Written by London swaminathan
Date: 27 January 2017
Time uploaded in London:- 10-30 am
Post No.3581
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
மன்னர்கள் கால்கள் சிவந்தது எப்படி?
தமிழ் மொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் ஏராளமான உவமைகள் ஒரே மாதிரி இருப்பதும், அவை உலகின் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இல்லாததும் இரண்டு விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே பண்பாடு இருந்தது முதல் விஷயம்.
ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது இரண்டாவது விஷயம். அப்படி ஆரியரோ தமிழரோ வெளிநட்டிலிருந்து வந்திருந்தால் அங்கெல்லாம் இந்த உவமைகள் இருந்திருக்க வேண்டும்.
இதுவரை நூற்றுக் கணக்கான ஒற்றுமைகளைக் காட்டிவிட்டேன். இன்று மேலும் ஒரு காட்சியினைக் காண்போம்.
ரகுவம்சம் (9-13)
இந்திரனை தேவர்கள் எவ்வாறு பயபக்தியுடன் வணங்குவரோ, அவ்வாறே நூற்றுக் கணக்கான சிற்றரசர்கள் எல்லோரும் தசரதனின் கால்களில் விழுந்து வணங்கினர். அவர்கள் தங்கள் மணி முடிகளைச் சாய்த்தபோது தசரதனின் நகங்களின் ஒளி அதிகப்படுத்தியது. அதாவது முடிகளை தசரதனின் கால்களில் படாதவாறு பயபக்தியுடன் கிரீட ஒளி மட்டும் படும் தூரத்தில் வைத்து வனங்கினர். இதனால் தசரதனின் கால் விரல்கள் ஒளிவீசின.
ரகுவம்சம் (4-88)
ரகுவின் பாதங்களில் கொடி, கலசம், குடை ஆகியன ரேகை வடிவில் இருந்தன (சாமுத்ரிகா லக்ஷணம்). அவனிடமிருந்து விடை பெற்றுச் சென்ற சிற்றரசர்கள் அவன் காலில் விழுந்து தலையால்வ ணங்கியதால், அரசர்களின் முடியிலுள்ள மாலைகளிலிருந்து மகரந்தப் பெடிகளும் தேனும் விழுந்து அவனுடைய கால் விரல்கலைச் சிவக்கச் செய்தன.
ரகுவம்சம் (17-28)
அதிதி, சிம்மாசனத்தில் அமர்ந்தான். அதன் பாத பீடம் அரசர்களினின் மணிமுடிகள் வணங்கி, வணங்கி தேய்ந்து போயிருந்தன. விதானத்துடன் கூடிய அந்த தந்தையின் சிம்மாசனத்தில் அவன் அமர்ந்தான்.
இது போல காளிதாசன், அவனுடைய விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் குமார சம்பவ காவியத்திலும் பல இடங்களில் சொல்லுவான்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் துதிப்பாடல்களிலும் இவ்வாறு தேவியின் பாத கமலங்களில் மன்னர் முதல் எல்லோரும் வணங்கியதால் அவள் பாதம் சிவந்ததாக எழுதியுள்ளனர்.
சங்க காலத் தமிழ்ப் பாடல்களிலேயே இவ்வாறு இருக்கின்றன. சிலப்பதிகாரம் போன்ற காவியங்களிலும் உண்டு.
இதோ ஓரிரு எடுத்துக் காட்டுகள் மட்டும்:-
பட்டினப்பாலை (292-294)
மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி,
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்கால்
திருமாவளவன் பற்றி உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்:
திருமாவளவனின் எயில் ஒளி வீசுவதால் பகைவர் அஞ்சி வந்தனர்; அவனது காலடியில் விழுந்தனர். அவ்வாறு அவர்கள் விழுந்து வணங்குதலால் அவர்களுடைய முடிகளில் உள்ள ரத்தினங்களின் ஒளியைப் பருகிய கழலணிந்த கால்களை உடையவன்…………….
காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதியில்:
விசும்பில் விதியுடைய
விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடம்
தேய்ப்ப- முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி
யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி— என்பார்
பொருள்:-
எம் தந்தையாகிய சிவபெருமானே! தேவர்கள் அல்லும் பகலும் உன் காலடிகளில் விழுந்து வணங்குகின்றனர். அதனால் பொன்னாலாகிய அவர்களுடைய மணிமகுடங்கள் உமது திருவடிகளில் உராய்வதனால் தழும்பேறி விட்டனவே. அழகிய செந்தாமரை நிர்றத்தில் உன் பாதங்கள் இதனால் சிவந்தனவோ—
இதை ஆதி சங்கரர் தேவியின் திருப்பாதங்களுக்குப் பயன்படுத்தி சம்ஸ்கிருதத்தில் கவி பொழிந்துள்ளார்.
இமயம் முதல் குமரி வரை ஒரே உவமைகள், ஒரே பண்பாடு!
–சுபம்–