Written by London Swaminathan
Date: 20 October 2017
Time uploaded in London- 11-00 am
Post No. 4319
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
தமிழ் மொழியில் ‘குறிப்பறிதல்’ Divining or Sensing from Appearances) என்பது ஒரு சிறப்பு அம்சம். ஏனைய நாடுகளில் இதை ஒரு நல்ல விரும்பத்தக்க குணமாகப் போற்றவில்லை. ‘மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்’ என்பது தமிழில் உள்ளதை அறிவோம். அவர் எப்படி வரும் பொருள் — நிகழப் போவனவற்றை — உரைப்பார்? அவருக்கு பிறர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனால்தானோ என்னவோ வள்ளுவப் பெருமான் ‘குறிப்பறிதல்’ என்று அமைச்சியலில் ஒரு அதிகாரத்தை உருவாக்கி பத்துக் குறள்களில் கருத்து மழை பொழிந்துள்ளார். அது மட்டும் அல்ல; அத்தகைய ஆற்றல் உடையோரை கடவுள் நிலைக்கு உயர்த்திவிட்டார்! நாலடியார் என்னும் நூலிலும் இப்படி ஒரு கருத்து பாடப் படுகிறது.
முதலில் திருவள்ளுவர் அளித்த, தமிழ் வேதம் ஆகிய, திருக்குறளில் உள்ள கருத்துகளைக் காண்போம்:–
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)
பொருள்:–
சந்தேகத்திற்கு இடங் கொடுக்காமல், பிறர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர வல்லவனைத் தெய்வத்துக்கு சமமாக வைக்க வேண்டும்.
இது கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட தாகவே என்று தோன்றும். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” — என்று வள்ளுவன் சொன்னபோது அதை ராமன், கிருஷ்ணன், சம்பந்தர் ஆகியோரை மனதில் வைத்து நாம் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அடுத்தவர் எதற்காக வந்திருக்கிறார்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிபவரை தெய்வ நிலைக்கு உயர்த்தியது வியப்பைத் தரும்.
அத்தோடு நிற்காமல், அத்தகைய ஒருவரை எப்படியாகிலும், எவ்விலை கொடுத்தும் மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்:-
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் (703) என்று பகர்வார்.
நம்மிடம் ஒருவர் திடீரென்று வந்து நம்மை இந்திரனே சந்திரனே, பாரியே, வா னில் இருந்து பொழியும் மாரியே என்று புகழ்ந்தால் நாம் சிரித்து மகிழ்வோம்; ஆனால் உள் மனது, எதற்காக இந்த ஆள் இப்படி, என்றும் இல்லாத் திருநாளாக இன்று மட்டும் புகழ்கிறான் என்று யோசிப்போம்; சோழியன் குடுமி சும்மா ஆடாது; ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடு போக மாட்டார்; இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புரிந்து கொள்வோம்.
ஆயினும் அவர் எதற்காக இப்படிப் புகழ்ந்தார் என்பதை அவர் வாயில் இருந்து வரும் வரை அறிய முடியாது. ஆனால் பிறர் மனதில் உள்ளதை முகக்குறிப்பின் மூலமும், நடை உடை பாவனை மூலமும் அறிபவர் மனிதரில் அரிதிலும் அரிது; ஆகையால் அத்தகையவர் கிடைத்தால் இரண்டு கைகளாலும் ‘சலாம்’ போட்டு அவரை அமைச்சர் ஆக்கி விடு என்று அரசர்களுக்கு அறிவுரை பகர்கிறார் வள்ளுவர்.
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706) – என்பதும் நமக்குத் தெரியும்.
ஒருவர் முகம் ‘கடுகடு, சிடு சிடு’ என்று இருந்தால் அவருக்கு நம் மீது ஏதோ கடுப்பு என்பதும், அன்றலர்ந்த செந்தாமரை போலச் சிரித்தால் மகிழ்ச்சி என்றும் அறிவோம். ஆனால் அப்படி முகக் குறிப்பால் உணர்த்தாவிடினும் அறிபவன் அறிஞன்.
‘’கண்களே மனதில் உள்ளதைச் சொல்லிவிடும்’’– என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி உண்டு. சிசரோ என்ற அறிஞர் ‘’ஆத்மாவின் சித்திரமே ஒருவரின் முகம்’’ என்று சொல்லுவார். பரத நாட்டியத்திலும் முக பாவம் மூலம், குறிப்பாக கண் அசைவு மூலம், உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதையும் அறிவோம். ஆயினும் இப்படி வெளிப்படையாக இல்லாமல் ஆள் வந்தவுடனே, இவன் எதற்காக வந்திருக்கிறான், என்ன செய்யப் போகிறான், என்ன எதிர் பார்க்கிறான் என்று அறிபவன் சிறப்பிடம் பெருவான்.
இதை எதிரொலிக்கும் பாடல் நாலடியாரிலும் உள்ளது:–
ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் — ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மையுடையார்
குறிப்பின் கீழ்ப்பட்ட துலகு — நாலடியார்
பொருள்:-
தாம் மேற்கொண்ட செயலை, அது முடியும் வரை, மனத்தில் வைத்துக் கொண்டு, வெளிப்படையாக சொல்லாதவன் அறிஞன்; பிறர் முயற்சியினை அவர்தம் அ ங்கங்களின் குறிப்பினால் ஆராய்ந்து அறிவர் அறிஞர்; அத்தகையோரின் கீழ் உலகமே அடங்கிக் கிடக்கும்.
–சுபம்–