தமிழ், சம்ஸ்கிருத மொழிகளின் அழகே அழகு!

siva uma

Lord Shiva with Uma (Parvati)

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 942 தேதி 30 மார்ச் 2014.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’; அதாவது நெய்யப்பம் சாப்பிட்டால் சுவையான அப்பத்தை சாப்பிட்ட பலன் ஒன்று. இரண்டாவது பலன் என்ன? மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும்! அதே போல தமிழனாகப் பிறந்தவனுக்கும் இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. சம்ஸ்கிருத மொழியின் அழகை ரசிக்கும் போது அதை தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரு மடங்கு இன்பம் எய்தலாம்.

வடமொழியும் தென் மொழியும் நம் இரு கண்கள். இந்த இரண்டையும் அறிந்த ஒருவனால் மட்டுமே பாரதீய கலாசாரத்தை நூறு விழுக்காடு அறிய முடியும். தமிழில் இருண்ட மேகம் மழை பொழிவதைப் போல கவி மழை பொழிந்தவர் காளமேகப் புலவர். அவர் வாயைத் திறந்தாலே, சிலேடை மழை பொழிவார். எல்லாம் இரட்டுற மொழிவார். சில நேரங்களில் புகழ்வது போல இருக்கும் ஆனால் அது இகழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் இகழ்வது போல இருக்கும் ஆனால் அது புகழ்ச்சியாக இருக்கும்.

WhitePumpkins

இதோ ஒன்று:-

சிவ பெருமானும் பூசுணிக்காயும் ஒன்றே !!
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்காய் ஈசனைப் போன்று.

பொருள்:- பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.(மாசுணம்=சாம்பல்).

சிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். காஞ்சி காமாட்சியின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே!!

rada krisna

இதோ ஒரு சம்ஸ்கிருத சிலேடைக் கதை:

ராதா ராணி வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உலகமே அறியும். இருந்தபோதிலும் உடனே கதவைத் திறந்துவிட்டால் காதலின் சுவையே போய்விடும் அல்லவா! ஆகையால் ராதா ஒரு நாடகம் ஆடினாள்:–

ராதா: யாரது? கதவைத் தட்டுவது?
கண்ணன்: நான் தான் ஹரி (வந்திருக்கிறேன்).

ராதா: இங்கு நீ சாப்பிடக் கூடிய மிருகங்கள் எதுவும் இல்லை. இங்கு ஏன் வந்தாய்? (வடமொழியில் ஹரி என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு)

க: — அட என்னைத் தெரியவில்லையா? நான் மாதவன்.
ரா:– வசந்த காலம் வர இது உரிய தருணம் இல்லையே? (மாதவ என்றால் வசந்த காலம் என்ற பொருளும் வடமொழியில் உண்டு)

க:- ராதா! நான் ஜனார்தனன். உனக்கு என்னை நன்றாகத் தெரியுமே!
ரா:– உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் காடுதான் லாயக்கு. போய் யாரை வேண்டுமானாலும் தொல்லைப் படுத்து.

(ஜனார்தனன் என்றால் அஞ்ஞானத்தையும் அநீதி செய்வோரையும் அழிப்பவன் என்று ஒரு பொருளும் அநாவசியமாகத் தொல்லை கொடுப்பவன் என்று ஒரு பொருளும் உண்டு. விக்ன விநாயகனைக் கூட கஷ்டங்களைப் போக்குபவன், தீயோருக்கும் தன்னை வணங்காதோருக்கும் கஷ்டம் கொடுப்பவன் என்று நாம் சொல்லுவோம். முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரன் என்று அருணகிரி பாடியதையும் அறிவீர்கள்))

க: இளம் கன்னியே! தயவு செய்து கதவைத் திற. நான் மதுசூதனன் வந்திருக்கிறேன்.
ரா:- ஓஹோ! நீதான் த்விரேபனா? ( மதுசூதனன் என்ற பெயர் மது என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணனுக்கு வந்தது. இன்னும் ஒரு பொருள் மதுவை உண்ணும் தேனீ. கிருஷ்ணன் ராதாவிடம் மட்டுமின்றி மற்ற கோபியருடனும் போவது ராதாவுக்குப் பிடிக்காது. ஆகையால் தருணம் பார்த்து இப்படி வடமொழியில் தாக்கினார். ‘த்விரேப’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தேனீ என்றும் ஜாதியைவிட்டு விலக்கப்பட்டவன் என்றும் பொருள். அதாவது உன்னை வீட்டை விட்டு விலக்கிவிட்டோம். வீட்டின் கதவு திறக்காது, போ, போ!!

(அம்மா, அப்பாவுக்குப் பிள்ளைகள் மீது கோபம் வந்தால் சீ, வெளியே போ! என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே!’ என்று அன்பு காட்டுவது போல ராதாவும் கொஞ்சம் ‘பிகு’ செய்துகொண்டாள்).

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய நூல்கள் அனைத்தையும் ஒருவர் படித்து முடிக்க நூறு பிறவிகள் எடுத்தாலும் போதாது. சரஸ்வதி தேவி சொன்னாள், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு” என்று. நாம் எல்லோரும் சொல்லலாம், ”கற்றது கடுகு அளவு; கல்லாதது இமய மலை அளவு” என்று!

contact swami_48@yahoo.com