புளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய் !

Brahmarakshas begs to a vaishnavite saint
Brahmarakshas begs to a Vaishnavite saint

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்— 1001 தேதி—-25 ஏப்ரல் 2014

தமிழ்நாட்டில் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரைத் தெரியாதோர் யாரும் இல்லை. அவருடைய ராமாயண, மஹாபாரத உபன்யாசங்களைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் செல்வர். அவர் குருவாயூ ரப்பனை உபாசித்து தன்னுடைய பெருநோயைப் போக்கிக் கொண்டவர். வாழ்நாள் முழுதும் தர்மப் பிரசாரத்தில் ஈடுபட்ட அவரும் அவரது குடும்பத்தினரும் மந்திர சாஸ்திரங்களில் வல்லவர்கள். ஸ்ரீ குருவாயுரப்பன் மீதான வாதபுரநாதஷ்டகம், நாராயணீயம், மஹிஷாசுரமர்த்தனி ஸ்லோகம் ஆகியன அவர் மூலம் தமிநாட்டில் பரவின. தனக்கென்று ஒரு புதிய உபந்யாச பாணியை வகுத்துகொண்டு சம்ஸ்கிருதக் கவிதைகளை அக்ஷரசுத்தமாகச் சொன்னவர்.

( சஹஸ்ரசண்டி என்ற பெரிய யாகத்தை நடத்துவதற்காக 1962-ஆM ஆண்டில் மதுரையில் புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள், நிதி எழுப்பும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அதற்காக 45 நாட்கள் மதுரை மீனாட்சி கோவில் ஆடிவீதியில் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபந்யாசம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது எங்கள் குடும்பத்தினர் அதில் மிகவும் ஈடுபட்டதால் அவரை தந்தையுடன் சென்று தனியாகச் சந்திக்கும் பாக்கியமும் கிடைத்தது. அப்போது பள்ளி மாணவர்களாக இருந்த நாங்கள் மதுரை ஆடிவீதியில் சமய நூல் விற்பனை செய்து யாகத்துக்கு நிதி எழுப்பினோம்)

அவர் தனது முன்னோர்களின் தவ வலிமை பற்றி எழுதுகையில் இரண்டு பிரம்மராக்ஷஸ் ( அமானுஷ்ய ஆவிகள்) பற்றிய கதைகளையும் எழுதியுள்ளார். இதோ அவரது எழுத்துக்களிலேயே இரண்டு பேய்க் கதைகளையும் படியுங்கள்:—-

“ஸ்ரீ முத்தண்ணாவாளின் இளைய சகோதரரைச் சின்ன முத்தண்ணா என்று அழைப்பார்கள். அவர் தமது தமையனாரான பெரிய முத்தண்ணாவாளை தெய்வமென்றே கருதுவார்கள். எங்காவது வெளியூர் சென்றாலும் பெரியவரை நமஸ்கரித்து அனுக்ரஹம் பெற்றுத்தான் புறப்படுவார்கள். அவ்விதம் ஒரு சமயம் ஸ்ரீ சின்ன முத்தண்ணாவாள் செதலப்பதி என்ற பந்து (உறவினர்) கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து இரவில் முடிகொண்டான் என்ற ஊருல்குப் போகும்படி நேர்ந்தது அந்தப் பாதை முழுவதும் மிகுந்த மரங்கள் நிறைந்திருக்கும். அதிலும் மத்தியில் ஒரு பெரிய ஆலமரம் மிக அடர்ந்து பரவி வளர்ந்திருக்கிறது. அவ்விடத்தில்தான் திருடர்கள் மறைந்து நின்று வருகிறவர்களிடமிருந்து பொருள்களைப் பறிப்பது வழக்கமாம்.

statue of B rakshas
Statue of Brahmarakshas in Kerala.

