மனத்தின் ஏழு நிலைகள்

shanakara face

By London Swaminathan
Post No. 865 Date:

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். அதில் ஒரு கேள்வியை மட்டும் காண்போம்.

யார் தூய்மையானவர்?

யாருடைய மனம் சுத்தமாக இருக்கிறதோ அவரே சுத்தமானவர்.
ஆதிசங்கரரின் மேற்கண்ட பதில் அருமையான பதில்.. மனம், சொல், உடல் (மனோ வாக் காயம்) மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இந்து மதம் ஒன்றிலேயே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் மந்திர சித்தி உண்டாகும். உடலைத் தூய்மையாக வைப்பது எளிது. யானை முதல் காகம் வரை குளிப்பதைப் படத்தில் காண்கிறோம்..மனதைத் தூய்மையாக வைப்பதுதான கடினத்திலும் கடினம்.

காமம், க்ரோதம் (கோபம்), லோபம் (பேராசை) ஆகிய மூன்று தொடர்பாக நம் மனத்தில் வரும் எண்ணங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு, பின்னர் நாம் அதைப் படிக்க முயன்றால் வெட்கப்பட்டு பாதியிலேயே கிழித்து எறிந்து விடுவோம்.அவ்வளவு விகாரமான எண்ணங்கள் வருகின்றன. இதுதான் சந்யாயாசிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

ராம பிரானுக்கு விதிகளை மீற எவ்வளவோ வாய்ப்பு கிடைத்த போதும் அவர் தர்மத்தில் இருந்து இம்மியும் பிறழவில்லை. ஆகையால்தான் ராமாயணம் காலத்தால் அழியாத காவியமாக விளங்குகிறது.

இந்துக்கள் தினமும் வழிபாடு முடித்தவுடன்
காயேன வாசா மனசேந்த்ரியைர்வா புத்யாத்மனேவா
ப்ரக்ருதேத் ஸ்வபாவாத் கரோமி யத் சகலம் பரஸ்மை நாராயணேத் இதி சமர்ப்பயாமி

என்று சொல்,செயல்,சிந்தனை மூன்றினாலும் செய்த பாவங்கள் உடலின் இயற்கை சுபாவத்தால் நிகழ்ந்தது என்று மன்னிப்பு கேட்டு அதையும் இறைவனுக்கே சமர்ப்பித்து விடுவர்.

யக்ஷப் ப்ரஸ்நத்தில் இப்படி ஒரு கேள்வி:
எது ஸ்நானம்?
தருமனின் பதில்: மன அழுக்கைப் போக்குதல்.

பாரதி பாடுகிறான்:
துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

என்று பாடி மாரியம்மாவைச் சரண்புகுந்தோம் என்று முடிக்கிறார். இறைவனின் திருப்பாதங்களை எண்ணிச் சரணடைவதே மனம் வெளுக்க ஒரே வழி!

மனம் பற்றி வள்ளுவன் கூறும் கருத்துகளும் ஒப்பிடற்பாலவை:

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (457)= மனத்தின் தூய்மை உலகில் உள்ள எல்லோருக்கும் இன்பம் தரும்
மன நலத்தின் ஆகும் மறுமை (459)= மனத்தின் தூய்மை, மறு பிறப்பிலும் பலன் தரும்
மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி (453)= மனம் அறிவை வளர்க்கும்
மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் (456)= மனம் தூய்மை உடயவர்களுக்கு நல்ல புகழும் நல்ல குழந்தைகளும் உண்டாகும்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக

YOU ARE WHAT YOU THINK ‘யூ ஆர் வாட் யூ திங்க்’= மனம் போல மாங்கல்யம் என்று சொல்லி விடுவர்.

புத்தரும் தம்மபதத்தில் கூறுகிறார்:
நம்முடைய கடந்த கால சிந்தனைகளே நம்மை இன்றைக்கு இந்த நிலையில் வைத்துள்ளது. இப்போது நாம் நினைப்பது நாளைய நிலைமையை தீர்மானிக்கிறது
ஒருவன் தீய எண்ணங்களுடன் செயல்பட்டால் வண்டி மாட்டைத் தொடர்ம் வண்டிபோல கஷ்டங்கள் நம்மைத் தொடரும்.(1)

தூய மனதுடன் செயல்பட்டால், ஒருவனைத் தொடரும் நிழல் போல சந்தோஷம் அவனைத் தொடரும்.(2)

rkp shiva

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டா னம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் புற்று நோய்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்று நோயால் ‘கஷ்டப்பட்டு வந்தார்” சசாதர பண்டிதர் அவரைப் பார்த்து,
ஸ்வாமி, யோக சக்தியால் நீங்கள் ஏன் நோயைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்
ராமகிருஷ்ணர்:– பகவானுக்கு என்று அர்ப்பணம் செய்துவிட்ட மனதை இந்த அற்ப உடலின் பொருட்டு எப்படி நான் திருப்புவேன்?

சசாதரர்: ஆனால் வியாதியைத் தீர்த்தருள வேண்டும் என்று ஸர்வேஸ்வரியையாவது பிரார்த்திக்கக் கூடாதா?

ராமகிருஷ்ணர்::– ஸர்வேஸ்வரியை நினைத்துவிட்டால் எனது ஸ்தூல சரீர நினைவே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது அச் சரீரத்தில் இருப்பது இல்லை. ஆதலால் சரீரத்தப் பற்றி ஒன்றையும் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாதவனாக இருக்கின்றேன்.

இது போன்ற உயர் நிலை அடைய இடைவிடாத பிரார்த்தனையும் யோகப் பயிற்சியும் தேவை.

Contact swami_48@yahoo.com