Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மஹரிஷிகள் வரிசை!
மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!
ச.நாகராஜன்
மஹரிஷி ஆருணி!அயோததௌம்யர் என்ற பெரும் மஹரிஷி ஒருவர் இருந்தார். அவருக்கு உபமன்யு, ஆருணி, வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அயோததௌம்யர் தன் சிஷ்யனான ஆருணியை நோக்கி, “ நீ போய் கழனிக்கு வருகின்ற
பஞ்சசிகருக்குத் தனது முலைப்பாலைத் தந்தாள். அதை அருந்துவது பஞ்சசிகரின் வழக்கமானது. ஆகவே அவருக்கு கபிலையினுடைய புத்திரர் என்ற இன்னொரு பெயரும் உண்டாயிற்று.
வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்மஹரிஷி கபிலரைப் பற்றிய சரித்திர விவரங்களைக் காணலாம்.
ஸ்ரீ ஹரியானவர் கர்த்தம பிரஜாபதிக்கு தேவபூதி என்பவளிடத்தில் கபிலர் என்னும் பெயருடன் அவதரித்தார். அவர் பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். இன்னொரு விருத்தாந்தம் அவர் சூரிய பகவானிடத்தில் சக்ரதனு என்ற பெயருடன் அவதரித்ததாகவும் பின்னால்
சமீகர் என்ற பெயரில் இரு ரிஷிகள் உள்ளனர். இரண்டாவது சமீகரைப் பற்றிய சரித்திரம் இது.
மந்தபாலர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவருக்கு ஜரிதை என்ற சாரங்க பட்சியிடத்து நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களில் நான்காவது குமாரரின் பெயர் துரோணர். அவர் பட்சி உருவத்தில் இருந்தாலும் கூட வேதங்களை நன்கு கற்று உணர்ந்தார்.
துரோணர் தார்க்ஷி என்ற பெண்ணை மணந்தார். இந்த தார்க்ஷி என்பவவள் சம்பாதி என்ற கழுகு ராஜன், மேனகை என்ற அப்ஸரஸின் குமாரத்தியும் பெண் பட்சி உருவத்தை அடைந்தவளுமான ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்குப் பிறந்தவள் ஆவாள். துரோணரை மணம் செய்து கொண்ட தார்க்ஷி கர்ப்பமுற்றாள். அவள் மூன்றரை மாத கர்ப்ப காலத்தில் மஹாபாரத யுத்தம் மூண்டது.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திர போர் பூமிக்கு தவிர்க்க முடியாத ஊழ்வினைப் பயனாக அவள் சென்றடைய வேண்டியதாயிற்று.
அங்கே பகதத்தனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த கொடிய போரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அர்ஜுனனின் வில்லிலிருந்து நீல நிறமுள்ள ஒரு பாணம் கிளம்பி தார்க்ஷியின் வயிற்றைக் கீறிக் கொண்டு சென்றது. அவள் வயிற்றில் இருந்த நான்கு முட்டைகள் சிறு பஞ்சு மூட்டை போல் கீழே பூமியில் விழுந்தன.
அதே சமயம் சுப்ரதிகா என்ற யானையின் மீதிருந்த பெரிய மணியும் பாணத்தால் அடிபட்டுக் கீழே விழுந்தது.
தெய்வாதீனமாக இந்த மணியானது கீழே விழுந்து கிடந்த முட்டைகளின் மீது விழுந்து அவற்றை நன்கு மூடிக் கொண்டது.
18 நாட்கள் நடந்த பாரத யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது தவ சிரேஷ்டரான மஹரிஷி சமீகர் அம்முட்டைகள் இருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மணிக்குள்ளாக இருந்த முட்டைகள் இருந்த இடத்திலிருந்து சப்தம் உண்டாயிற்று. இந்த சத்தத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த சமீகர் அந்த மணியைத் தூக்கினார். உள்ளே பார்த்தால் அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள்!
அவர் ஆச்சரியத்திற்குள்ளானார்.
நடந்ததோ பெரிய யுத்தம். அதில் இந்தப் பட்சிகள் முட்டைகளாக இருந்த போதும், அவற்றைக் காப்பாற்ற யானையின் மீதிருந்த இந்த மணி கிழே விழுந்து இவற்றைப் பாதுகாப்பாக மூடிக் கொண்டிருந்தது தெய்வ கிருபையால் தான் என எண்ணுகிறேன் என்று அவர் எண்ணினார்.
இவற்றால் உலகத்திற்கு க்ஷேமம் உண்டாகும் என்று நினைத்த மஹரிஷி சமீகர் அவற்றைக் கவனமாய் போஷித்து வளர்க்கலானார். தனது சீடர்களிடம் அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார்.
ஒரு மாதம் கழிந்தது. அந்தப் பறவைகள் சகல ஞானமும் நிரம்பியவையாக ஆயின.
அவைகள் சமீகரைப் பார்த்து, “ ஓ! பிதாவே! நாங்கள் தாயை இழந்து கீழே விழுந்து கிடந்த போது எம்மை நீவீரே காப்பாற்றினீர். எம்மைக் கருணையுடன் வளர்த்தீர்! நாங்கள் இப்போது வளர்ந்து எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டோம். இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டன.
