கைக்கு அழகு புத்தகம்! புஸ்தகம் ஹஸ்த லட்சணம் !!

books

Written by London swaminathan

Research Article No. 1681; Dated 28 February 2015.

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” – ஔவை

சம்ஸ்கிருதத்தில் அழகான ஒரு பொன் மொழி—“கைக்கு அழகு புத்தகம்!”– ஒருவன் படிக்கும் புத்தகத்தைக் கொண்டு அவன் யார் என்பதைக் கணித்து விடலாம். யாரையாவது ஒருவரின் ‘பெர்சனாலிட்டி’ என்ன என்று தெரிய வேண்டுமா? நீங்கள் நேரடியாக அவரைக் கேட்டால் அது இங்கிதமாக இருக்காது. பேச்சு வாக்கில் நீங்கள் படித்த ஏதாவது சில புத்தகங்களின் பெயரைச் சொல்லிவிட்டு, “உங்களுக்கு இது பிடிக்குமா? நீங்கள் கடைசியாக என்ன படித்தீர்கள்?”– என்று கேளுங்கள். அவருடைய குணநலன்களைக் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வையார் சொல்கிறார்:

நீரளவே யாகுமாம் நீராம்பல் தன் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

ஆயினும் வள்ளுவர் விட்ட எச்சரிக்கையையும் மனதிற் கொள்ளவேண்டும்: கற்றவர் எல்லோரும் நல்லவர் அல்ல. கற்கக் கசடற; கற்ற பின் நிற்க தற்குத் தக!

பெரிய பெரிய பேச்சாளர்களும், சாமியார்களும், அரசியல்வாதிகளும் நெய் ஒழுக , தேன் ஒழுக பேசுகிறார்கள். சுய வாழ்விலோ பெரிய பூஜ்யம்! ஊருக்குத் தாண்டி உபதேசம்; அது நமக்கல்ல – என்ற கதையாக இருக்கிறது!

girl-carrying-books-236x300

நூல் பற்றி மனு செப்பிய பொன்மொழி!

2000 ஆண்டுகளுக்கு முன் மனு ஸ்மிருதியில் ஒரு அழகான ஸ்லோகம் வருகிறது. மனுவின் பெயர் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே வருவதால் அவர் மிகவும் பழைய அறிஞர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் வடிவில் மனு ஸ்மிருதி 2300 ஆண்டு பழமை வாய்ந்தது. அவர் சொல்வதாவது:

புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களைவிட, அதைப் படிப்பவர்கள் மேல்;

படித்த விஷயங்களை நினைவிற் கொள்பவர்கள், புத்தத்தைப் படிப்பவர்களை விட மேலானவர்கள்;

நினைவு வைத்துக் கொள்பவர்களை விட, அதைப் புரிந்து கொண்டவர்கள் மேலானவர்கள்;

புரிந்து கொண்டவர்களை விட அதை வாழக்கையில் செயல்படுத்துவோர் மேலானவர்கள்!

என்ன அற்புதமான வரிகள்! கற்றால் மட்டும் போதுமா? அதைப் புரிந்து வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டுமல்லவா?

புராதன உலகில் அதிகமான புத்தகங்கள் உடைய நாடு இந்தியா? காகிதத்தின் நடுவில் கி.மு 1000 என்று எழுதி ஒரு கோடு போடுங்கள்! அதற்கு மேலாக எழுத வேண்டுமானால் வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் மட்டுமே இருக்கும். இப்போது நாம் பயன்படுத்தும் எந்த மொழி நூலும் அங்கே காணமாட்டாது! பைபிளின் பழைய ஏற்பாடு, மோசஸின் பத்து கட்டளைகள் முதலியன எழுத்து வடிவு பெற்றது கி.மு 945! கிரேக்க மொழியில் ஹோமர் ‘ஆடிஸி’, ‘இலியட்’ காவியங்களை எழுதியது கி.மு 800 ல்!. தமிழ் என்னும் குழந்தை, லத்தீன் என்னும் குழந்தை அப்போது பிறக்கக்கூட இல்லை!

ஜில்காமேஷ் போன்ற சுமேரியப் பிதற்றல்கள்—இப்போது பயன்பாட்டில் இல்லை; அவை ‘புத்தகம்’ என்னும் இலக்கண வரையரைக்குள் வாரா!

the_adi_granth_

வழிபடும் நூல் ஆதிக் கிரந்தம்

உலகில் புத்தகததை வழிபடும் ஒரே நாடு இந்தியாதான்! சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் போனால் அங்கே அவர்களுடைய புனித நூலான ஆதிக்கிரந்தம் வழிபடுவதைப் பார்ப்பீர்கள்! தென்னக கோவில்களில் உற்சவ மூர்த்திக்கு என்ன மரியாதை உண்டோ அததனையும் கொடுத்து குரு-வாக வழிபடுகின்றனர். பத்து சீக்கிய குருமார்களுக்கு மேல் இனி இந்தப் புத்தகமே குரு என்று அறிவித்துவிட்டார் கடைசி குருவான குரு கோவிந்த சிங் (1666—1708)!

வட இந்தியாவுக்குப் போனால் பலருடைய பூஜை அறைகளில் வால்மீகி ராமாயணமும், துளசி ராமாயணமும், பகவத் கீதையும் பூஜை அறையில் வழிபடும் இடத்தில் இருக்கும். தென் இந்தியாவில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தத்தைக் காலையில் குளித்து விட்டு ‘மடி’யாகப் படித்துப் பாராயணம் செய்வோரைக் காணலாம்.