அதே பாதையில் ஸ்ரீ சின்ன முத்தண்ணாவாள் போய்க்கொண்டிருந்தார். அந்த பயங்கரமான ஆலமரத்தைத் தாண்டியதும் ஓர் பலத்தகுரல் கேட்டது. அதாவது, “ஓ, சுப்பராம தீக்ஷிதரே! தாங்கள் நன்றாக வேதத்தைப் பதம் சொல்வீராமே!” என்றது. இதைக்கேட்ட ஸ்ரீ சின்ன முத்தண்ணாவாள் என்ற சுப்பராம தீக்ஷிதர் காலடிச் சத்தம் கேட்காமல் சமீபத்தில் குரல் பலமாக இருப்பதையும் எண்ணி ஆலோசித்து இது ‘ப்ரும்மரக்ஷஸ்’ என்று அறிந்தார். “பிறகு நான் அறிந்தவரை சுமாராகச் சொல்லுவேன்”, என்றார். உடனே அது , வேதத்தில் சம்ஹிதை என்ற பாகத்தில் , இரண்டாவது காண்டத்தை ஆரம்பித்துச் சொல்லிற்று. இவரும் அதோடு சர்ச்சையாக சொல்லிக் கொண்டே நடந்து சென்றார். அதுவும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே சென்றது.(சர்ச்சை என்றால் ஒருவர் ஒரு பதம் அடுத்தவர் அதற்கு மேல்பதம் , இவ்வாறு இருவர் மாறி மாறிச் சொல்வதே ஆகும்). முடிகொண்டான் சமீபம் சென்று கொண்டிருந்தனர்.

அதுசமயம் அங்கு சற்று தூரத்தில் ஒருவர் வீட்டிற்குள் தூங்குகிறவனை, மணி நான்கு ஆகிவிட்டது. சீக்கிரம் வண்டி பூட்ட வேண்டும் எழுந்து வா” என்று அழைத்துக் கொண்டிருந்தார். ஆதற்குள் நூற்றுக்கண்ககான பஞ்சாதி ஆகியும் பொழுது விடியாததை அறிந்து, ஸ்ரீ முத்தண்ணாவாள் அகாலத்தில் நாம் வந்துவிட்டோம் என்று உணர்ந்தார். முன்பு அழைத்துக் கொண்டிருந்த வீட்டுக்குச் சமீபம் வந்ததும் , அந்த ப்ரும்மரக்ஷஸ், “என்னைக் கைவிட்டு விடாதீர்கள்” என்று உரக்க அழுது, எனக்கு நல்ல கதி கிடைக்கும் என்று தாங்கள் அனுக்ரஹிக்க வேண்டும் என்றது. பிறகு அவர்கள் பகவானை பிரார்த்தனை செய்யுங்கள், கிடைத்துவிடும்” என்றார்களாம். அதுவும் நகர்ந்து விட்டது.

இவர்களும் அந்த வீட்டண்டை சென்றதும், அங்கிருந்தவர் இவர்களைக் கண்டு வியந்து, “சற்று தூரத்தில் அழுகை கேட்கிறதே, யார் அழுவது? என்ன விசேஷம்? என்று கேட்டார். அதற்கு ஸ்ரீ சின்ன முத்தண்ணாவாள் நடந்த விவரங்களைக் கூறி, “ஸ்ரீ பெரிய முத்தண்ணாவாள் அனுக்ரஹத்தால் சிறிதும் பிசகு இலாமல் வேதம் கூறினேன். இல்லாவிடில் ஏதேனும் பெரிய கஷ்டம் ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்கள். இதைக்கேட்டு அங்குள்ள எல்லோரும் மிகவும் ஆச்சர்யமடைந்தார்கள்.
பிறகு இவர்கள் ஊருக்கு வந்து ஸ்ரீ பெரிய முத்தண்ணாவாளை நமஸ்கரித்து நடந்தவைகளைக் கூறி, “ தங்கள் அனுக்ரஹத்தால் எக்கு ஓர் கஷ்டமும் ஏற்படாம க்ஷேமமாக வந்து சேர்ந்தேன்” எனக் கண்ணீர் வடித்துக் கூறினார். அவர்களும் ஸ்ரீ சின்ன முத்தண்ணாவாளைத் தூக்கிக் கட்டித்தழுவி ஸமாதானம் செய்த், “ ஸ்ரீ பகவானை நம்பினவர்களுக்கு ஒரு குறையும் வராது என்று கூறினார். அதிலிருந்து ஸ்ரீசின்ன முத்தண்ணாவாள் வெளியூர் போக வேண்டியிருந்தால் நான்கு சிஷ்யர்களை கூட அனுப்புவார்கள்.
ஆதாரம்:–பக்கம் 109, ஸ்ரீ ஜெயமங்கள் ஸ்தோத்திரம் எட்டாம் பாகம்