சமீகர் அவற்றை சுதந்திரமாகப் போக அனுமதி அளித்தார்.
அவை விந்திய பர்வதம் அடைந்து அங்கே வேதங்களை ஓதுவதிலும், யோகத்திலும், தவம் செய்வதிலும் காலத்தைக் கழித்து வரலாயின.
இதே சமயம் ஜைமினி என்ற மஹரிஷிக்கு மஹாபாரத சரித்திர விஷயமாக நிறைய சந்தேகங்கள் தோன்றி இருந்தன. தனக்குண்டான சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு அவர் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகினார்.
மார்க்கண்டேயரோ ஜைமினியிடம், ஞானவான்களாக உள்ள அந்த நான்கு பட்சிகளிடம் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
ஜைமினி உடனே அந்த பட்சிகளிடம் வந்து தனது சந்தேகங்களைச் சொல்ல அவை அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தன.
அந்த பக்ஷிகள் கூறிய அனைத்தும் மார்க்கண்டேய புராணத்தில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!̀
ச.நாகராஜன்
மகத தேசத்தை பிருகத்ருதன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.
கீர்த்தியும் செல்வமும் பெற்றவனாக இருந்த அவன் காசி ராஜனுடைய இரு குமாரிகளை மணம் செய்தான். ராஜ்ய பரிபாலனத்தை நன்றாகச் செய்து வந்த அவன் தனக்கு வாரிசாக வர ஒரு புத்திரனுக்காக ஏங்கி இருந்தான். ஆனால் அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. ஆகவே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தான்.
உரியவர்களைக் கலந்தாலோசித்து புத்திரகாமேஷ்டி யாகம் உள்ளிட்ட யாகங்களைச் செய்தான். ஆனால் பலன் ஏற்படவில்லை. துயரம் அதிகமாயிற்று.
ஒரு சமயம் கௌதம ரிஷியின் வம்சத்தில் உதித்த கக்ஷிவத் என்ற ரிஷியின் புத்திரராகிய மஹரிஷி சண்டகௌசிக ரிஷி தான் செய்து வந்த உக்கிரமான தவத்தைச் சற்று நிறுத்தி விட்டு உலகில் சஞ்சாரம் செய்து வந்தார். ஒரு மரத்தின் நிழலில் வந்து அவர் உட்கார்ந்தார்.
அரசன் இதைக் கேள்விப்பட்டுத் தன் இரு மனைவி சகிதம் அவரை வந்தடைந்து அவர் கால்களில் வீழ்ந்தான்.
அவருக்கு அநேக ஆடை அணிகளைக் கொடுத்து அவரை பூஜித்தான்.
இதனால் சந்தோஷமடைந்த மஹரிஷி, “ஓ! அரசனே! உன் பால் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. உனக்கு வேண்டும் வரங்களைக் கேள்” என்றார்.
அரசன் கண்களில் நீர் ததும்பிற்று. “மஹரிஷியே! என் ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்குச் செல்லக் கூட சித்தமாக இருக்கிறேன். எனக்கு புத்திரன் இல்லாததால் பாக்கியம் அற்றவனாக இருக்கிறேன். ஆகவே வரத்தினாலும் எனக்கு பிரயோஜனமில்லை; என் ராஜ்யத்தினாலும் எனக்கு பிரயோஜனம் இல்லை” என்றான்.
இதைக் கேட்ட ரிஷி தன் இந்திரியங்களை அடக்கி அந்த மாமரத்தின் அடியில் யோக தியானத்தில் புகுந்தார். அப்போது அவர் மடியில் இனிய மாங்கனி ஒன்று விழுந்தது. முனிவர் அதை எடுத்து மந்திரங்கள் சொல்லி அதை அரசன் கையில் கொடுத்தார்.
“அரசே! நீ ராஜ்யத்திற்குத் திரும்பிப் போகலாம். உனது மனோபீஷ்டம் நிறைவேறும். நீ காட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை” என்றார்.
இதனால் சந்தோஷம் அடைந்த மன்னன் நேராக தனது ராஜ்யத்திற்குச் சென்றான்.
அந்த மாம்பழத்தைத் தனது இரு ராணிமார்களுக்கும் கொடுத்தான்.
காலப்போக்கில் அவர்கள் கர்ப்பம் தரித்தனர். இரு ராணிகளும் ஒரு தேகத்தின் இரண்டு கண்டங்களைப் பெற்றனர். ஒரு கண், ஒரு கை, ஒரு கால், அரை வயிறு, அரை முகம், அரை பிருஷ்டம் என ஒரே மாதிரியான இரண்டு கண்டங்களைக் கண்டு அவர்கள் நடுநடுங்கினர். இருவரும் ஆலோசித்து அந்த கண்டங்களை இரு தாதிமார்களிடம் கொடுத்து அவற்றை நன்கு மூடச் செய்து நகர்புறத்தில் கொண்டு நாற்சந்தியில் எறியச் செய்தனர்.
அந்த இரு துண்டங்களையும் ஜரை என்ற ராக்ஷஸி எடுத்து இரண்டையும் ஒன்று சேர்த்தாள்.
அது உயிர் பெற்ற குழந்தையாயிற்று.
அதை அவள் அரசனிடம் சென்று கொடுத்தாள். அரசன் ஜரையால் ஒன்று சேர்க்கப்பட்டு உயிர் பெற்ற குழந்தை ஆதலால் அந்தக் குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயர் சூட்டினான்.
