WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,664
Date uploaded in London – – 16 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை – குறள் 57
பெண்களை பலவகையான காவலுக்கு இடையே சிறைவைப்பது என்ன பயனைத் தரும்? தம்
கற்பு நெறியால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காப்புதான் சிறப்புடைய காவல் ஆகும் .
பெண்களை என்ன காவலில் வைத்த்தாலும் பலன் தராது. அவர்களுடைய கற்புதான் அவர்களைக் காக்கும். இந்தக் கருத்து வால்மீகி ராமாயணம், உலகின் முதல் சட்ட நூலான மனு ஸ்ம்ருதி, ஷேக்ஸ்பியரின் நாடகம் , கம்பராமாயணம் ஆகியவற்றிலும் வருகிறது. ஆயினும் வால்மீகியும் மனுவும் இதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.
வால்மீகி சொல்கிறார் ,
न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः |
नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियः ||
ந க்ருஹானி ந வஸ்த்ரானி ந ப்ரகார ஸ்திரஸ்க்ரியாஹா
நேத்ருசா ராஜஸத்காரா வ்ருத்தமாவரணம் ஸ்திரியஹ
இதன் பொருள் :
வீடோ , அணியும் உடைகளோ,வீட்டைச் சுற்றி எழுப்பப்படும் காவல் மதில்களோ , கதவுகளோ அல்லது அரசர்கள் கொடுக்கும் விருதுகளோ ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இராது .அவளுடைய ஒழுக்கமே (கற்பு) அவளைப் பாதுகாக்கும் கேடயம் ஆகும் — யுத்த காண்டம், அத்தியாயம் 114
Xxx
மானவ தர்ம சாஸ்திரத்தில் மநுவும் இதையே சொல்கிறார்,
பெண்களை ஆண்கள் , ஒரு வீட்டுக்குள் காவலில் வைப்பது அவர்களைக் காக்காது; பெண்மணிகள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதே நல்ல பாதுகாப்பு ஆகும் – மநு ஸ்ம்ருதி 9-12
अरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः ।
आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिताः ॥ ९.१२॥
அரக்ஷிதா க்ருஹே ருத்தாஹா புருஷைராப்தகாரிபிஹி
ஆத்மானமாத்மனா யாஸ்து ஸுரக்ஷிதாஹா
“நம்பிக்கை மிக்க ஆண்களைக் காவல் காக்கவைத்தாலும்” அது அவர்களைக் காக்க முடியாது என்பதையும் மநு சேர்த்துச் சொல்லியுள்ளார். அவர்களிடம் மனக் கட்டுப்பாடு , கற்பு நெறி, இல்லாவிடில் இது சாத்தியமாகாது என்று உரைகாரர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.
XXXX
ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியங்களில் கற்பு என்பதை ஒரு முக்கிய பண்பாகக் கருதி நிறைய பாடல்களை எழுதிச் சேர்த்துள்ளனர். அருந்ததி என்னும் கற்பரசியை சங்கத் தமிழ் நூல்களும் வேத இலக்கியங்களும் போற்றிப் பாடியுள்ளன . இப்படிப்பட்ட ஒரு பண் பையோ , மாதரசியையோ மேலை நாட்டு இலக்கியத்தில் காண்பது அரிதிலும் அரிது. ஆயினும் நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் தனது நாடகம் ஒன்றில் டயானா DIANA என்னும் கத பாத்திரம் வாயிலாக சொல்லுவதைப் படியுங்கள்
டயானா
என்னுடைய மானம் ஒரு மோதிரம் ;
என் கற்புதான் எங்கள் வீட்டின் ஆபரணம்
அது என் முன்னோர்களிடமிருந்து வந்தது
……….
இழப்பதற்கு அரியது
All is well that ends well, Act 4, Scene 2
Xxx
கம்பனும் கற்பு பற்றி, சீதையின் கற்பு பற்றி , அது எப்படி அவளைக் காக்கும் என்பதை குறைந்தது இரண்டு இடங்களில் காட்டுகிறான் . சீதையை தூக்கிச் செல்லும் ராவணனை தடுக்க முயன்று வெட்டுப்பட்ட ஜடாயு என்னும் பறவை அரசன், அடடா இவள் ராவணனால் சிறை வைப்படப்போகிறாளே என்ன ஆகுமோ என்று புலம்புகிறான். பின்னர் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கவலைப்பட ஒன்றுமில்லை; சீதையின் கற்பு அவளைக் காக்கும் என்று சொல்கிறான்
3560. பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான்;
“அருஞ்சிறை உற்றனளாம் ” எனா மனம்
‘பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்
இரும் சிறை இறாது ‘என இடரும் நீங்கினான்.
ஆரண்ய காண்டம் , சடாயு உயிர்நீத்த படலம்
பூவை – நாகண வாய்ப்பறவை போல மொழியுடைய சீதை
Xxx
சுந்தர காண்டத்தில் மற்றோர் காட்சி ,
ராவணனின் அரண்மனை படுக்கை அறை , அந்தப் புரம் எல்லாவற்றிலும் சீதையைத் தேடும் அனுமன், அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில், அரக்கிகளின் காவலுக்கு இடையில் சீதையைக் கண்டவுடன் வியக்கிறான் : அற்புதம், அற்புதம் ! இவள் இங்கே மானபங்கம் ஆகாமல் இருந்ததற்கு ஜனகன் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமா?அல்லது தர்மம் இவளை இதுவரை காத்து உதவியதா? அல்லது சீதையின் உயரிய கற்பு நெறிதான் அவளைக் காத்து நிற்கிறதா? ஒப்பற்ற காட்சி; எது காரணம் என்பதை என்னைப் போன்றவர் உரைக்கவும் இயலுமோ என்று கம்பன் பாடி முடிக்கிறான்.
5143.
தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ ?
அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?
-சுந்தர காண்டம் , காட்சிப் படலம்
Xxxx
ஆக கற்பு நெறியின் சிறப்பை வால்மீகி முதல் கம்பன் வரை கண்டோம். நாலடியார், பழமொழி ஐம்பெரும் காப்பியங்களிலும் நிறைய குறிப்புகள் உள .
–சுபம் —-
tags- கற்பு , வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு,
You must be logged in to post a comment.