காளிதாசன் காவியங்களில் பெண் கல்வி (Post No.3694)

Written by London swaminathan

 

Date: 5 March 2017

 

Time uploaded in London:- 14-20

 

Post No. 3694

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணவ மாணவியர் கல்விப் பயிற்சி பற்றி காளிதாசன் கூறும் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. இந்த அளவுக்கு உயரிய கருத்துகள், இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இருந்ததா என்பது கேள்விக்குறியே. நமக்கு இணையாக அருகில் வருவது கிரேக்க பண்பாடு ஒன்றுதான். சாக்ரடீஸ் (Socrates), பிளாட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) ஆகியோர் இது பற்றிச் சிந்தித்துள்ளனர். ஆயினும் அவர்களுக்கெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உபநிஷத்துகளின் முன்னால் — அவர்கள் மலைகளுக்கு முன் நின்று கொசுக்கள் போலவே காணப்படுவர். கேள்வி கேட்டு அதற்குப் பதில் சொல்லும் முறைக்கு — தடை எழுப்பி விடை காணும் பாணிக்கு — சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்று பெயர் சூட்டீனர் வெள்ளையர். ஆனால் அது உபநிஷதத்திலேயே உள்ளது!

 

காளிதாசன் கருத்துக்களைக் கண்போம்:

யார் நல்ல ஆசிரியர் என்பதை அவன் மாளவிகாக்னிமித்திரம் (மாளவிகா+ அக்னிமித்ரம்)  நாடகத்தில் செப்புவான்:-

நல்ல ஆசிரியர்க்கு அறிவும் அதைக் கற்பிக்கும் திறனும் வேண்டும் என்பான்.

 

“சிலர் நன்றாக நடிப்பார்கள்; இன்னும் சிலர் அந்தக் கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பர்; இவ்விரு திறமைகளிலும் யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்களே ஆசிரியர்களிடத்தில் முதலிடம் பெறுவர் (1-16)

 

ஸ்லிஷ்டா க்ரியா கஸ்யசித் ஆத்மசம்ஸ்தா

சங்க்ராந்திர் அன்யஸ்ய விசேஷயுக்தா

யஸ்யோபயம் சாது ச சிக்ஷகாணாம்

துரி ப்ரதிஷ்டாபயிதவ்ய ஏவ

–மாளவிகாக்னி மித்ரம் 1-16

 

பாத்திரம் அறிந்து தானம் செய் – என்பது  தமிழ்ப் பழமொழி. இது கல்வி கற்பிப்பதிலும் பொருந்தும்.

புத்திசாலி மாணவர்களுக்குப் போதிக்கும் விஷயங்கள் கடலில் முத்துச் சிப்பியின் வாயில் விழுந்த மழைத்துளிகளுக்குச் சமம் என்பான்.

(சுவாதி நட்சத்திரத்தன்று முத்துச் சிப்பிகளின் வாயில் விழும் மழைத் துளிகள் முத்து ஆகும் என்பது இந்தியர் நம்பிக்கை; முத்து பற்றிய எனது கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்)

 

பாத்ர விசேஷம் ந்யஸ்தம்

குணாந்தரம் வ்ரஜதி சில்பமாதாதுஹு

ஜலமிவ சமுத்ர சுக்தௌ

முக்தா பலதாம் பயோதரஸ்ய

–மாளவிகாக்னி மித்ரம் 1-6

சாதாரண இடங்களில் மழை விழும்போது அதனால் பயன் குறைவு. வறண்ட  நிலத்தில் விழுந்தாலோ பூமி உறிஞ்சிவிடும். எங்கு மழை விழுகிறதோ அதைப் பொறுத்தே பலன். இதே போல ஆசிரியரும் ஒரு வகுப்பிலுள்ள 30, 40 பேருக்குப் பாடம் போதிக்கிறார். அவர் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி. இருந்தபோதிலும் புத்திசாலியான ஓரிருவரிடத்தில் அது முத்துக்களை உண்டாக்குகின்றது.

 

நல்ல அருமையான உவமை. மழையிடமோ ஆசிரியரிடமோ பாரபட்சம் இல்லை; பெறுவோரின் நிலையைப் பொறுத்து அதன் பயன் அமையும்.

கல்வியின் நோக்கம் என்ன?  

