மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம் (Post No 2548)

forest2

Written by S Nagarajan

 

Date: 17  February 2016

 

Post No. 2548

 

Time uploaded in London :–  7-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

train watr falls

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை ஏ அலைவரிசை  11-12-2015 முதல் 20-12-2015முடிய ஒலிபரப்பிய 10 உரைகளில் முதலாவது உரை

 

 

மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம்

 

ச.நாகராஜன்

 

மேற்குத் தொடர்ச்சி மலை இந்தியாவின் அற்புதமான வளங்களில் ஒன்று. இந்த அரிய வளத்தில் அமைந்துள்ள காடுகள் கடந்த பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருவது துரதிர்ஷ்டமான விஷயம்.

 

தாபியிலிருந்து கன்யாகுமாரி வரை உள்ள இந்த மலைத் தொடரின் நீளம் சுமார் 1500 கிலோமீட்டர். 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட இதில் 30 ச்தவிகிதப் பரப்பு காடுகளில் உள்ளது. இதன் சிறப்புக்கள் பல. கிழக்குத் தொடர்ச்சி மலை போல விட்டு விட்டு இல்லாமல் இது தொடர்ந்த ஒரு மலைத் தொடராக உள்ளது. இதன் உயரம் 1500இலிருந்து 2000 மீட்டர் வரை உள்ளது. இது வெப்ப மண்டல பிரதேசமாகும். தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவேரி உருவாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தான்.

 

பயோடைவர்ஸிடி எனப்படும் உயிரியப் பன்மயத்திற்கான அரிய இடம் இது. உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் இந்த மலைத் தொடரி பிரதேசத்தில் இருப்பதும் நீலகிரி மலைத்தொடரில் சுமார் பத்தாயிரம் யானைகள் இருப்பதும் இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

 

இப்படிப்பட்ட காரணங்களால் யுனெஸ்கோ உலகின் எட்டு அரிய இயற்கை வளங்களால் மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தையும் ஒன்றாக அறிவித்திருக்கிறது.

 

இப்படிப்பட்ட உலகின் அரிய இயற்கை வளம் நவீன யுகத்தின் தொழில் மயமாக்கல், காட்டுச் செல்வத்தைச் சுரண்டி சுயந்லத்திற்காகப் பயன்படுத்தல் உள்ளிட்ட ஏராளமான காரணங்களால் அழிக்கப்பட்டு வருகிறது. ஓரின பயிர் வளர்ப்பு சாகுபடிக்காக காடுகள் விளைநிலங்களாக மாற்றப்படுவதும், இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் சுரண்டப்படுவதும் இந்த இயற்கை வளம் அழிவதற்கான முக்கியமான காரணங்களாகும்.

 

இந்த அழிவைத் தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இப்பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி வருகின்றன.கடத்தல்காரர்களையும் வேட்டையில் ஈடுபடுவோரையும் தடுப்பது, வனவிலங்குகளை அழிக்காமல் அவற்றையும் வாழ விடும் நோக்கத்தை அப்பகுதி வாழ் மனிதர்களிடையே ஏற்படுத்துவது, காடுகளை அழித்து விளைநிலம் ஆக்காமல் இருப்பது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அதை மேம்படுத்தும் ப்ணிகளை மக்களே உணர்ந்து செயல்படுத்துவது ஆகியவை இந்த அரிய வளத்தைக் காக்கும்.

 

அரசின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு பெரும் நிறுவனங்களும் மக்களும் ஆதரவு தருவது இன்றைய நிலையில் அவசரமானதும் அவசியமானதுமான ஒரு நற்பணியாகும்.

 

***