Bhagavad_gita_As_It_Is_Books

நூலுக்குப் பிறந்த நாள் விழா

உலகில் ஒரு புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடும் நாடும் இந்தியதான்! பகவத் கீதை என்னும் அற்புதமான நூலில் இந்து மதக் கருத்துகள் அனைத்தும் 700 ஸ்லோகங்களில் அடக்கப்பட்டு விட்டன. இது தோன்றிய மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதஸி ஆண்டுதோறும் பகவத் கீதையின் பிறந்த நாளாகக் (கீதா ஜயந்தி) கொண்டாடப்படுகிறது.

இப்படிப் பல்லாயிரம் புதுமைகள் இருப்பதால்தான் இன்றும் கூட இந்தியாவைப் பார்க்கும் வெளி நாட்டினர் வியக்கின்றனர்!

family-motorcycle-india

சூத்ரா = சுரா = தோரா

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்றும் — இவ்விரு மொழிகளும் பாரதீய சிந்தனையில்- இந்திய மண்ணில்- மலர்ந்த மலர்கள் என்றும் சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். நூல் தொடர்பான இன்னும் ஒரு விஷயத்தை இப்போது காண்போம்:

தமிழில்

நூல் = துணி நெய்யும் நூல்

நூல் = புத்தகம்

வடமொழியிலும்

சூத்ர = நூல் (தாலி=மங்கள சூத்ர)

சூத்ர = புத்தகம் ( பிரம்மசூத்திரம், பாணீனீய சூத்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், நாரத பக்தி சூத்திரம், தொல்காப்பிய சூத்திரம்)

இந்த சூத்ர என்னும் சொல் எகிப்திய பிரமிடு கட்டுமானப் பணியில் பயன்படுத்தப் பட்டதால் எகிப்திய பிரமிடுகளைக் கட்டியோர் இந்தியர்களே என்று இதே பிளாக்–கில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டேன். அதாவது இந்து சமய பொறியியல் அறிஞர்கள், ஒரு கட்டிடம் நேராக செங்குத்தாக இருக்கிறதா என்பதைக் காண கையில் நூல் (சூத்ர) பிடித்துக் காண்பர். நிற்க!

இந்த சூத்ர என்னும் வடமொழிச் சொல் அராபிய மொழியில் ‘சுரா’ என்றும் ஹீப்ரூவில் (எபிரேயம்) ‘தோரா’ என்றும் மருவின. எப்படி நாம் பிரம்மசூத்திரத்திலும், பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்திலும் பயன் படுத்துகிறோமோ அப்படி குரானில் ‘சுரா’ என்பதை அத்தியாயம் என்னும் பொருளில் பயன் படுத்துவர். பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியை யூதமத அறிஞர்களின் வியாக்கியானங்களோடு பயன்படுத்தும் பகுதி –‘தோரா’.

மொழியியல் விதிகளின் படி ‘த’—வும் ‘ஸ’—வும் இடம் மாறும்! வித்தை என்பதை தமிழ் பாடல்களில் விச்சை என்பர். ஆங்கிலத்தில் டி. ஐ. ஓ. என். என்ற நான்கு எழுத்தில் முடியும் சொற்களை ‘ஷன்’ என்றே உச்சரிப்பர் (எ.கா. –எஜுகேஷன்)

ச/ஷ/ஸ = த/ ட

ramayan

ஆக செந்தமிழும், செம்மொழியும் (ஸம்ஸ்கிருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி = செம்மொழி= ஸம்ஸ்கிருதம்) ஒரே தாய்க்குப் பிறந்த இரு குழந்தைகள். ஸம்ஸ்கிருதம்- பெரிய அண்ணன், தமிழ்- சின்னத் தம்பி!

இதற்கு இன்னும் நூற்றுகணக்கான எடுத்துக் காட்டுகள் உள்ளன. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், புறநானூற்றிலும் பல இடங்களில் வரும் “அறம், பொருள், இன்பம்” என்பது பாரதீய சிந்தனையில் மலர்ந்த அரிய பூக்கள். இது இரு மொழியிலும் அப்படியே இருப்பது ஒரே தாய்க்குப் பிறந்த இரு மொழிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும்:

தர்ம அர்த்த காம மோக்ஷம்=

அறம் (தர்ம), பொருள் (அர்த்த), இன்பம் (காம), வீடு (விடுதல்) மோக்ஷம்.

தர்ம என்பது இந்தி மொழியில் ‘தரம்’ என மருவியது போல தமிழில் ‘அறம்’ என மருவியது!

பொருள் (அர்த்த) என்பது சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் இரு பொருளில் ( பணம், அர்த்தம்) என்றே பயன்படுத்தப் படுகின்றன.

காம என்ற சொல் சங்க இலக்கியம் முதல் இன்று வரை அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. சில இடங்களில் இன்பம் என்ற மொழிபெயர்ப்பும் உண்டு.

தொல்காப்பியம், திருக்குறள், புறநானூற்றில் காணப்படும் “தர்மார்த்காமமோக்ஷ” சம்ஸ்கிருத இலக்கியத்தில் பல்லாயிரம் இடங்களில் வருகிறது. ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை – சொல் ஆக்கத்தில் கூட – ஒரே சிந்தனை இருக்குமானால் இவர்கள் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்கிருதம்!!

நூல் பல கல்: அவ்வையின் ஆத்திச் சூடி!