இந்த ஜராசந்தன் தான் காலப் போக்கில் மிக்க வலிமை பெற்ற மன்னனாக ஆனான். பல அரசர்களை ஜெயித்தான்.
கிருஷ்ண பகவானுடன் பல முறை யுத்தங்கள் செய்து இறுதியில் பாண்டவர்களுள் ஒருவனான பீமனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.
இந்த வரலாறை மஹாபாரதம் சபா பர்வத்தில் பதினேழாவது அத்தியாயத்தில் விரிவாகப் படிக்கலாம்.
மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!
ச.நாகராஜன்
கந்தர்வ உலகில் சுக சங்கீதி, சுசீலன், ஸ்வரபேதி, சந்திரகாந்தன்,சுப்ரபன் என்று ஐந்து கந்தர்வர்கள் இருந்தனர். அவர்களுக்கு முறையே ப்ரமோகினி, சுசீலை, சுஸ்வரை, சுதாரை, சந்திரிகை ஆகிய அழகிய பெண்கள் இருந்தனர்.
கந்தர்வ மங்கையர் என்பதால் அவர்களின் அழகு சுடர் விட்டுப் பிரகாசித்தது.
நிலவு போன்ற தேக காந்தியும், சந்திரனைப் போன்ற அழகிய முகமும், பார்ப்பவர்கள் மனதைக் கவரத்தக்கபடி அழகே ஒரு உருவம் எடுத்து வந்தது போன்ற அவர்களைக் கண்டால் யாருக்குத் தான் பிடிக்காது?
இந்த இயற்கை அழகோடு சர்வ ஆபரணங்களினால் அலங்காரம் செய்து கொண்டும், மிகுந்த சங்கீத ஞானத்தைக் கொண்டும் நானாவித லீலைகளைச் செய்து கொண்டும் அவர்கள் ஐவரும் குபேரனுடைய தோட்டத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர்.
ஒரு சமயம் வைகாசி மாதத்தில் பூலோகம் நோக்கி அவர்கள் ஐவரும் வந்தனர். நர்மதை நதி தீரத்தை அடைந்த அவர்கள் பார்வதி தேவியை பூஜிப்பதற்காக அங்கிருந்த நந்தவனத்திலிருந்து பலவித மலர்களைப் பறித்துக் கொண்டு, ஸ்நானம் செய்தனர். லோகமாதாவை சந்தனம், புஷ்பம் ஆகியவற்றால் மிகுந்த பக்தியுடன் பூஜித்தனர். பின்னர் பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
அப்போது அந்த நதி தீரத்திற்கு மாத்யான்ஹ சந்தி ஜெபம் செய்ய ஒரு பிரம்மசாரி வந்தார். அழகிய மேனி கொண்ட அவரது விசாலமான கண்கள், அகன்ற மார்பு, முழங்கால் வரை நீண்ட கைகளுடன், மான் தோல், தண்டம், இடுப்பில் தர்ப்பை ஆகியவற்றுடன் இருந்த அவரது யௌவன ஸ்வரூபத்தைக் கண்ட அந்த ஐந்து மங்கையரும் வேடனால் அடிக்கப்பட்ட மான்கள் போல மன்மத பாணத்தால் அடிக்கப்பட்டனர்.
ஐவரும் அவரைக் காம விகாரத்துடன் நோக்கினர்.
‘நமக்குத் தகுந்த ஒருவர் வந்து விட்டார்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட அவர்கள், ‘இவர் யார்? கந்தர்வரா, கின்னரரா, சித்தரா அல்லது இஷ்டம் போல உருவை மாற்ற வல்லவரா, ரிஷி குமாரரா’ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
‘பார்வதி தேவியை பூஜித்ததன் பலனாகவே இவர் இங்கு வந்திருக்கிறார்’ என்று எண்ணிய அவர்கள் இவர் மன்மதன் போலத் தோற்றமளித்தாலும் கூட ரதி தேவி இல்லையே, ஆகவே இவரை நாம் அணுகலாம் என்று நிச்சயித்தனர்.
இவர்கள் பேசுவது அனைத்தையும் அந்த பிரம்மசாரி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் வேதநிதி முனிவரின் குமாரர். அவர் பெயர் அக்னிபர்.
மிகுந்த புத்திசாலியான அந்த ரிஷிகுமாரர் தனக்குள் யோசிக்க ஆரம்பித்தார்.
‘விஸ்வாமித்திரர், பராசரர், கண்டு முனிவ்ர், தேவலர் உள்ளிட்ட பல பெரிய ரிஷிகள் கூட பெண் மயக்கத்தினால் தம் வசம் இழந்து தவத்தை இழந்தனர். ஆகவே என்ன செய்தால் இவர்களின் காமவலையிலிருந்து தப்பிக்கலாம்’ – இப்படி எண்ணமிட்ட அக்னிபர் அவர்கள் தம்மை அணுகுமுன் தாம் வீட்டிற்குச் செல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தார். தனது யோகபலத்தால் தன் உருவை மறைத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்.
கந்தர்வ மங்கையர் ஐவரும் இந்த அற்புதத்தைக் கண்டு திகைத்தனர்.