கல்வியின் நோக்கம் என்ன?  மேலை நாட்டு மாணவனிடம் கேட்டால் நல்ல சம்பளம் வாங்க நல்ல கல்வி என்பான். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்; கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு; “உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு” என்பான். ஆனால் உண்மையில் கல்வி என்பது சாகாவரம் தருவதற்காகும். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவனும் காளிதாசனும் சொல்வர்:-

 

சைசவே அப்யஸ்த வித்யானாம் யௌவனே விஷயைஷிணாம்

வார்த்தகே முனிவ்ருத்தீனாம் யோகேனாந்தே தனுத்யஜாம்

–ரகுவம்சம் 1-8

 

“இளம் வயதில் கற்கப்பட்ட கல்வியை உடையவர்களும், வாலிபப்  பருவத்தில் சுகத்தை விரும்புபவர்களும் வயோதிகப் பருவத்தில் முனிவர்களின் தொழிலை (தவம்) உடையவர்களும் முடிவில் ஈசுவர தியானத்தினால் உடலை விடுபவர்களுமான ரகுவம்சவத்தரின் சரிதத்தை கூறப்போகிறேன்”.

 

இளமையில் கற்கும் கல்வி, மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே காளிதாசன் கண்ட உண்மை.

 

பெண்களின் கல்வி

குமார சம்பவத்தில் (1-30) உமா கற்ற கல்வி பற்றிக் காளிதாசன் கூறுவதால் அக்காலத்தில் பெண்களின் கல்வி பற்றி அறிய முடிகிறது.

“பூர்வ ஜன்மத்தில் கற்றதெல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தன. கல்வி போதிக்கப்பட்டவுடன் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. இது இலையுதிர்க் காலத்தில் அன்னப் பறவைகள் கங்கை நதிக்குத் திரும்புவது போலவும், இரவு நேரத்தில் மூலிகைச் செடிகளுக்கு அவற்றின் ஒளி திரும்பிவருவது போலவும் இருந்தது”.

(இரவு நேரத்தில் ஒளிவிடும் தாவரங்கள் பற்றிக் காளிதாசன் பல இடங்களில் பாடியுள்ளான்).

 

தாம் ஹம்சமாலாஹா சரதீவ கங்காம்  மஹௌஷதிம் நக்தமிவாத்ம பாசஹ

ஸ்திரோபதேசாமுபதேசகாலே ப்ரபேதிரே ப்ராக்தன ஜன்மவித்யாஹா (1-30)

 

காளிதாசன் படைத்த பெண்களில் சகுந்தலை, இயற்கையிடமிருந்தும், கண்வ முனிவரிடமும் கல்வி கற்றாள்.

 

மேகதூதத்தில் யக்ஷனின் மனைவி ஓவியம் தீட்டல், கவிதை புனைதல், சங்கீதம் ஆகியவற்றில் வல்லவள்!

 

மாளவிகாக்னிமித்ரத்தில், மாளவிகா ஒரு சிறந்த நர்தகி, பாடகி.

 

பொதுவாகப் பெண்கள் விவேகமும், பகுத்தறிவும் உடையவர்கள் என்பது காளிதசனின் கணிப்பு:

 

நிசர்கநிபுணாஹா ஸ்த்ரியஹ (மா.அ. 2)

 

பெண்கள் லட்சுமியின் அவதாரம்; அவர்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் அவனுடைய பொன்மொழிகள்:

லக்ஷ்மீரிவ குணோன்முகீ (ரகுவம்சம் 12-26)

மனைவி என்பவள் இல்லுறை தெய்வம், ஒரு அமைச்சர், நம்பிக்கைக்குரிய ரஹசியங்களைப் பகிரும் நண்பன், கணவனின் சிஷ்யை, தூய்மையின் உறைவிடம், வீரத் தாய் என்றெல்லாம் புகழ்வான். இவை எல்லாம் பெண்களை மிகப் பெரிய மேதாவிகளாகக் காட்டுகின்றன:-

 

க்ருஹிணீ சசிவஹ சகீ மிதஹ ப்ரியசிஹ்யா லலிதே கலாநிதௌ

கருணாவிமுகேன ம்ருத்யுனா ஹரதா த்வாம் வத கிம் ந மே ஹ்ருதம்

–ரகுவம்சம் 8-67

 

நீ எனக்கு மனைவியாகவும் மந்திரியாகவும், தனிமையில் துணைவியாகவும், மனோஹரமான கலைகளின் பிரயோஹத்தில் அன்பிற்குகந்த மாணவியாகவும் இருந்தாய்; ஆகையால் உன்னைக் கவருகின்ற யமன் என்னிடமிருந்து எதைத்தான் பறிக்கவில்லை? சொல் (இந்த எல்லா விஷயங்களையும் நான் இழப்பேன்)

 

 

பத்ரார்சி வீரபத்னீனாம் ஸ்லாக்யாயாம் ஸ்தாபிதா துரி

வீரசூரிதி சப்தோயம் தனயாத்வாம் உபஸ்திதஹ

-மாளவிகா. 5-16

“உன்னுடைய கணவன் காரணமாக வீரர்களின் மனைவியர் வரிசையில் நீ முதலிடம் பெறுகிறாய்; ஆனால் உன் மகன் தான் உனக்கு வீரத்தாய் என்ற பட்டத்தைத் தருகிறான்”

 

–SUBHAM–