மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்! (Post No.3405)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 5-50 AM

 

Post No.3405

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

புத்தரின் சீடர் ஆனந்தர் வாழ்வில்!

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்!

ச.நாகராஜன்

 

புத்தரின் சீடரான ஆனந்தர் மிக அபாரமான அறிவும் சிறந்த பண்புநலன்களும் உடையவர்.

எந்த சிக்கலான பிரச்சினைக்கும் யாருக்கும் துன்பம் இல்லாதவாறு தீர்வைக் காண்பவர்.

இதை விளக்கும் ஒரு சம்பவம் உண்டு.

ஒரு முறை மன்னன் பசநாடி மிகுந்த கோபத்துடனும் துக்கத்துடனும் இருந்தான். காரணம், அந்தப்புரத்தில் இருந்த போது அவன் மகுடத்தில் இருந்த ஒரு இரத்தினக் கல்லைக் காணோம் என்பது தான்.

அந்தப் புரத்தில் இருந்த அனைவரையும் நன்கு சோதிக்குமாறு மந்திரியிடம் அவன் உத்தரவு பிறப்பித்தான்.

ஆனால் பயன் ஏதுமில்லை.

 

 

அந்தப்புரப் பெண்மணிகளும் அங்கு வேலை பார்த்தோரும் மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்கள்

கவலையுடன் அவர்கள் அனைவரும் ஆன்ந்தரை நாடினார்கள்..

என்ன விஷயம் என்று கேட்டார் ஆனந்தர்.

அவர்கள் நடந்ததை விளக்கினர். ஆனந்தர் நேராக  மன்னனிடம் வந்தார்.

மன்னா! கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாம் என்றார்.

மன்னன், “பூஜ்யரே, அது எப்படி சாத்தியம். அனைவரையும் நன்கு சோதித்து விட்டோமே. இனி என்ன வழி?” என்று கேட்டான்.

:”மன்னா! அங்குள்ள ஒவ்வொருவரிடமும் சிறிது வைக்கோலையும் களிமண் உருண்டையும் கொடுத்து அவர்கள் விரும்பிய இடத்தில் அவற்றை வைக்கச் சொல்” என்றார் ஆனந்தர்.

 

அதன்படியே உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டது. அனைத்து களிமண் உருண்டைகளும் சேகரிக்கப்பட்டன. ஆனந்தர் அவற்றைக் கவனமாகச் சோதித்தார். திருடியது யாராக இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி களிமண் உருண்டைக்குள் இரத்தினக் கல்லை வைத்து விடுவார் என்று அவர் எண்ணினார். ஆனால் அந்த உருண்டைகள் எதிலும்இரத்தினக்கல் இல்லை.

ஆனந்தர் யோசித்தார். தன் திட்டத்தைச் சற்று மாற்றினார்.

“மன்னா! ஒரு அறைக்குள் பெரிய குடம் நிறையத் தண்ணீரை வை. அந்த அறைக்கு முன்னால் திரை ஒன்று தொங்கட்டும். அனைவரையும் அங்கு சென்று குடத்தின் நீரால் கையை அலம்பச் சொல்” என்றார்.

அனைவரும் அறைக்குள் சென்று திரைக்குப் பின்னால் இருந்த குடத்து நீரால் கையை அலம்பி விட்டு வந்தனர்.

பின்னர் ஆனந்தர் மன்னனுடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

குடத்திலிருந்த நீரைக் கொட்டினார். குட்த்தின் உள்ளே இரத்தினக்கல் இருந்தது.

மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தார்ன். அவரது கூர்மையான அறிவையும் பிரச்சினையை யாருக்கும் பாதகமில்லாமல் அணுகி உடனே அதைத் தீர்த்ததையும் வெகுவாகப் போற்றினான்.

அவரைப் பணிந்து ஆசியை வேண்டினான்.

ஆனந்தர் தன் வாழ்நாள் முழுவதும் புத்தரின் போதனைகளின் படி வாழ்ந்து காண்பித்தார்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, உடனடியாக யாவருக்கும் இசைந்த முறையில் தீர்வைக் காண்பார்.

புத்தருக்கு  உகந்த சீடர் அவரே என்பதைக் காட்டும் ஏராளமான சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தன. அனைத்துமே அருமையானவை!

*******