brahma2

இரண்டாவது கதை: மந்திர சக்தி !

சேங்காலிபுரம் என்ற ஊரில், ஒரு பெரிய கிருஹஸ்தரும், ஆஸ்திகரும், தனவந்தருமான ஒருவருடைய பத்னிக்கு ப்ரும்மரக்ஷஸ் பிடித்திருந்தது. அது வீட்டிலுள்ள யாவருக்கும் துன்பமளித்தது. பல மந்திரவாதிகலைக் கொண்டு அந்த பிரும்மரக்ஷஸை விரட்ட முற்பட்டார்கள். ஆயினும் ஒன்றும் பூர்ணமான பயனளிக்கவில்லை. பிறகு கடைசியாக ஓர் பெரிய மந்திரவாதியைக் கொண்டு பல மஹன்யாச ஜப ஹோமங்கள் இரண்டு மூன்று தினங்கள் செய்தார்கள். கடைசி தினத்தன்று அம்மந்திரவாதி அந்த பிரும்மரக்ஷஸை அழைத்து, “ நீ போகப் போகிறாயா?இல்லையா? உனக்கு ஏதேனும் பலி வேண்டுமா? நீ சீக்கிரம் போகாவிடில் இன்னும் கடுமையாய் ஜபம் செய்து உனக்கு மிகுந்த துன்பத்தை தரப்போகிறேன்”, என்றார். அதுவரை பேசாதிருந்த பிரும்மரக்ஷஸ், “ நான் இவ்வூரில் இருக்கும் பெரிய முத்தண்ணா என்கிற ஸ்ரீ வைத்தியநாத தீக்ஷிதர் இங்கு வந்து அவர் வாக்கினால் எனக்கு நல்ல கதி கிடைக்கும் என்று கூறினால், சீக்கிரமே இவ்விடத்தை விட்டுப் போய்விடுகிறேன்” என்று கூறியது.

அதைக்கேட்ட வீட்டிலுள்ள யாவரும், ஸ்ரீ பெரிய முத்தண்ணாவாளிடம் வந்து “தங்களால்தான் எங்களுக்கு க்ஷேமம் ஏற்படவேண்டும். தங்களைத் தவிர வேறு கதி எங்களுக்கு இல்லை” என்று நமஸ்கரித்து வருந்தி னார்கள். பிறர் துன்பப்படுவதை சகியாத ஸ்ரீ பெரிய முத்தண்ணா வாளும், இம்மாதிரி கார்யங்களில் ஈடுபட மனமில்லது இர்ந்தும், கருணையால் அவர் வீட்டிற்குச் சென்று, அந்த பிரும்மரக்ஷசை, “ ஏன் ஒரு குடும்பத்தை துக்கப்படும்படி செய்யவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பிரும்மரக்ஷஸ் தங்கள் வாக்கினால் எனக்கு நல்ல கதி கிடைக்கும் என்று கூறினால், சீக்கிரமே இவ்விடத்தை விட்டுச்செல்கிறேன்” என்றது.

