
Post No. 9722
Date uploaded in London – –12 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும் ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர், பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.

ராமன், கிருஷ்ணன் போன்ற கறுப்புத் தோல்படைத்த மன்னர்களையும் அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். மற்றொரு காகம் போல கருப்புத் தோல் படைத்த கிருஷ்ண த்வைபாயன வியாஸரையும் ‘பகவான்’ என்றும் விஷ்ணுவின் மறு அவதாரம் என்றும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் துதி பாடுகின்றன. இவை எல்லாம் மனிதனை, குறிப்பாக கவிஞர்களை, தெய்வீக நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டுகின்றன.
இதை வள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்….
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50
நிலவுலகத்தில் , இல்லற வாழ்க்கையை , வாழவேண்டிய அறநெறிப்படி நின்று வாழ்பவன் மண்ணுலகத்தில் வாழ்ந்தாலும், வானுலகத்தில் வாழும் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுவான்.
இதனால்தான் நாம் சம்பந்தர், ஆதி சங்கரர் போன்றோரையும் கடவுளின் அவதாரமாக அல்லது அம்சமாகக் கருதுகிறோம்.
திருக்குறள் 413–ல் மீண்டும் இதே கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
செவியுணவிற் கேள்வியுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து – குறள் 413
செவிக்கு உணவாகிய வேதத்தை (கேள்வி=சுருதி) உடையவர்கள் (பிராமணர்கள் )உலகத்தில் வாழ்ந்தாலும் அவிஸ் என்னும் யாக உணவை உண்ணும் தேவரோடு ஒப்பிட்டுக் கூறத்தக்கவர்களே .
பிராமணர்களை ‘பூ சுரர்’ , ‘பூலோக தேவர்கள்’ என்று மநு முதலிய சட்டப்புஸ்தகங்கள் கூறுவதை வள்ளுவர் அப்படியே மொழி பெயர்த்து விட்டார். அவி = ஹவிஸ் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவதில் இருந்து இது தெரிகிறது. ஆயினும் ராமர் கிருஷ்ணர் போன்றார் பிராமணர் அல்ல. ‘வாழ்வாங்கு வாழ்பவர்’ எல்லோரும் தெய்வங்களே.
வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது சதபத பிராஹ்மண நூலில் உளது.
யே ப்ராஹ்மணாஹா சுச்ருவாம்ஸோ
அனூ சானாஸ்தே மனுஷ்யே தேவாஹா
xxx
வித்வாம்ஸோ ஹி தேவாஹா (அறிஞர்களும் தேவர்களே)
2-2-2-6; 2-4-3-14 ; 3-7-3-10, சதபத பிராமணம்
ஜாதி என்பதை மறந்துவிட்டு அறிவை நாடும் எல்லோரும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
இந்தக் கருத்துக்கள் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்திராது
இதோ ரிக்வேதப் பாடல்கள்/ மந்திரங்கள். இதைத்தான் பிற்கால பிராஹ்மண நூல்களிலும் திருக்குறளிலும் காண்கிறோம்
ரிக்வேதம் 1-20-8 ல்
“வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் இருந்தார்கள் ; அவர்கள் தங்கள் நற்செயல்களால் வேள்வியில் தேவர்களோடு பங்கு கிடைக்கப்பெற்றார்கள்” என்று ரிஷி மேதாதிதி கண்வன் பாடுகிறார் .
இது குறள் 413 போலவே உளது.
ரிபுக்கள் யார் ?
ரிக்வேதத்தில் வரும் தெய்வங்களில் ரிபுக்கள் என்ற பன்மைச் சொல்லும் உளது. இவர்கள் சுதன்வான் என்பவருடைய 3 மகன்கள். இவர்கள் அங்கீரஸ் என்பவர்களின் வழித்தோன்றல்கள். ரிபு, விபவான், வாஜா என்ற மூவரையும் கூட்டாக ரிபுக்கள் என்பர். இவர்கள் தங்கள் இடையறா முயற்சியால் தெய்வீக அந்தஸ்த்தைப் பெற்றனர் சூரிய மண்டலத்தில் இவர்கள் வசிக்கின்றனர். சூரியனின் ஒளிக்கதிர்கள் என்றும் இவர்களை ரிஷிகள் துதி பாடுகின்றனர் மனிதன் தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு என்று ரிக் வேத பாஷ்யம் (உரை) இயம்புகிறது.
பிற்காலத்தில் உபநிஷத்துக்களில் இந்தக் கருத்து மிகவும் தெளிவாகவே உள்ளது. ‘தத் த்வம் அஸி’ , ‘அஹம் பிரம்மாஸ்மி’ (நீயே அது; நானே பிரம்மம்) போன்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
–subham—

yags-கடவுள், தெய்வம், மனிதன், தெய்வப்புலவர்