காலம் என்னும் மர்மம்! – 2

mayan-calendar

Mayan Calendar

Written  by S NAGARAJAN

Date: 1 November 2015

Post No:2291

Time uploaded in London :–  14- 40

(Thanks  for the pictures) 

 

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 2

.நாகராஜன்

4

தன் வலிமையால் பெரிதான காலமானது அதிகம் படிப்புள்ளவனானாலும், அல்பப் படிப்புள்ளவனானாலும், பலசாலி ஆனாலும், பலவீனன் ஆனாலும், அழகுள்ளவனானாலும், குரூபி ஆனாலும், நல்லவனானாலும், கெட்டவனானாலும் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொள்கிறது.

மனிதன் முதலில் எரிக்கப்பட்டதையே பிறகு எரிக்கிறான். அடிக்கப்பட்டதையே பிறகு அடிக்கிறான்.

நாசமடைந்ததே நசிகிறது. அடைய வேண்டியதையே அடைகிறான்.

 

ஆச்சரியமான விதியைச் சிந்தித்தால், காலமாகிற இந்தக் கடலுக்குத் தீவு இல்லை!

அக்கரை ஏது? இக்கரையும் காணப்படுகிறதில்லை. இதன் முடிவை நான் காணேன்.

காலம் யாவற்றையும் எடுத்துக் கொள்ளுகிறது. காலம் யாவற்றையும் கொடுக்கிறது.

யாவும் காலத்தால் செய்யப் படுகின்றன.

 

 

காலம் எல்லாவற்றையும் நிலை பெறச் செய்கிறது.காலம் எல்லாவற்றையும் பழுக்கச் செய்கிறது.

வேதமறிந்த ஜனங்கள் கால ரூபியான பிரம்மத்தை, மாதத்தையும், பட்சத்தையும் வீடாகக் கொண்டதும், இரவாலும், பகலாலும் மூடப்பட்டதும், ருதுக்களைத் துவாரமாகக் கொண்டதும், பிராண வாயுவை முகமாகக் கொண்டதுமாகக் கூறுகிறார்கள்.

 

ஐந்து விதமான இந்திரியங்கள் யாவும் எதைத் தொடர்ந்து அறிகிறதில்லையோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்.

இவ்வுலகம் அனைத்தும் அதன் வசம் இருக்கிறது.

 

பூஜ்யமான காலமானது பூதங்களுக்குள்ள வேற்றுமையைச் செய்கிறதென்று இவ்வளவைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாது.

காலத்தைக் காட்டிலும் இவ்வித சக்தியுள்ள வேறு பதார்த்தம் இல்லாததாலும் எல்லாப் பிராணிகளும் அடையத்தக்க அக்காலத்தை அடையாமல் எங்கு போக முடியும்?

 

ஓடுகிறவனானாலும் அக்காலத்தைத் தள்ள முடியாது. நின்றாலும் அதிலிருந்து விலக மாட்டாது.

ஐந்து விதமான இந்திரியங்களும் யாவும் அதைக் காண்பதில்லை.

சிலர் இக்காலத்தை அக்னி என்று சொல்கிறார்கள். சிலர் பிரம்மா என்று சொல்கிறார்கள்.

argos clock 3

5

 

காலத்தைப் பற்றி ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறுவது:-

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।

रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ராஹ்மனோ விது:  I                        

ராத்ரிம் யுக சஹஸ்ராந்தாம் தேஹோராத்ரி விதோ ஜனா: II (கீதை 8 – 17)

 

இதன் பொருள்: அநுபூதியினால் பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் மகாயுகங்களையும், அவரது இரவு மற்றும் ஆயிரம் மகாயுகங்களையும் கொண்டிருக்கிறது என்று எந்த யோகிகள் உணர்கிறார்களோ அவர்களே காலத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள்.

இவ்வாறு பகவத் கீதையில் ஶ்ரீ கிருஷ்ணர் காலத்தைப் பற்றி விரிவாக அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

இது எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை பிரம்மாவின் ஆயுள் பற்றி அடுத்து விவரிக்கும் போது அறியலாம்.

 

 argos clock

6

இனி கால அளவுகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வாழும் பூமியில் நம்மால் உணரப்படும், அளக்கப்படும் நேரம் வேறு.

சூரிய மண்டலத்திற்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் எப்படி கால அளவு இருக்கிறது என்று பார்த்தோமானால் வருவது வேறு அளவு. இந்த அளவைக் கொண்டு பிரம்மாவின் ஆயுளைக் கணக்கிட்டால் பிரமித்துத் திகைப்போம்!

 

மனித அளவில் உள்ள கால அளவுகள் இதோ:

18 இமைப் பொழுது                     1 கஷ்டை

18 கஷ்டை                               1 கலை

30 கலை                                  1 க்ஷணம்

12 க்ஷணம்                                1 முகூர்த்தம்

30 முகூர்த்தம்                             24 மணி அல்லது ஒரு நாள்

15 நாள்                                    1 பக்ஷம்

2 பக்ஷம்                                    1 மாதம்

2 மாதம்                                    1 ருது

6 ருது                                       1 வருடம்

ஒரு வருடம் இரண்டு அயனமாகப் பிரிக்கப்படுகிறது.

உத்தராயணம்             – 6 மாதம்

தக்ஷிணாயணம்           – 6 மாதம்

 

 

7

இனி இறந்தவர்களின் உலகில் கால அளவுகளைப் பார்ப்போம்.

தேவ நிலையை எய்தாமல் இறந்தவர் இருக்கும் உலகின் கால அளவுகள் வேறு. ‘பிதிர்லோகம் எனக் குறிப்பிடப்படும் இந்த உலகில் மனித உலகின் ஒரு பக்ஷம் அதாவது 15 நாட்கள் ஒரு பகலாகவும் இன்னொரு பக்ஷம், அதாவது அடுத்த 15 நாட்கள் இரவாகவும் இருக்கிறது. அதாவது மனித தினத்தின் 30 மடங்கு ஒரு பிதிர் தினமாகும்.

 

இறந்தவருக்கு அவர் இறந்த வருடம் மாதத்திற்கு ஒரு முறைபடையல்உணவு அளிக்கும் வழக்கத்தை நினைத்துப் பார்த்தால் புரியும்அவர்களது கணக்குப்படி தினமும் நாம் உணவு அளிக்கிறோம் என்று.

இனி தேவர் உலக கால அளவுகளை அடுத்து பார்ப்போம்.

to be continued………………………………..