அதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்! (Post No.7667)

Written  by  LONDON SWAMINATHAN

Post No.7667

Date uploaded in London – 8 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை –  செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக்  காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது

இதோ சில சுவையான செய்திகள் –

தஞ்சாவூரிலிருந்து  ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.

ராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.

அவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும்  மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில்  12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம்.  அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.

மதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில்  ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றி ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.

ராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல்.  இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை  பொழிந்தார்

சாதுர்யமேதி கவிதாஸு சதுர்விதாஸு

வீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா

ப்ரக்ஞாமியம்  நிபுணமஞ்சதி  பாணிணீ யே

மேதாம் வ்யனக்தி  பஹுதா விவிதா வதானே

என்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.

மதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..


பெண்மணிக்கு தங்க அபிஷேகம்

ரங்க ஜம்மா  என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள்.  உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க  மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.

பெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.

முத்துப் பழனி

நாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ்  நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி

சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத்  திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன  அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை  சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம்  ஆகும்.

–subham—