மனமே அனைத்துப் புலன்களின் இயக்கத்திற்கும் காரணம்!

anuman 2 facebook

ராமாயண வழிகாட்டி அத்தியாயம் – 13
ச.நாகராஜன்

இலங்கையில் சீதையைத் தேடி அலைந்த அனுமன் பானபூமியில் பல பெண்கள் அலங்கோலமாக நிலை குலைந்து படுத்துக் கிடப்பதைக் காண்கிறான்.

“உறங்கிக்கொண்டிருக்கும் சத்ரு மன்னனின் மனைவிகள் சமூகத்தினை எனது இந்தக் கண்களால் பார்த்ததும் கொடிய பாவமாக ஆகுமே” என்று சிந்தித்த அனுமன் அதற்கான காரணத்தையும் அலசி ஆராய்ந்து தன் மேல் தவறு இல்லை என்பதை நிச்சயிக்கிறான். ஏனெனில் காமக் கண்களுடன் அவர்களைத் தேடி வந்து அவன் பார்க்கவில்லை. சீதையின் மீதுள்ள பக்தியினால், அன்னையைத் தேட வேண்டிய அவசியத்தால் அவர்களைப் பார்க்க நேரிட்டது.

சுந்தரகாண்டம் பதினோராம் ஸர்க்கம் 36,37,38ஆம் ஸ்லோகங்களைப் பாப்போம்:

பரதாரவரோதஸ்ய ப்ரஸூப்தஸ்ய நிரீக்ஷணம் I
இதம் கலு மமாத்யர்த்தம் தர்மலோபம் கரிஷ்யதி II

ந ஹி மே பரதாராணாம் த்ருஷ்டி விஷயவர்த்திநி:

அயம் சாத்ர மயா த்ருஷ்ட: பரதார பரிக்ரஹ:

(அத்யர்த்தம் தர்மலோபம் – கொடிய பாவம்; விஷயவர்த்திநி: ந- உலகியல் நோக்கப்படியானது இல்லை; பரதார பரிக்ரஹ: ச- உத்க்ருஷ்டரின் பத்னியிடத்தில் பக்தியால் உண்டானதே)

தனிமையில் தாமாய் ஆலோசனை செய்யும் (ஏகாந்த சிந்தஸ்ய) பெருந்தன்மையுள்ள அவருக்கு (மனஸ்விந: தஸ்ய) கார்யத்தின் முடிவை ஸுசிப்பிக்கும் (கார்ய நிஸ்சய தர்சிநீ) நிச்சயமான இதர எண்ணம் (நிஸ்சிதா அன்ய சிந்தா) புதிதாய் புலப்பட்டது (புன ப்ராதுரபூத்)

காமம் த்ருஷ்டா மயா ஸர்வா விஸ்வஸ்தா ராவண ஸ்த்ரிய: I
ந ஹி மே மநஸ; கிஞ்சித் வைக்ருத்ய முபபத்யதே II

அபாயத்திற்கிடமில்லை என்கிற நம்பிக்கையுடன் இருக்கும் ராவணனின் பத்னிகள் அனைவரும் என்னால் பார்க்கப்பட்டார்கள்;
அப்படியிருந்தும் எனது மனதிற்கு மாறுபாடு சற்றும் உண்டாகவில்லை.

“மே மனஸ: வைக்ருத்யம் கிஞ்சித் உபபத்யதே” (எனது மனதிற்கு மாறுபாடு சற்றும் உண்டாகவில்லை.) என்று அனுமன் சிந்திப்பதிலிருந்தே அவன் எப்படிப்பட்ட உத்தமன் என்பதும் காமத்தைக் கடந்தவன் என்பதும் தெரிகிறது.

அனுமன் அடுத்தாற் போல எண்ணுவதே உலகின் மிகப் பெரும் உண்மையை அறிவிக்கும் ஸ்லோகமாக அமைகிறது;

மநோ ஹி ஹேது: ஸர்வேஷா மிந்திரியாணாம் ப்ரவர்த்ததே I
ஸுபாஸுபா ஸ்வவஸ்தாஸு தச் ச மே ஸுவ்யவஸ்த்திதம் II
(சுந்தரகாண்டம் ஸ்லோகம் 42 11ஆம் ஸர்க்கம்)

ஸுபாஸுபாசு – நல்லவை தீயவை ஆகிய இரு வகையான
அவஸ்தாஸு – நிலைகளில்
ஸர்வேஷாம் – எல்லா
இந்திரியாணாம் – புலன்களின்
ப்ரவர்த்ததே –தூண்டுதலில்
மன: ஹி – மனம் தான்
ஹேது – ஹேது
தத் ச –அதுவோ
மே – எனக்கு
ஸுவ்யவஸ்த்திதம் – சிதறாமல் நன்கு ஸ்திரமாக இருக்கிறது.

anuman val

அந்தப்புரத்தில் ரூப லாவண்யமுள்ள அழகிய பெண்களைப் பார்த்த போதிலும் கூட அனுமனின் மனம் சிதறவில்லை; ஸ்திரமாக இருக்கிறது. புலன்களின் தூண்டுதலைச் செய்வது மனமே! அது நன்கு உறுதியாக இருந்தால் அவனே பேராண்மை படைத்தவன்.
வள்ளுவன் திருக்குறளில் ‘பிறனில் விழையாமை’ என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறான். 15ஆம் அதிகாரமாக அமையும் இதில் எட்டாவது குறள் இது:

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

பிறன் மனைவையை விரும்பிக் கண் எடுத்தும் பார்க்காத பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல; பொருந்திய ஒழுக்கமும் கூட என்பதே இதன் பொருள்.

வள்ளுவனின் உரைகல்லில் அனுமன் சான்றோனாகவும், அறவோனாகவும்,பேராண்மை படைத்தவனாகவும் காணப்படுகிறான்.
மனமே அனைத்திற்கும் காரணம் என்பதை உபநிடதமும் (மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ: மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்– அம்ருத பிந்து உபநிடதம்) அறிவியலும் வலியுறுத்துகின்றன.

ஆக செம்மையான மனத்தைக் கொண்ட அனுமனைத் துதித்தால் நமக்கும் மனம் செம்மையாகும். அனுமனின் அற்புதமான மனத்தை விவரிக்கும் ஸ்லோகம் சுந்தர காண்டத்தில் உள்ள அருமையான ஸ்லோகங்களுள் ஒன்று!
************
Contact london swaminathan at swami_48@yahoo.com
Pictures are taken from facebook.