நூல் கிடைக்கும் இடம் : வேதா பப்ளிகேஷன்ஸ், 8, நரசிம்மபுரம், மைலாப்பூர், சென்னை -4