Written by London Swaminathan
Date: 3 NOVEMBER 2017
Time uploaded in London- 16-20
Post No. 4363
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பிரபஞ்ச வாணி வானொலி நிலயம்!
செய்திகள் வாசிப்பது லண்டன் சுவாமிநாதன்!
முதலில் தலைப்புச் செய்திகள்:–
1.வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றம் வேத காலத்தில் இருப்பது சில மந்திரங்கள் மூலம் தெரிகிறது.
2.வேத கால ரிஷிகள் மந்திரங்களுக்குள்ள அபூர்வ சக்தி பற்றிப் பாடி இருப்பது ரிக் வேதத்தில் உள்ளது.
3.மூன்று முக்கிய மந்திரங்கள், வேத மந்திரங்களின் சக்தி — அபூர்வ சக்தி பற்றி, ரிஷிகள், பாடியதைக் காட்டுகின்றன.
4.மந்திரங்களை ரஹசிய மொழியில் பாடுவது பற்றிய செய்தி ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் உள்ளது.
5.கடவுள்கள் கிழக்கு திசையில் இருந்து வந்ததாகவும், மேற்கு திசை மூலமாக கடவுளர் சொர்கத்துக்குச் சென்றதாகவும் பிராமண நூல்கள் சொல்கின்றன.
இதோ விரிவான செய்திகள்
விஸ்வாத்ரஸ்ய ரக்ஷதி ப்ரஹ்ம இதம் பாரதம் ஜனம் – ரிக் வேதம் 3-53-12
ஏவன் நு கம் தாசராக்ஞே சுதாசம் ப்ராவத் இந்த்ரோ ப்ரஹ்மணா வோ வசிஷ்டாஹா- 7-33-3
வசிஷ்டஸ்ய ஸ்துவதஹ இந்த்ரஹ அஸ்நோத் உரும் த்ருத்சுத்ய அக்ருணோத் லோகம் 7-33-5
மூன்று மந்திரங்களின் சுருக்கமான பொருள்:-
வானத்தையும் பூமியையும் தாங்கும் இந்திரனே உன் புகழ் பாடுகிறேன் நான்; விஸ்வாமித்ரரின் துதிகள் பரத இனத்தைக் காப்பாற்றும்
அவன் இதன் உதவியால் (யமுனை) ஆற்றைக் கடந்தான்; இவர்களின் உதவியுடன் அவன் பேதாவைக் கொன்றான்.
தாகம் எடுத்தவர் போல, அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தனர். பத்து அரசர் போரின்போது வசிஷ்டரின் துதிகளை இந்திரன் கேட்டான். த்ருத்சுக்களை வெல்ல வைத்தான்.
இதிலுள்ள சில விஷயங்கள் வெளிநாட்டினருக்கும் வியப்பை ஏற்படுத்தின; ரிக் வேதத்தின் பழைய மண்டலத்திலும் யமுனை நதி பற்றிப்பேசப்படுவது ஆரியர்கள் மேற்கிலிருந்து குடியேறினர் என்பதைப் பொய்மைப்படுத்துகிறது
பத்து அரசர்கள் போர் என்பது (தச ராஜ யுத்தம்) வேத கால இந்துக்கள் இடையே நடந்த சஹோதர யுத்தம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சஹோதர யுத்தம் செய்தனர். உலகில் நீண்ட கால தொடர் யுத்தம் செய்தவர்கள் தமிழர்களே. நல்ல வேளை! வெள்ளைக்காரர்கள் தமிழைப் படிக்காததால் ஒரு மன்னரை ஆரியன் என்றும் மற்றவனை திராவிடன், பழங்குடியினன் என்றும் முத்திரை குத்த வாய்ப்பிலாமல் போனது. வேதத்தில் யா ராவது இருவர் சண்டை பற்றி மந்திரம் வந்தால், ஒருவனை ஆரியன் என்றும் மற்றவனை திராவிடன் அல்லது பழங்குடி மன்னன் என்றும் முத்திரை குத்தி பிளவு படுத்துவது வெளிநாட்டினர் சூழ்ச்சி. கரிகால் சோழன் கூட 9 பேரின் முடிகளை (மணி முடி) வென்றான்; சேரன் செங்குட்டுவன் ஏழு பேரின் மணி முடிகளை வென்றான். இதே போல பத்து மன்னர் யுத்தம் நடந்தது. வெள்ளைக்கார சூழ்ச்சிவாதிகளும், மார்கஸீயங்களும் இதை எல்லாம் வர்கப் போராட்டம் என்றும் இரு வேறு இனங்களின் போராட்டம் என்றும் சித்தரித்து நாட்டைப் பிளவுபடுத்தினர்.