“இவர் இந்திரஜாலம் அறிந்த மாயக்காரரோ’ என்று புலம்பினர். மறுநாள் எப்படியும் நதி தீரம் வந்து தானே ஆக வேண்டும் என்று எண்ணிய அவர்கள் ஐவரும் அந்த இரவை அங்கேயே கழித்தனர்.
மறுநாள் காலை சூரியோதயம் சமயம் ஸ்நானம் செய்ய வழக்கம் போல அக்னிபர் அங்கே வந்தார்.
“ஏ! காதலரே! எம்மை ஏமாற்றி விட்டு நேற்று சென்று விட்டீர். இன்று அப்படி முடியாது” என்று கூறியவாறே ஒடிச் சென்று அவரைத் தழுவிக் கொண்டனர்.
அக்னிபர், “நீங்கள் சொல்வது எனக்கு அநுகூலமாகவே இருக்கிறது. ஆனால் நான் இப்போது குருகுலவாசத்தில் வித்யாப்யாசம் செய்து வருகிறேன். ஆகவே விதிகளுக்கு மாறாக பெண்களுடன் உடலுறவு கொள்வது தகாது. இது ப்ரம்மசரிய விரதத்திற்கு பங்கமாகி விடும்” என்றார்.
கந்தர்வ மங்கையரோ அவரைப் பலவாறாக நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். தங்களை காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.
அக்னிபர், “குருவின் அனுமதியின்றி என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.
அதற்கு அவர்கள், ‘நீர் ஒரு ஒரு முட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் ஒரு புத்திமானானவன் வலுவில் வரும் உத்தம அழகியை தள்ளவே மாட்டான். அதை தர்மசாஸ்திரமும் ஆமோதிக்கிறது. உத்தமமான பெண்ணாக இருந்தால் அவளை ஏற்றுக் கொள் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.
நாங்களோ தேவ லோகத்துப் பெண்கள். நீர் அரிய தவம் செய்தாலும் கூட எங்களைப் போன்ற தெய்வீக மங்கையர் உமக்குக் கிடைப்பது அரிது! இருந்தாலும் எம்மை நீர் விலக்கினால் பிரம்மா படைத்த உமது புத்தியைப் பற்றி என்ன தான் சொல்வது?!” என்றனர்.
அக்னிபர், “ ஒ! மான் போன்ற விழிகளைக் கொண்ட மங்கையரே! தர்மத்தையே செல்வமாகக் கொண்டவர்கள் அதை எப்படிக் கைவிட முடியும்? தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் சாஸ்திரவிதிப்படி கடைப்பிடித்தால் தான் அது பலனைக் கொடுக்கும். ஆகவே இந்த நேரம் கெட்ட நேரத்தில் – அகாலத்தில் – ஒரு போதும் உங்களை பாணிகிரஹனம் செய்து கொள்ள மாட்டேன்” என்று உறுதிபடக் கூறினார்.
முனிகுமாரரின் திடமான பதிலைக் கேட்ட அவர்கள், அவரை விடவில்லை.
காமவெறி அதிகமானதால் அவரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்தனர். இன்னும் காம லீலைகளை ஆரம்பித்தனர்.
ஆனால் அக்னிபர் கொஞ்சமேனும் தன் உறுதியிலிருந்து தளரவில்லை. அவர்கள் மீது அவர் கோபம் கொண்டார்.
“நீங்கள் ஐந்து பேரும் பிசாசுகளாக மாறக் கடவீர்” என்று ஒரு சாபத்தைக் கொடுத்தார்.
இதனால் மிகவும் சோகமடைந்த அந்த ஐந்து கந்தர்வ மங்கையரும், “குற்றமற்ற எங்களுக்கு இப்படி ஒரு சாபம் கொடுக்கலாமா? உமக்கு அநுகூலம் செய்ய வந்தோம். எமக்குக் கெடுதி செய்து விட்டீர். நீர் தர்மநாசம் செய்பவர் என்பது நிச்சயமாகி விட்டது. ஆசையுள்ளவர்கள், பக்தர்கள், நண்பர்கள் ஆகியோர் விஷயத்தில் கோபம் கொண்டு தீமை இழைப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்லதை அடைய மாட்டார்கள். எமக்கு இப்படி கொடிய சாபத்தைக் கொடுத்த நீரும் பிசாசாகக் கடவது” என்று பதில் சாபம் கொடுத்தனர்.
ஆக அக்னிபரும் அந்த ஐந்து கந்தர்வ மங்கையரும் பிசாசுகளாக மாறினர். அங்கும் இங்கும் அலைந்து மிகவும் துன்பப்பட்டனர்.
சிறிது காலம் சென்றது. அப்போது லோமசர் என்ற மஹரிஷியை அவர்கள் கண்டனர். அவரைக் கண்ட அவர்கள் அவரை ஆகாரமாகப் புசிக்கலாம் என்று அவரை நெருங்கினர்.
ஆனால் அவரது தவ வலிமையினால் அவரது அருகில் கூட அவர்களால் போக முடியவில்லை.
“ஹே! முனிவரே! சாதுக்களின் சேர்க்கை மிகுந்த பாக்கியவான்களுக்கே கிடைக்கும். கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதை விட சாதுக்களின் சகவாசம் மேலானது என்பது உண்மை” என்று சொல்லி தனது பூர்வ விருத்தாந்தத்தை விவரமாக எடுத்துக் கூறி விமோசனம் வேண்டினார்.
