மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486)

#WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,486

Date uploaded in London – –   25 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன; மதுரையில் நடந்த மதுரமான நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் அப்படி நடக்கின்றனவா என்று தெரியவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே சீன வைரஸ் தாக்குதலில் இருப்பதால் இப்போது நடக்கவும் வாய்ப்புகள் குறைவு.

மதுரையில் எங்கள் காலத்தில் இருந்த பல நிறுவனங்கள் அழிந்து விட்டன.

முதலில் திருப்பாவையில் துவங்குகிறேன் .

மதுரையில் இருவர் தங்கள் வாழ்க்கையையே திருப்பாவையைப் பரப்புவதற்கு அர்ப்பணித்து இருந்தனர். ஒருவர் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன்; மற்றொருவர் திருமதி சீதாலெட்சுமி பாலகிருஷ்ண ஐயங்கார். .

ராஜம்மாள் சுந்தராஜன் மறைவுக்குப் பின்னர் அவரது வலது கையாக விளங்கிய விசாலாக்ஷி பாவைப் பாடல்களைப் பரப்பினார். அதே போல திருமதி சீதாலெட்சுமிக்குப் பிறகு அவருடைய புதல்வி பத்மாசனி திருப்பாவையைப் பரப்பினார்.

ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி சங்கராச்சாரியார் , திருப்பாவை முப்பதையும் ஒப்பிப்போருக்கு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தனுப்புவார். மாயவரத்தைச் சேர்ந்த திரு ராமமூர்த்தி, மடத்தின் பிரதிநிதி. அவர் எங்கள் வீட்டில் உணவருந்திவிட்டு திருப்பாவைப் பள்ளிகளுக்குச் செல்லுவார். நாங்கள் அந்த வெள்ளிக்காசுகளைக் காட்டச் சொல்லி வியப்புடன் பார்ப்போம். என் தங்கையும் எதாவது ஒரு திருப்பாவைப் பள்ளிக்கு 30 நாட்களும் செல்லுவார்.

திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் ஏராளமான கல்லூரி மாணவிகளையும் கவர்ந்து இழுத்தார். அவர் செய்த நாட்டிய நாடகங்கள் இதற்கு ஒரு கரணம். அந்தக்காலத்தில் வத்சலாபாய் என்ற பள்ளிக்கூட பஸ், பணக்கார வீட்டுப் பெண்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்லும். அந்த பஸ்ஸில் வார விடுமுறை நாட்களில்  பல ஊர்களுக்குச் சென்று அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை நாட்டிய நாடகமாக நடத்திக் காண்பித்தனர். எங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லுவார்கள். அவர்களுடைய  நாட்டிய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழனி, தாராபுரம், உடுமலைப் பேட்டை முதலிய இடங்களுக்குத் சென்ற பயணம் இன்றும் நினைவில் நிற்கிறது.

கட்டுரைக்குத் தலைப்பு “மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்” என்று கொடுத்தற்குக் காரணம் எல்லா நாட்களும் நெய் ஒழுகும் பொங்கல், தொன்னையில் கிடைக்கும். திருப்பா வைக்காக வராவிட்டாலும் பொங்கலுக்காக வரும் கூட்டம் கொஞ்சம் இருக்கும். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – பாடல் அன்று ‘நெய்யில் மிதக்கும்’  சர்க்கரைப்  பொங்கலும் கிடைக்கும்.

மதுரை தானப்ப முதலீத் தெரு டிரஸ்ட் ஹவுஸில் பிரம்மாண்டமான அண்டாக்களில் பொங்கல் வடிப்பர்.

இது தவிர நாங்கள் வசித்த வடக்குமாசி வீதியில் யாதவர்கள் திறம்பட நிர்வகித்த கிருஷ்ணன் கோவில் இருந்தது. அதிகாலை 4-30 மணி முதல் திருப்பாவை மற்றும் பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி மூலம் வரும். இந்தப் பாட்டு வந்தால் இத்தனை மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளும் அளவுக்கு கண கச்சித ஒலிபரப்பு .

இது தவிர மீனாட்சி கோவிலில் திருவெம்பாவை, தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் பாடுவார்கள். நட ராஜர் முன்னிலையில் அதிகாலையில் ஞானப் பால் என்ற சுவைமிகு ஏலக்காய், கிராம்பு போட் பால் விநியோகிப்பர். ஆளுக்கு ஒரு உத்தரணி தான்; அதற்கு நீண்ட க்யூ வரிசை. ஆனால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியம் எங்களுக்கு மட்டும் கோவில் பேஷ்கார் ஒரு பாட்டிலில் தனியாகக் கொடுத்து விடுவார் . எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் விரிவான ஆன்மீகச் செய்திகளை வெளியிடுவதால் இந்த சிறப்புக் கவனிப்பு..

அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டால் அது இளப்பமான விஷயம். ஹிந்து என்ற பெயர்கொண்ட  பத்திரிகை கூட கடைசி பக்கத்தில் மூன்று அங்குலத்துக்கு செய்தி போடுவார்கள்; என் தந்தை வே. சந்தானம் அந்த மரபுகளை உடைத்து எறிந்து முதல் பக்கத்தில் தெய்வீக செய்தி வெளியிடுவார். தினமணியின் ‘இன்றைய நிகழ்ச்சி’யைப் பார்த்தால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் கிடைத்துவிடும்.

இது தவிர மேலும் ஒரு நிகழ்ச்சி –அதி காலை 4 மணிக்கு பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு 4 மாசி வீதிகளும் மார்கழி மாதம் முழுதும் அன்பர்கள் வீதி உலா வருவர் . இவ்வாறு இரண்டு மூன்று குழுக்கள் செய்ததாக ஞாபகம். அதில் சில நாட்கள் தந்தையுடன் நானும் சகோதரர்களும் கலந்து கொண்டோம்.

மாதத்தில் ஒரு முறை திருப்பாவை ஊர்வலம்  பெரிய அளவில் நடத்தப்படும். இவை தவிர, ந. சீ. சுந்தரராமன் நடத்திய தேவாரப்பள்ளி , திருப்புகழ் தியாகராஜன் நடத்திய திருப்புகழ் சபை, வானமாமலை சகோதரர்கள் நடத்திய தெய்வ நெறிக் கழகம் , மொட்டைக் கோபுர பூசாரி யாழ்கீத சுந்தரம்பிள்ளை நடத்திய பூஜை, மற்றும் கார்த்திகை மாத சங்காபிஷேகம் ஆகியன மதுரையின் தெய்வீக மனத்தை அதிகரித்தன.

மதுரையில் இருந்த 3,4 வேத பாடசாலைகள், தமிழையுயும் ஸம்ஸ்க்ரு தத்தையும் இரு கண்களாகப் பரப்பி வந்த ராமேஸ்வரம் வேத பாடசாலை, வாரத்தில் இரு முறை திலகர் திடலில் நடந்த புகழ்மிகு பிரம்மாண்ட வார சந்தைகள் . புகழ் மிகு ‘பூ மார்க்கெட்’ ஆகியன எல்லாம் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. ‘பவதி பிட்சாம் தேஹி’ என்று வீட்டு வாசலில் உச்சுக் குடுமி தாங்கிய சிறுவர்கள் வந்து பிக்ஷை பெற் றதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழிய (ஆண்டாள்)

திருவெம்பாவை இருபதும் செப்பினார் வாழிய  (மாணிக்க வாசகர்).

–subham–

PICTURES ARE FROM DIFFERENT PLACES; NOT MADURAI

tags- திருப்பாவை , திருவெம்பாவை, பொங்கல் , பஜனை, மதுரை, வெள்ளிக்காசு

மதுரையில் பெருமாள் தெப்பக்குளம் மீட்பு! (Post No.8556)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8556

Date uploaded in London – – –23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மதுரையில் பெருமாள் தெப்பக்குளம் மீட்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன! மாபெரும் வெற்றி!!

ச.நாகராஜன்

அற்புதமான இரு வீர புருஷர்களின் முயற்சி வெற்றி பெற்றது. தர்மம் வெற்றி பெற்றது – சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து!

ஒருவர் மானனீய கோபால்ஜி ! இந்து முன்னணி தலைவர்!

இன்னொருவர் சேலம் திரு எம்.ராமசாமி. ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியை கண்ணெனப் பேணிப் பாதுகாத்து அதற்கென தன்னை அர்ப்பணித்தவர்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் வீறு நடை போட்டு ஒவ்வொரு ஊர் ஊராகப் பயணம் செய்து ஆலயங்களைக் காக்கப் பெருமுயற்சி எடுத்தார் சேலம் ராமசாமி. அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துப் பலமாக இருந்தார் கோபால்ஜி.

சேலத்தில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. ஏராளமான ஹிந்து ஆசாரியர்கள் அதில் பங்கேற்றனர். ஆலயங்கள் மற்றும் ஹிந்து மடங்களின் பொறுப்பு அரசிடமிருந்து மீட்கப்பட்டு அதற்கென உள்ள ஒரு தனி அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் ஒருமித்த கருத்தாக மிளிர்ந்தது.

இந்த மாநாட்டில் பங்கு பெற மதுரையிலிருந்து தன்னார்வலர்களைத் திரட்டிக் கூட்டிச் செல்லும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது.