ரஹஸிய மொழி
ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் ரஹஸிய மொழியில் வேத கால ரிஷிகள் கவிபாடுவது வருகிறது:
” நான் ரஹஸிய மொழியில் பாடிய துதிகள், ஏ அக்னி தேவனே! உனக்குப் புரியும். என்னுடைய ஞான மொழிகளில் என் கருத்துகளையும் எண்ணங்களையும் உதிர்த்தேன்”
தமிழர்கள் ‘மறை’ என்று வேதங்களை அழைத்தது இந்த ரஹசிய மொழிகளால்தான்.
திசைகள் பற்றி பிராமண மந்திரங்கள்
கடவுள், கிழக்கு திசையில் இருந்து நகர்ந்து மேற்கு திசையிலுள்ள மனிதர்களை நோக்கி வந்தார். இதனால்தான் மனிதர்கள் கிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர்- சதபத பிராhமணம் 2-6-1-11
(இந்துக்கள் எப்போதும் கிழக்கு நோக்கியே வழிபாடு செய்வர்; இறந்தோருக்கான வழிபாடு மட்டும் தெற்கு திசையை நோக்கி இருக்கும்)
எவரும் மேற்கு திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது; ஏனெ னில் கால்கள் இறைவனை நோக்கி அமைந்துவிடும்! தெற்கு திசை இறந்து போன முன்னோர்களுக்கும் (பிதுர்கள்) மேற்கு திசை நாகர்களுக்கும் உரித்தாகும். அங்கே கடவுளர் சொர்கத்துக்கு ஏகினர். வட திசை மனிதர்களுக்குச் சொந்தம்; அதனால்தான் வீடுகளில் தெற்கு வடக்காக உத்திரங்கள் அமைக்கபடுகின்றன. ஏனெனில் வடக்கு திசை மனிதர்களுடையது. புனிதமற்ற இடங்களில் உத்திரம் , கிழக்கு மேற்காக இருக்கும். (சதபத பிராமணம் 3-1-1-7)
அவன் ஆட்டின் மயிரைக் கத்தரித்து, அவைகளை வடகிழக்கு நோக்கி அனுப்புகிறான்.; வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. அவன் ஆடுமாடுகளை அத்திசைக்கு அனுப்புவதால்தான் மனிதர்களும் கடவுளும் கால்நடைகள் மூலம் ஜீவிக்கின்றனர். (சதபத பிராமணம் 6-4-4-22)
வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா) உயிரினங்களைப் படைத்தார். மீண்டும் சொல்கிறேன். வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. சொர்கலோகக் கதவு அங்கேதான் இருக்கிறது. (6-6-2-4)
வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா), விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம், உயிரினங்களைப் படைத்தார். அவ்வாறே இப்போது யாகம் செய்பவன் வடகிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு, விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம், உயிரினங்களைப் படைக்கிறான். (6-7-2-12)
அவன் எந்த திசையில் செல்வதானாலும் முதலில் கிழக்கு நோக்கிச் செல்லட்டும்; ஏனெனில் கிழக்குதான் அக்னி தேவன் பிரதேசம் –(6-8-1-8)
அவர்களுடன் அவர்கள் தென் மேற்கு திசை நோக்கிச் செல்கின்றனர். ஏனெனில் அது நிருதி (தீய தேவதை) யின் திசை (7-2-18
கிழக்கு என்பது கடவுளை நோக்கிய திசை– அக்னியை நோக்கிய திசை- 7-3-2-1
திசைகள், உத்திரங்கள், திசைக்குரிய தெய்வங்களின் குறிப்புகள் ஆகியன வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன.
வேத காலத்தில் துதிப்பாடல்கள் (சம்ஹிதை) தோன்றியவுடன் பிராமண நூல்கள் (கி.மு.1000 அல்லது அதற்கு முன்னர்) தோன்றின.
கிழக்கு திசை பறிய பிராமணக் குறிப்புகளும், வேதத்தில் கிழக்கு திசை இந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதும், ரிக் வேத நதிகள் துதி, கிழக்கிலுள்ள கங்கையிலிருந்து துவங்கி மேற்கிலுள்ள சரஸ்வதி செல்வதாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைச் சமவெளியில் புகழ் வாய்ந்த நாக ரீகம் மலர்ந்ததைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல, பகீரதன், சகரர் பற்றிய புராணக் குறிப்புகளும், உலகிலேயே பழமையான நகரமான காசி மாநகரம் கங்கையின் மீதமர்ந்ததும் கங்கைச் சமவெளியின் பழமையைக் காட்டுகின்றன; வெளி நாட்டுக்காரர்களின் வாதங்களில் உள்ள பொய்மைப் புனைந்துரையைக் காட்டுகின்றன.
ஆரியர் படை எடுப்பு பற்றிய கதைகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!
TAGS:–வாஸ்து சாஸ்திரம், தோற்றம், மறை மொழி, ரகசிய மொழி, கிழக்கு திசை, கடவுள் திசை
–சுமம், சுபம் —