லோமசர் அவர்கள் பால் மிகவும் பரிதாபப்பட்டார்.
அனைவரையும் நோக்கி, “நீங்கள் அனைவரும் என்னுடன் வாருங்கள். ரேவா நதியில் என்னுடன் ஸ்நானம் செய்யுங்கள். சாபம் நீங்கி சுகம் பெறுவீர்கள்” என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தார்.
அனைவரும் ரேவா நதியில் ஸ்நானம் செய்தவுடன் பிசாசு உருவம் நீங்கி தங்கள் அழகிய சுய உருவங்களை அடைந்தனர்.
முனி குமாரரான அக்னிபர் லோமசரின் உத்தரவின் பேரில் அந்த ஐந்து கந்தர்வ மங்கையரையும் மணந்து அவர்களுடன் சுகமாய் வாழலானார்.
இறுதியில் அனைவரும் சுவர்க்கத்தை அடைந்தனர்.
மஹரிஷி அக்னிபரின் வரலாற்றை இப்படி பாத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது!
மஹரிஷி வியாஸரின் பூர்வ ஜென்மம் பற்றிய விவரம் ஒன்றை மஹாபாரதம் கூறுகிறது.
இதை சாந்தி பர்வம் 359வது அத்தியாயத்தில் காணலாம்.
இந்த வரலாறை ஜனமேஜயர் வைசம்பாயனரிடம் கேட்கிறார். ஜனமேஜயர் முன்னொரு காலத்தில் நடந்ததை விவரிக்கிறார்.
வராகம், நரசிம்மம், வாமனம், முதலிய அவதாரங்களை எடுத்த பகவான் ஸ்ரீ ஹரியானவர் அசுரர்களை அழித்து பூபாரத்தை நீக்கினார்.
பின்னர் அவர் ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும்படியாக ‘போ:’ என்ற சப்தத்தை உச்சரித்து அருளினார்.
அதிலிருந்து ‘ஸாரஸ்வத்’ என்ற ஒரு ரிஷி உண்டானார். அவருக்கு அபாந்த்ரதமஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
அவர் மிகுந்த தவ மஹிமை உடையவர். முக்காலங்களையும் உணர்ந்தவர். சத்தியத்தையே பேசுபவர். திடமான விரதங்களை அனுஷ்டிப்பவர். அவர் அஞ்ஞானத்தை முற்றிலும் போக்கியபடியால் அவ்விதத் தன்மை உடையவர் என்ற பொருள் படும்படி மேலே கூறியபடி ‘அபாந்த்ரதமஸ்’ என்ற பெயரும்
ஸ்ரீமந் நாராயணருடைய வாக்கிலிருந்து ஜெனித்ததால் ‘ஸாரஸ்வதி’ என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.
அம்முனிவர் நாராயணரை வணங்க அவர் முனிவரை நோக்கிக் கூறலானார் இப்படி :” ஓ! அறிவை உடையவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! நீர் வேதங்களைப் பகுக்கும் தொழிலை மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஆகவே, நீர் எனது கட்டளைப் பிரகாரம் செய்யக் கடவீர்”
அதன்படியே அந்த முனிவரும் வேதங்களைப் பிரித்து ஒழுங்காய் அமைத்தார்.
அவருடைய அரிய செய்கையைக் கண்ட ஸ்ரீ ஹரி மிகவும் திருப்தி அடைந்தார். அவரது அரிய தவம், ஆசார ஒழுக்கம், விரதம், இந்திரிய நிக்ரஹம் ஆகியவற்றைக் கண்டும் பகவான் மகிழ்ச்சியுற்றார்.
பின்னர் அவர் முனிவரைப் பார்த்து, “ஓ! குமாரனே! ஒவ்வொரு மன்வந்தரத்திலும் நீர் இந்தப் பிரகாரம் வேதங்களை வகுத்துத் தருவீராக. இந்தப் பணியால் ஒருவராலும் மீற முடியாததும் மாறுதலை அடையாததும், சாஸ்வதமுமான உயரிய நிலையை அடையக் கடவீர்.
கலியுகம் ஆரம்பிக்கும் காலத்தில் பரத வம்சத்தில் உதித்து கௌரவர்கள் என்ற பெயரை உடைய ராஜகுமாரர்கள் உம்மிடத்திலிருந்து பிறப்பார்கள். அவர்கள் சிறந்த நாடு நகரங்களை அரசாண்டு கீர்த்தி பெற்றவராய் விளங்குவர். நீர் இல்லாத காலத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு நாசத்தை அடைவார்கள். அப்போது நீர் மிகுந்த சக்தி உடையவராய் வேதங்களை எல்லாம் பல பிரிவுகளாகப் பகுப்பீர். தர்மக் குறைவால் இருளுண்ட அந்த யுகத்தில், உம்முடைய தேகமும் கறுப்பு நிறமாக இருக்கும். அநேக தர்ம சாஸ்திரங்களையும், நியாய சாஸ்திரங்களையும் நீர் ஏற்படுத்துவீர். அவ்வளவு தவ மஹிமையை நீர் பெற்றாலும், உலகப் பற்றுகளிலும்,
ஆசாபசங்களிலுமிருந்து நீர் நீந்த முடியாதவராக இருப்பீர். ஆனால் உமது புத்திரனோ, மஹாதேவருடைய அருளால், எவ்விதப் பற்றும் அற்றவனாய் பரமாத்மாவைப் போல விளங்குவான். இப்படியே நடக்கும்.
