திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! (Post No.3246)

7books

Written by S. NAGARAJAN

Date: 13 October 2016

Time uploaded in London: 6-11 AM

Post No.3246

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளில் மறுபிறப்பு பற்றி கூறப்படுவதை ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

valluvar-4

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களிலிருந்து ஹிந்து மதத்தைப் பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகளில் முக்கியமான் ஒன்று மறு பிறப்பு தத்துவம்.

இதர மதங்கள் ஒரே ஒரு பிறப்பு தான் மனிதனுக்கு உண்டு என்றும் அதில் ஒன்று உய்ய வேண்டும் அல்லது எடர்னல் ஹெல்லில் (Eternal Hell) முடிவற்ற நரகத்தில் ஆழ்ந்து அமிழ வேண்டும் என்று போதிக்கின்றன.

ஆனால் நம்பிக்கை ஊட்டும் ஹிந்து  மதம் உன் செயல்களால் பிறப்புகள் அமைகின்றன. நல்ல வினை மூலம் நீ ஒரு கால கட்டத்தில் நிச்சயம் முக்தி பெற முடியும் என்று சூக்ஷ்மமான ஸ்விட்சை நம் கையிலேயே கொடுக்கிறது.

இதை பாரத தேசமெங்கும் உள்ள ஹிந்துக்கள் ஒப்புக் கொண்டு அதன் படி பாவ புண்ணியத்திற்குப் பயந்து வாழ்கின்றனர். தனக்கு ஒரு இழிவு நேரும் போதெல்லாம், ‘தெரிந்தோ தெரியாமலோ நான செய்த பாவம். அதனால் இதை நான் அனுபவிக்கிறேன்’ என்று மனத் தெளிவைப் பெறுகின்றனர். நல்லன வரும் போது பூர்வ ஜன்ம புண்ணிய்ம் என்று மகிழ்கின்றனர்.

நமது அற நூல்கள், மற்றும் இலக்கியங்கள் இந்த மறுபிறப்புத் தத்துவத்தை இடையறாது சுட்டிக் காட்டுகின்றன

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களில் வரும் நூற்றுக் கணக்கான மறுபிறப்புத் தக்வல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன

இந்த பாரதப் பண்பாடு தான் – பின்னால் ஹிந்துப் பண்பாடு என்று அறியப்படுவது –   பாரத தேசம் முழுவதும் பரவியிருந்த ஒரே பண்பாடு.

இதை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்தப் பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான அங்கமாகத் தான் தமிழர்களும் வாழ்ந்து வரலாறு படைத்திருக்கின்றனர்.

எடுத்துக் காட்டிற்குத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்    (குறள் 62)

பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.

 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு    (குறள் 107)

 

தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.

 

ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து    (குறள் 126)

 

ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி  ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து       (குறள் 398)

 

ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்     (குறள் 538)

 

பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அன்று        (குறள் 835)

 

முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து  முடிக்க வல்லவன்!

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்

மற்றீண்டு வாரா நெறி           (குறள் 356)

 

கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.

 

வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்    (குறள் 38)

 

ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.

ஆக இப்படி வள்ளுவர் மறுபிறப்பிற்கு உரிய முறையில் தன் குறளில் முக்கியத்துவம் கொடுத்து சொல்ல வேண்டிய செய்திக்ளை எல்லாம் சொல்லி விட்டார்.

நமது வள்ளுவரை கிறிஸ்தவராகக் காட்ட முயற்சி செய்து எழுந்த நூல்களும் உண்டு.

அப்படிப்பட்ட முயற்சிகளை இந்த மறுபிறப்புத் தத்துவம் ஒன்றே தகர்த்து விடுகிறது.  அப்படிப்பட்ட முயற்சிகளை எள்ளி நகையாடும் போதே, வள்ளுவரைத் ‘தம்மவராக’ ஒவ்வொருவரும் காட்டும் அளவு தமிழ்க் குறள் உயர்ந்துள்ளது என்ற பெருமையை நினைத்து மனம் மகிழ்கிறோம்.

 

valluva-nayanar

எந்தக் காலத்திற்கும் பொருந்தும் ஹிந்துப்  பண்பாட்டை மிகச் சரியாக முத்திரைக் குறட்பாக்களினால் வலியுறுத்திய ஒரு தமிழ் மஹானைச் சிரம் தாழ்த்தி வணங்கிக்கொண்டே இருக்கலாம்.

அவர் குறளைப் படித்து அதன் படி வாழ்வதே வாழ்நாள் வழி அடைக்கும் கல்லாக அமையும், இல்லையா!

********