யார் நல்ல ஆசிரியர்?

raje2
Rajasthan Chief Minister Vasundhara Raje in a village school.

By London Swaminathan

Post No.871 dated 27th February 2014

ஆதிசங்கரர் எழுதிய வினா- விடை ரத்தின மாலை மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம். வடமொழியில் இதன் பெயர் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். குரு பற்றிய கேள்விகளை மட்டும் இன்று காண்போம்.

3.யார் குரு?

உண்மையை உணர்ந்தவர். மாணவர்களின் நலனை எப்பொழுதும் கருதுபவரே உண்மையான ஆசிரியர் / குரு.

அருமையான பதில். மதம் என்பதை மறந்து விட்டாலும் கூட இது சரியே. ஒரு ஆசியருக்கு தான் கற்பிக்க வந்ததை (உண்மையை) அறிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க மாணவர்களின் முனேற்றமே அவர்கள் மனதில் இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் குருவிடத்தில் சரண் அடைந்து உபதேசம் பெற்ற எல்லோரும் குருவின் கடாக்ஷத்தால் முன்னேற்றம் கண்டனர். அவர்கள் ஸ்பர்ச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை என்று மூன்று வகைகளில் அருள் பெற்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது சக்தியை ஸ்பரிச தீட்சை மூலம் சுவாமி விவேகானந்தருக்கு மாற்றினார். அதன் மூலம் அவர் உலகப் புகழ்பெற்றார். இந்து மதமும் புனருத்தாரணம் பெற்றது.

சீடர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்தப் பாவங்கள் அனைத்தும் குருவையே சேரும்.

குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.

இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
— திருமூலரின் திருமந்திரம்

shantiniketan

Shantineketan, Calcutta

ஆதி சங்கரர் எடுத்துக் கொள்ளும் அடுத்த கேள்வி

9.எது விஷம்?
குருவின் கட்டளையை மீறுதல்.

ஒருவரை நம்பி குருவாக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவர் மீது பரிபூரண நம்பிக்கை வேண்டும். அவரது உத்தரவை மீறக்கூடாது. அப்படி மீறுவது விஷத்துக்கு ஒப்பானது. குருவை நிந்தித்தல் அதற்கும் மேலான ஆபத்து உடையது.

சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது
குருவின் கட்டளையை மீறாததால் ஞானம் பெற்றவ சத்யகாமன் கதை அது.

குரு, அவனுக்கு இட்ட கட்டளை நான் கொடுத்த மாடுகளின் எண்ணிக்கை ஆயிரமாகப் பெருகும் வரை வராதே என்பதுதான். அவனும் அதையே மனதில் கொண்டு வேறு எதையும் சிந்திக்காமல் மாடு மேய்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான். ஆயிரம் மாடுகள் ஆவதற்குள் அவனுக்குப் பிரம்ம ஞானம் வந்துவிட்டது குருவே அவனைப் பார்த்து நீ ஞானியாக விளங்குகிறாயே உனக்கு யார் உபதேசம் செய்தார்? என்று கேட்கிறார். குருவின் கட்டளையை மீறாமையும், சிரத்தையும், நம்பிக்கையும் அவனுக்கு ஆன்ம ஞானம் ஏற்பட உதவிற்று.

‘’செய்யும் தொழிலே தெய்வம்’’– என்பது எவ்வளவு உண்மை! மாடு மேய்த்தாலும் குருவின் சொற்களில் இருந்த நம்பிக்கை, பிரம்ம ஞானத்தைக் கொடுத்துவிட்டது. எங்கு சிரத்தை இருக்கிறதோ அங்கு ஞானம் பிறக்கும் என்றும் கொள்ளலாம்.

School under the tree boys 2
School in Africa.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன, செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் விலகிப் போ, விலகிப் போ என்று கத்தினான். அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும் என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

பரசுராமனிடம் பொய் சொல்லி வில்வித்தை கற்ற கர்ணனுக்கு நேர்ந்த கதையையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.

Gautama Buddha Park,Noida

School under a tree at Gautama Buddha Park, Noida, India.

Contact swami_48@yahoo.com