பிரம்மாவினுடைய மானஸீக புத்ரர் என்று கற்றறிந்த பிராமண சிரேஷ்டர்களால் கூறப்படும் மஹா புத்திமானாகிய சிறந்த தேஜஸும் கொண்ட வசிஷ்ட முனிவருடைய வம்சத்திலிருந்து பராசரர் என்ற ஒரு சிறந்த முனிவர் பிறப்பார். அவர் நீர் கலியுகத்தில் அவதரிக்கும் போது உமக்குப் பிதாவாக இருப்பார்.
மூன்று காலத்தையும் அறியும் சக்தி உடையவராக நீர் இருப்பீர். உமது தவ மஹிமையினாலும், எனது அருளாலும் அநேகமாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததைக் கூட அறியும் சக்தியை நீர் கொண்டிருப்பீர்.
நீர் அந்தப் பிறப்பில் என்னை யது வம்சத்தில் அவதரித்த கையில் சக்ரமேந்திய கிருஷ்ணனாகக் காண்பீர்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
by ச.நாகராஜன்
மிகச் சிறந்த தவ வலிமை உடைய அதிசயிக்க வைக்கும் மஹரிஷி -அங்கிரஸ்.
பிரம்மாவின் ஆறு புத்திரர்களில் அங்கிரஸ் ஒருவர். பிரம்மாவின் தவ மஹிமையினால் மரீசி, அங்கிரஸ், அத்திரி, புலஸ்தியர், புலஹர், க்ரது என அவருக்கு ஆறு புத்திரர்கள் பிறந்தனர்.
அங்கிரஸ் பிரம்மாவின் முகத்திலிருந்து உருவானவர். இது ஆதி பிறப்பு.
இன்னொரு வரலாறு உண்டு.
ஸ்வாயம்பு மன்வந்தரத்தில் சிவபிரானின் சாபத்தால் எல்லா ரிஷிகளும் தங்கள் சரீரத்தை இழந்தனர்; மேலுலகம் சேர்ந்தனர். பிறகு வைவஸ்வத மன்வந்தரத்தில் பிரம்மாவின் வீர்யம் கீழே விழக் கண்டு அதை தேவர்களுடைய பத்தினிகளும், தாய்மார்களும் எடுத்து அக்கினியில் ஆகுதி செய்தனர்.
அந்தத் தணலிலிருந்து அங்கிரஸும் உருவானார். அதனால் இவருக்கு ஆங்கிரஸ் என்ற பெயரும் உண்டு.
அங்கிரஸுக்கு, தேவ குருவாகிய பிரஹஸ்பதி, உதத்யர், சம்வர்த்தர் என்று மூன்று புத்திரர்கள் உண்டு.
அங்கிரஸ் அபூர்வமான தவத்தை மேற்கொண்டார். அந்தத் தவத்தின் பலனாக அக்னிக்கு மேலாக தனது தேஜஸினால் ஜொலிக்க ஆரம்பித்தார். உலகம் முழுவதையும் பிரகாசமடையச் செய்தார்.
அதே காலத்தில் அக்னி பகவானும் தவம் செய்து கொண்டிருந்தார். அங்கிரஸின் தேஜஸுக்கு முன்னால் அக்னி தேவனின் ஒளி மங்கியது. அக்னி தேவன் என்ன செய்வது என்று திகைத்தார்.
பிரம்மதேவன் இந்த உலகத்திற்கு இன்னொரு தேவனை சிருஷ்டித்திருக்கிறார் போலும் என்று அவர் எண்ணினார்; பயந்தார்.
நேராக அங்கிரஸ் மஹரிஷியைச் சென்றடைந்தார்.
ஆனால், அங்கிரஸ் அக்னி தேவனுக்குத் தைரியம் கூறினார்.
“நீரே ஆதியில் இருளைப் போக்குவதற்காக பிரம்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர். ஆதலால் எப்போதும் போல அக்னியாக இருந்து உலகில் வியாபித்து அதைப் பிரகாசம் செய்து கொண்டிரும்” என்றார் அவர்.
உடனே அக்னி பகவான், “உலகத்தில் எனது கீர்த்தி மழுங்கி விட்டது! நீரே அக்னிதேவனாக ஆகி விட்டீர். உலகத்தில் அனைத்து ஜனங்களும் உம்மையே அக்னியாக மதிக்கின்றார்கள். ஆகவே அக்னி தேவன் என்ற முதன்மை இடத்தை நான் விட்டு விட்டேன். அந்த ஸ்தானத்தை நீரே வகிப்பீராக. நான் உமக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கின்றேன்” என்றார்.
அதற்கு அங்கிரஸ், “ நீர் முன் போல அக்னி பகவானாக இருந்து உலகத்தில் இருளைப் போக்கியும், மற்ற தேவதைகளுக்கு ஹவிர் பாகங்களைப் பகிர்ந்து கொடுத்தும், ஜனங்களை மோக்ஷ வழியில் சேர்க்கும் படியான பரிசுத்தமான மேன்மையான் தொழிலை அனுஷ்டித்தும் வாரும். என்னை உமது முதல் குழந்தையாகச் செய்து கொள்ளும்” என்று பெருந்தன்மையுடன் கூறினார்.
