மஹரிஷி கவிஞன் பாரதி!

SM_BHARTHI_2317e(1)

டிசம்பர் 11 மஹாகவி பாரதியாரின் ஜன்ம தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!

மஹரிஷி கவிஞன் பாரதி!

Wriiten by ச.நாகராஜன்
Post No.1472; Dated 10th December 2014

செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான் – ச.நாகராஜன்

தமிழ் தவம் இருந்து பெற்ற கவிஞன்
தமிழ் தவம் இருந்து பெற்ற பிள்ளை பாரதியார். தேசத்தையும் தெய்வத்தையும் ஒன்றாகப் போற்றி தமிழால் பாடி உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த மகாகவி அவன்.
தேசமும் தெய்வமும் ஒன்றே என்பதைப் பல இடங்களில் அவன் குறிப்பிடுகிறான்.
எடுத்துக்காட்டாக இரு இடங்களைக் குறிப்பிடலாம்.

குரு கோவிந்த சிங் கூறுவதாக வரும் பின் வரும்வரிகள் அவன் தன் கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது கண்கூடு:

“காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும்
ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!”

இன்னொரு பாடல் :
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்?
எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி
நல் ஆரிய ராணியின் வில்”

Barathi_by_Kabil

தேசத்தையும் தெய்வத்தையும் தமிழால் பாட அவன் ஏன் முன் வந்தான்?

அதற்கும் அவனே பதில் கூறுகிறான்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!”
உலக மகா கவிஞர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அவன் முன்னணியில் இருப்பதற்கான காரணம் கவிதையை ரஸானுபாவத்திற்காக மட்டும் பாடாமல் தேச எழுச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் பெண் விடுதலைக்கும் இன்னுமுள்ள பிற நல்ல காரணங்களுக்காகவும் பயன்படுத்தி தன் தனித்தன்மையை உறுதிப்படுத்தியது தான்! உயர்ந்த சிந்தனையிலிருந்து ஒருபோதும் கீழே வராமல் இருந்த கவிதை ரிஷி அவன்.

ஆனால் காலத்தின் மாறுதலுக்கேற்ப யுகாவதார கவியாய் அவனை ஏன் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது எனில், இது வரை தோன்றிய அனைத்துக் கவிஞர்களிடமிருந்தும் மாறுபட்டு புதிய நடையில் புதிய சிந்தனையுடன் புதிய லட்சியங்களுக்காக புதிய யுகம் தோன்றுவதற்காக அவன் பாடியது தான்.
போகின்ற பாரதத்தை போ போ போ என்று தூற்றித் தள்ளி விட்டு வருகின்ற பாரதத்தை

small bharati
“ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”

என்று அவன் வரவேற்ற பாங்கே தனி! இந்தப் பாடலை முழுவதுமாகப் படித்தால் புதிய மந்திரத்தைத் தரும் புது மஹரிஷி கவிஞன் பாரதி என்பதை உணர முடியும்.
பழைய புதிய கவிதா இலக்கணத்தின் சங்கமம்!

அதற்காக சம்பிரதாயமான கவிதை ருசியை அவன் தராமல் இல்லை.
கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:

“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”
(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)

ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.

பாரதியின் பாடல்கள் அனைத்தும் கோடி சூரிய பிரகாசம் கொண்ட ஒளிப் பாடல்கள். அதில் தெளிவு பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பண்டிதரின் உதவியும் அதைப் புரிந்து கொள்ளத் தேவை இல்லை. சிறு குழந்தை கூட அதைப் படித்துத் தெளிந்து உத்வேகம் பெற முடியும். மனதிற்கு இதமான குளுமையைத் தருவதோடு உயர்ந்த சிந்தனையை மனதில் ஏற்றும் ஒழுக்கம் உள்ள பாடல்கள் அவனுடையவை.

shivaji bharati
உலகின் ஒப்பற்ற கவிதா வரிகள்
உதாரணத்திற்கு இரு பாடல் வரிகளை இங்கு குறிப்பிடலாம்;
ஆசை முகம் மறந்து போச்சே – சொற்றொடரே எளிமையானது; புதுமையானது; மனதின் உருக்கத்தை வெளிப்படுத்துவது.

ஆசை முகம் மறந்து போச்சே – இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் –எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

பாடலை ஒரு முறை மனம் தோய்ந்து படித்துப் பார்த்தால் இனம் புரியாத ஒரு மேலான உணர்வு தோன்றுகிறது, இல்லையா! இதைத் தொடர்ந்து வரும் வரிகளைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி” -ஆசை முகம் மறந்து போச்சே!!!

jesudas baharati

இதற்கு ஈடான வரிகள் உலக இலக்கியத்தில் எங்கும் இல்லை என உறுதிபடக் கூறலாம்! தேன் – வண்டு, ஒளிச் சிறப்பு – பூ, வான் – பயிர், இப்படி ஒரு அருமையான தொடர் வரிசையை மாபெரும் கவிஞன் ஒருவனால் மட்டுமே பளிச் பளிச் என மின்னல் போலத் தர முடியும். இதில் ஒளி, தெளிவு,குளுமை, ஒழுக்கம் ஆகியவற்றைக் காண முடிகிறது அல்லவா!

இன்னொரு பாடலான கண்ணம்மா என் காதலியில் வரும் அமர வரிகளுக்கு ஈடு இணை உண்டா, என்ன?

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
எத்தனை நாட்கள் வேண்டுமோ இதன் சிறப்பினை எடுத்துக் கூற! வேதம் ஆழ்ந்து உரைக்கும் மிக மேலாம் சிந்தனைகளை இதில் காணலாம்!

என்னென்று சொல்வது பாரதியாரின் புகழை!
bharati ms

மஹரிஷி கவிஞன் பாரதியை முழுவதுமாகப் பல முறை படித்தவர்கள் அவன் புகழை முற்றிலும் உரைக்க நாள் ஆயிரமும் நா ஆயிரமும் போதா என்றே கூறுவர். என்றாலும் ஹா.கி, வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் சில வரிகளை இங்கே நினைவு படுத்திக் கொண்டு மகிழ்வோம்:

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி

ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்

போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்”

என்று அவர் பாரதியின் புகழை நெஞ்சாரக் கூறி மகிழ்கிறார்.
பாரதியின் கவிதா வரிகளில்

“சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது
அது ஜோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மஹா கவிதை

பாரதியைக் கற்போம்

கற்பார் பாரதி அல்லாது வேறொன்றைக் கற்பாரோ, என்ன!

ஆயுள் முழுவதும் பாரதியைக் கற்போம்; உயர்ந்த மஹரிஷிகளின் சிந்தனையைப் பெறுவோம். தேசமும் தெய்வமும் ஒன்று எனத் தெளிந்து தமிழால் பாடி நலம் பெறுவோம் வளம் பெறுவோம்!

******