ஸ்ரீ முத்தண்ணாவாள், உனக்கு பகவான் நல்ல கதி கொடுப்பார் என்றார். உடன் பிரும்மரக்ஷஸ், “தாங்கள் இவ்விதம் கூறியதே போதும். நான் பாவம் நீங்கி, நல்ல லோகம் சென்று விடுவேன். சீக்கிரமே இவ்விடத்தை விட்டுப் போய்விடுகிறேன்” என்றது. அது ஸமயம் அங்கிருந்த மந்திரவாதி முதலியோர்கள், “நீ செல்வது எங்களுக்கு எவ்விதம் தெரியும்?” என்று கேட்டார்கள். அது நான் போகும்போது கொல்லையில் இருக்கும் பெரிய புளியமரத்தின் கிளையை முறித்துச் செல்வேன்” என்றது. இவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவ்விதமே படபவென்று, நடு இரவில் சத்தம் கேட்டதைக் கேட்டு கொல்லையில் ஓடிப்போய் பார்த்தார்கள். பெரிய புளியமரத்தின் பெரிய கிளை காரணமின்றி முறிவதைக் கண்டு வியந்தார்கள்.

பிரும்மரக்ஷஸ் விட்ட ஸ்த்ரீ, பிறகு யாதும் துன்பமில்லாமல் சௌக்கியமாக இருந்தாள். அவர்கள் குடும்பம் முழுவதும், மந்திரவாதியும் ஸ்ரீ பெரிய முத்தண்ணாவாளின் அனுக்ரஹத்தையும் பெருமையையும் எப்பொழுதும் கூறி ஆனந்தமடைந்தார்கள்.
பக்கம் 113, ஜெயமங்கள ஸ்தோத்திரம் எட்டாம் பாகம்

Rakshas_&_Brahmarakshas_idol_in_Veroor_Sri_Dharmashastha_Temple
Rakshas and Brahmarakshas temple in Veroor, Kerala

பிரும்மரக்ஷஸ் என்றால் என்ன?

பிரும்மரக்ஷஸ் என்றால் பிராமணப் பேய்.
பிரம்மரக்ஷஸ் என்பது பேயாக மாறிய பிராமணன் ஆகும். கொடிய பாவம் செய்தாலோ கற்ற வித்தையை யாருக்கும் கற்பிக்காமல் இருந்தாலோ இறந்த பின்னர் பிராமணர்கள் பிரம்மரக்ஷஸாக மாறி மரத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கற்ற விஷயங்கள் அப்படியே நினைவில் இருக்கும் . வருவோர் போவோரிடம் கேள்விகள் கேட்டு சரியான பதில் சொல்லாவிடில் விழுங்கிவிடுமவர் என்ற நம்பிக்கையும் உண்டு. பஞ்சதந்திரக் கதைகள், வேதாளமும் விக்ரமாதித்தனும் போன்ற கதைகளில் பிரம்மரக்ஷஸ் வருகிறது. கேரளத்திலும் கர்நாடகத்திலும் பிரம்மரக்ஷஸ் வழிபாடு உண்டு. கேரளத்தில் ஊருக்கு ஊர் பிரம்மரக்ஷஸ் கதைகள் சொல்லுவார்கள்.

பேயை விரட்டும் இரண்டு சக்தி வாய்ந்த மந்திரங்கள்:
தமிழில் கந்த சஷ்டி கவசம்
ஹிந்தியில் அனுமான் சாலீசா.

நான் எழுதிய முந்தைய பேய்க் கட்டுரைகள்:–

1.Ghost that killed 72 people (posted on 23 December 2012)
2.Ghost in Indus Seals
3.Tamil Poetess Encounter with a Ghost (19-12-2013)

4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய் (டிசம்பர் 23/ 2012 கட்டுரை)
5.தமிழில் பூதம், பேய், பிசாசு (ஆகஸ்ட் 12/ 2013 கட்டுரை)
6.அவ்வையாரை மிரட்டிய பேய் ( டிசம்பர் 19, 2013)
7.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் (ஏப்ரல் 15, 2012)
8.டெல்பி ஆருடமும் குறிசொல்வோரும் (ஆகஸ்ட் 12, 2013)
9. சங்கத் தமிழ் இலக்கயத்தில் யக்ஷிணி, அணங்குகள்

contact swami_4 @yahoo.com