இந்த வார்த்தையைக் கேட்ட அக்னி பகவான் அவர் கூறிய படியே செய்தார்.
அங்கிரஸ் பற்றிய மேலும் பல செய்திகள் உண்டு.
ஒரு காலத்தில் அங்கிரஸ் மஹரிஷி தம்முடைய அளப்பரிய தவ சக்தியினால் உலகத்திலுள்ள நீரையெல்லாம் குடித்து விட்டார். அதற்குப் பின்னரும் அவர் தாகம் தணியவில்லை. ஆகவே ஒரு பெரிய அலையை உண்டாக்கி, அதன் மூலமாக உலகெங்கும் நீர் நிரம்பி இருக்கும் படி செய்தார்.
ஒரு சமயம் அங்கிரஸ் வாயு பகவான் மீது கோபம் கொண்டு சினந்ததில் அவர் பயந்து உலகத்தை விட்டு ஓடிப் போய் பிராமணர்களுடைய அக்னிஹோத்திரத்தில் வெகுகாலம் மறைந்து வாசம் செய்தார்.
இப்படி அங்கிரஸ் மஹரிஷி அக்னி, வருணன், வாயு ஆகிய தேவர்களைத் தனது சக்தியினால் நடுங்கும் படி செய்யும் அளவு தவ மஹிமை கொண்டவராக விளங்கினார்.
மஹாபாரத யுத்தத்தில் அங்கிரஸ் பற்றிய ஒரு செய்தி உண்டு. யுத்தம் மிகக் கடுமையாகவே துரோணர் நாலா புறங்களிலும் தன் திவ்ய அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். உடனே அங்கிரஸ் துரோணர் முன் தோன்றி, “எண்ணற்ற வீரர்களை பிரம்மாஸ்திரத்தை ஏவி நீர் கொன்று விட்டீர். உமது முடிவு நெருங்கி விட்டது. ஆகவே உமது ஆயுதத்தைக் கீழே வையும். சண்டையை நிறுத்துவீர்” என்றார். ஆனால் அதை துரோணர் கேட்கவில்லை. அவரது முடிவு நெருங்கியது.
ஒரு சமயம் அங்கிரஸ் சூரியனையே காப்பாற்றியுள்ளார். (மஹாபாரதம் வனபர்வம், 92ஆம் அத்தியாயம்)
ஒரு சமயம் அக்னி தேவன், அங்கிரஸ் மஹரிஷிக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தவில்லை . இதனால் வெகுண்ட அங்கிரஸ் அக்னியை சபிக்கவே, அன்றிலிருந்து தான் தீயிலிருந்து புகை எழும்ப ஆரம்பித்தது. (மஹாபாரதம், அனுசாஸன பர்வம், 153ஆம் அத்தியாயம்)
அங்கிரஸ் மஹரிஷி தீர்த்த ஸ்தலங்களைப் பற்றியும் அங்கு செல்வதால் ஏற்படும் பயன்களை விவரித்துள்ளார். (மஹாபாரதம், அனுசாஸன பர்வம், 25ஆம் அத்தியாயம்) உபவாச மேன்மையையும் அவர் விளக்கியுள்ளார்.(மஹாபாரதம், அனுசாஸன பர்வம், 106ஆம் அத்தியாயம்)
இப்படி அங்கிரஸ் மஹரிஷி பற்றி மஹாபாரதம், ஆதி பர்வத்திலும், வன பர்வத்திலும், அநுசாஸன பர்வத்திலும் பல வரலாறுகளைக் காணலாம். மத்ஸ்ய புராணத்திலும் அங்கிரஸ் பற்றிய செய்திகள் உண்டு.
டிசம்பர் 11 மஹாகவி பாரதியாரின் ஜன்ம தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!
மஹரிஷி கவிஞன் பாரதி!
Wriiten by ச.நாகராஜன்
Post No.1472; Dated 10th December 2014
செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான் – ச.நாகராஜன்
தமிழ் தவம் இருந்து பெற்ற கவிஞன்
தமிழ் தவம் இருந்து பெற்ற பிள்ளை பாரதியார். தேசத்தையும் தெய்வத்தையும் ஒன்றாகப் போற்றி தமிழால் பாடி உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த மகாகவி அவன்.
தேசமும் தெய்வமும் ஒன்றே என்பதைப் பல இடங்களில் அவன் குறிப்பிடுகிறான்.
எடுத்துக்காட்டாக இரு இடங்களைக் குறிப்பிடலாம்.
குரு கோவிந்த சிங் கூறுவதாக வரும் பின் வரும்வரிகள் அவன் தன் கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது கண்கூடு:
“காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும்
ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!”
இன்னொரு பாடல் :
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்?
எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி
நல் ஆரிய ராணியின் வில்”
தேசத்தையும் தெய்வத்தையும் தமிழால் பாட அவன் ஏன் முன் வந்தான்?
அதற்கும் அவனே பதில் கூறுகிறான்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!”
