Written by London Swaminathan
Date: 27 DECEMBER 2017
Time uploaded in London- 8-09 am
Post No. 4553
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)
சாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.
இதோ இன்னும் ஒரு கதை:
நந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.
இது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.
ஏன் சிரித்தாய் மகளே? ஏன் சிரித்தாய்? என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு, பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.
அவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.
சகதாரன் உதவி செய்ய முன்வந்தான்
பெண்ணே! அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்?
பெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.
அரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது?
ஒரு பெரிய மரம் இருந்தது.
ஓஹோ! அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா? என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.
மறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.
அவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.
இவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.
விடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று வருந்தினான்.
ஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு புல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட! இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.
சிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.
இதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.
நாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.
பர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார். பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன் மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.
இவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.
எல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.
பாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம். அதில் உதித்தவனே மாமன்னன் அசோகன்.
–சுபம்–