மதுரை ஆதீனம் போன்ற பெரியோர்களின் சந்திப்பு கிடைத்தது;

 ஏராளமான சத் சங்கங்கள் பஜனை மண்டலிகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

சேலம் மாநாடு தமிழகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது; எப்படியேனும் அரசுப் பிடியிலிருந்து ஆலயங்களைக் காக்க வேண்டும் என்பதற்கான விதை விதைக்கப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக மதுரையில் மதுரை மாவட்ட ஆலயப் பாதுகாப்பு மாநாடு நடந்தது. (நான் தான் செயலாளர்)

அதில் முக்கிய தீர்மானமாக பெருமாள் தெப்பக்குளத்தைச் சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோலாகலமாக நடத்தப்பட்டு பேருக்கு நடத்தும் ‘நின்று விட்ட’ தெப்பக்குள உற்சவத்தை மீண்டும் கோலாகலமாக நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை நகரில் உள்ள அனைத்து சத்சங்கங்களையும் அணுகி ஒரு மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது.

சுமார் எண்பது சங்கங்கள் இணைந்தன.ஏராளமான நல்லோர் இதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால், தீய சக்திகளுக்குக் கொண்டாட்டம் – அரசின் சில நாத்திக சக்திகள் அவர்களுக்குத் துணையாக இருந்ததால்.

வைஷ்ணவ பக்தர்கள் ஒன்று சேர்ந்தனர்; கேஸ் ஒன்றும் போடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப் பாடுபட்டு வந்திருக்கின்றனர்.

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; மறுபடி தர்மமே வெல்லும் என்ற படி கேஸ் வெற்றி பெற்றது.

நேற்று (20-8-2020) வந்த செய்தி இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்தது. உள்ளம் குளிர வைத்தது.

அனைத்து ஆக்கிரமிப்புகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

இன்று (21-8-2020) காலை மதுரை சார்டர்ட் அக்கவுண்டண்டும்  ஐக்ய வைஷ்ணவ சபைத் தலைவருமான ஆடிட்டர் திரு என்.சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொண்டு என் மன மகிழ்ச்சியைத் தெரிவித்து அவரைப் பாராட்டினேன்.

அடுத்த முயற்சியாக தெப்பக்குளம் சீராக்கப்படும் என்று அவர் நல்ல செய்தியைக் கூறினார்.

இந்தத் தெப்பக்குளத்திற்கு வைகை நதியிலிருந்து ஒரு சுரங்கக் கால்வாய் பழைய காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இரயில்வே காலனி வழியாக வரும் அது தெப்பக்குளத்தைச் சென்று அடைகிறது. மடைகளைத் திறக்க வேண்டியது தான், சிறிது நேரத்தில் வைகை நீர் தெப்பக்குளத்தை வந்து அடையும்.

இதற்கான மேப் இருக்கிறது; கால்வாய் சரியாக இருக்கிறதா என்று பார்த்து தேவைப்பட்ட புனர்நிர்மாண வேலைகளைச் செய்தால் தெப்பக்குளத்தில் நீர் பெருகும் ; தெப்போற்சவம் பிரம்மாண்டமான அளவில் நடக்கும்.

அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போமாக!

மதுரை கார்பரேஷன் கமிஷனர், மதுரை கலெக்டர் ஆகியோர் நல்ல முறையில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 அரசுப் பணிகளில் உயர் பொறுப்புகள் வகிப்போருக்கும் இதில் ஈடுபட்ட அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் ஆடிட்டர் திரு என். சீனிவாசன் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

என்றோ போட்ட விதை இன்று பயனளிக்கும் விருக்ஷமாகி விட்டது!

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் அரசுப் பிடியிலிருந்து விடுபட்டு இதற்கான தனி அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்தத் தருணத்தில் சேலம் திரு ராமசாமி அவர்களை நினவு கூர்கிறேன்.

1984ஆம் ஆண்டு இலங்கையில் சில காலம்  நான் இருந்த போது ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து கெஸ்ட் ஹவுஸ் திரும்பிய போது ஹிந்து நாளிதழைப் பார்த்தேன். அதில் சேலம் ராமசாமி அவர்கள் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்த செய்தி கண்டு ஆற்றொணாத் துக்கம் அடைந்தேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைவதாக!

இந்த வெற்றியைப் பெற கடுமையாக உழைத்ததோடு  இன்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு வழி காட்டி வரும் திரு இராம கோபாலன் அவர்களை இந்த நேரத்தில் போற்றி வணங்குகிறேன்.

இன்னும் பல்காலம் இருந்து அவர் நல்வழி காட்டத் துணை புரியுமாறு மதுரை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்.

வாழ்க ஹிந்து தர்மம்; ஒங்குக ஹிந்து ஆலயங்கள்!

tags – மதுரை, பெருமாள் தெப்பக்குளம், மீட்பு

****