உலக மகா கவிஞர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அவன் முன்னணியில் இருப்பதற்கான காரணம் கவிதையை ரஸானுபாவத்திற்காக மட்டும் பாடாமல் தேச எழுச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் பெண் விடுதலைக்கும் இன்னுமுள்ள பிற நல்ல காரணங்களுக்காகவும் பயன்படுத்தி தன் தனித்தன்மையை உறுதிப்படுத்தியது தான்! உயர்ந்த சிந்தனையிலிருந்து ஒருபோதும் கீழே வராமல் இருந்த கவிதை ரிஷி அவன்.
ஆனால் காலத்தின் மாறுதலுக்கேற்ப யுகாவதார கவியாய் அவனை ஏன் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது எனில், இது வரை தோன்றிய அனைத்துக் கவிஞர்களிடமிருந்தும் மாறுபட்டு புதிய நடையில் புதிய சிந்தனையுடன் புதிய லட்சியங்களுக்காக புதிய யுகம் தோன்றுவதற்காக அவன் பாடியது தான்.
போகின்ற பாரதத்தை போ போ போ என்று தூற்றித் தள்ளி விட்டு வருகின்ற பாரதத்தை
“ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”
என்று அவன் வரவேற்ற பாங்கே தனி! இந்தப் பாடலை முழுவதுமாகப் படித்தால் புதிய மந்திரத்தைத் தரும் புது மஹரிஷி கவிஞன் பாரதி என்பதை உணர முடியும்.
பழைய புதிய கவிதா இலக்கணத்தின் சங்கமம்!
அதற்காக சம்பிரதாயமான கவிதை ருசியை அவன் தராமல் இல்லை.
கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:
ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.
பாரதியின் பாடல்கள் அனைத்தும் கோடி சூரிய பிரகாசம் கொண்ட ஒளிப் பாடல்கள். அதில் தெளிவு பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பண்டிதரின் உதவியும் அதைப் புரிந்து கொள்ளத் தேவை இல்லை. சிறு குழந்தை கூட அதைப் படித்துத் தெளிந்து உத்வேகம் பெற முடியும். மனதிற்கு இதமான குளுமையைத் தருவதோடு உயர்ந்த சிந்தனையை மனதில் ஏற்றும் ஒழுக்கம் உள்ள பாடல்கள் அவனுடையவை.
உலகின் ஒப்பற்ற கவிதா வரிகள்
உதாரணத்திற்கு இரு பாடல் வரிகளை இங்கு குறிப்பிடலாம்;
ஆசை முகம் மறந்து போச்சே – சொற்றொடரே எளிமையானது; புதுமையானது; மனதின் உருக்கத்தை வெளிப்படுத்துவது.
ஆசை முகம் மறந்து போச்சே – இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் –எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
பாடலை ஒரு முறை மனம் தோய்ந்து படித்துப் பார்த்தால் இனம் புரியாத ஒரு மேலான உணர்வு தோன்றுகிறது, இல்லையா! இதைத் தொடர்ந்து வரும் வரிகளைப் பார்ப்போம்.
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி” -ஆசை முகம் மறந்து போச்சே!!!
இதற்கு ஈடான வரிகள் உலக இலக்கியத்தில் எங்கும் இல்லை என உறுதிபடக் கூறலாம்! தேன் – வண்டு, ஒளிச் சிறப்பு – பூ, வான் – பயிர், இப்படி ஒரு அருமையான தொடர் வரிசையை மாபெரும் கவிஞன் ஒருவனால் மட்டுமே பளிச் பளிச் என மின்னல் போலத் தர முடியும். இதில் ஒளி, தெளிவு,குளுமை, ஒழுக்கம் ஆகியவற்றைக் காண முடிகிறது அல்லவா!
இன்னொரு பாடலான கண்ணம்மா என் காதலியில் வரும் அமர வரிகளுக்கு ஈடு இணை உண்டா, என்ன?
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
எத்தனை நாட்கள் வேண்டுமோ இதன் சிறப்பினை எடுத்துக் கூற! வேதம் ஆழ்ந்து உரைக்கும் மிக மேலாம் சிந்தனைகளை இதில் காணலாம்!
என்னென்று சொல்வது பாரதியாரின் புகழை!
மஹரிஷி கவிஞன் பாரதியை முழுவதுமாகப் பல முறை படித்தவர்கள் அவன் புகழை முற்றிலும் உரைக்க நாள் ஆயிரமும் நா ஆயிரமும் போதா என்றே கூறுவர். என்றாலும் ஹா.கி, வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் சில வரிகளை இங்கே நினைவு படுத்திக் கொண்டு மகிழ்வோம்:
வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி
ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்
என்று அவர் பாரதியின் புகழை நெஞ்சாரக் கூறி மகிழ்கிறார்.
பாரதியின் கவிதா வரிகளில்
“சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது
அது ஜோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மஹா கவிதை
பாரதியைக் கற்போம்
கற்பார் பாரதி அல்லாது வேறொன்றைக் கற்பாரோ, என்ன!
ஆயுள் முழுவதும் பாரதியைக் கற்போம்; உயர்ந்த மஹரிஷிகளின் சிந்தனையைப் பெறுவோம். தேசமும் தெய்வமும் ஒன்று எனத் தெளிந்து தமிழால் பாடி நலம் பெறுவோம் வளம் பெறுவோம்!