மஹாகவி காளிதாஸ்! – 2 (Post No.10,397)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,397

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி காளிதாஸ்! – 2

போஜ மஹாராஜனுக்கு ஒரு ஆசை வந்தது. தான் இறந்து விட்டால் அதற்கு சரம கவியை எப்படி காளிதாஸன் பாடுவான் என்று அவனுக்குத் தோன்ற தனக்கு ஒரு சரம கவியைப் பாடுமாறு போஜன் காளிதாஸனை வேண்டினான். ‘ஐயோ, இப்படிக் கேட்கலாமா என்று கண்ணீர் சிந்திய காளிதாஸன் மன்னனை விட்டு உடனே அகன்றான். சில நாட்கள் கழித்து போஜனே மாறு வேடம் பூண்டு காளிதாஸன் சென்ற இடத்தைக் கண்டு பிடித்து அவனைச் சந்தித்தான். ‘எங்கிருந்து வருகிறீர்? என்று மாறுவேடம் பூண்ட மன்னனைப் பார்த்து சகஜமாக காளிதாஸன் கேட்கவே, உடனே போஜன் ‘தாரா நகரிலிருந்து வருகிறேன் என்றான். மன்னரின் நினைவாகவே இருந்த காளிதாஸன் ‘மன்னர் போஜன் சௌக்கியமா என்று ஆவலுடன் கேட்டான். “ஐயோ, அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதா? மன்னர் போஜன் இறந்து விட்டார் என்று ஒரு பொய்யைச் சொன்னான் போஜன்.

இதனைக் கேட்ட காளிதாஸன் தாங்க முடியாத துக்கத்தால் ஆவென்று அலறினான். அவன் வாயிலிருந்து துக்கம் தாளாமல் சரம கவி ஒன்று வந்தது இப்படி:                                                                      

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி |                       

 பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவம் கதே||                                        

अद्य धारा निराधारा निरालम्बा सरस्वती।
पंडिताः खंडिताः सर्वे भोजराजे दिवंगते।।                                                                                                           

 “தாரா நகரம் நிராதரவாய் ஆகி விட்டது! கலைத் தெய்வமான சரஸ்வதி ஆதரவற்றவளானாள். போஜராஜன் ஸ்வர்க்கம் அடைந்து விட்டான் என்பதால் எல்லா பண்டிதர்களும் துக்கத்தால் துடிக்கின்றனர்.”

காளிதாஸன் வாக்கு சரஸ்வதி வாக்கு என்பதால் இதை மகிழ்ச்சியுடன் கேட்ட போஜ  மன்னன் உடனே கீழே விழுந்து இறந்து போனான். அனைத்து மக்களும் அங்கு கூடி, நடந்ததை உணர்ந்து காளிதாஸனிடம் கூற உடனே தான் பாடிய கவிதையைச் சற்று மாற்றிப் பாடினான் காளிதாஸன் இப்படி:                                                                          

அத்ய தாரா சதாதார் சதாலம்பா சரஸ்வதி|                           

பண்டிதா: மண்டிதா: சர்வே போஜராஜ்யே புவம் கதே ||                                                                                                                                                                       

अद्य धारा सदाधारा सदालम्बा सरस्वती।
पंडिताः मंडिताः सर्वे भोजराजे भुवंगते।।                                              

தாரா நகரம் ஆதரவுள்ளதாக ஆகி விட்டது. சரஸ்வதி தேவி ஆதரவுள்ளவளாகி விட்டாள். பண்டிதர்கள் போஜராஜன் பூமிக்கு வந்து விட்டதால் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர். இப்படிப் பாடியவுடனே போஜராஜன் உயிர் பெற்று எழ அனைவரும் மகிழ்ந்தனர்.

போஜன் என்னவெல்லாம் மனதில் நினைத்தானோ அதையெல்லாம் கண்டு பிடித்துக் கவிதையாக்கும் வல்லமை காளிதாஸன் ஒருவனுக்கே உண்டு. இதற்கு ஏராளமான சம்பவங்கள் உரிய கவிதையுடன்.சொல்லப்படுகின்றன –  எடுத்துக் காட்டாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் காணலாம்.

ஒரு முறை போஜனுடைய நாட்டில் காட்டு மிருகங்கள் பயிர்களை அழிக்க, குடி மக்கள் மன்னனிடம் வந்து முறையிட்டனர். உடனே போஜன் காடு நோக்கிச் சென்று கொடிய மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். நெடுநேரம் ஆன பின்னர் தாகம் அவனை வருத்த அவன் ஒரு சோலைக்குச் சென்று நீர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றான். அப்போது குரங்கு ஒன்று நாவல் மரம் ஒன்றின் மீது ஏறி கொம்புகளை அசைத்து சேஷ்டை செய்தது.கிளைகள் ஆடவே, பழுத்திருந்த சில நாவல் பழங்கள் அங்கிருந்த தடாகத்திலே விழுந்தன. அதனால் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற சப்தம் எழுந்தது. இந்த விந்தையான ஒலிக்குறிப்பை மனதில் கொண்ட போஜன் மறு நாள் அரசவை கூடியதும் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற ஒரு பாதத்தைச் சொல்லி மீதி கவிதையை முடிக்குமாறு கவிஞர்களிடம் கூறினான். அனைத்துக் கவிஞர்களும் இதென்ன ‘குளுகுக் குளுக்கு என்று நகைத்தனர். காளிதாஸன் மட்டும் உடனே ஒரு ஸ்லோகத்தை இயற்றினான்:

“ஜம்பூ பலானி பத்க்வாநி பதம்தி விமலே ஜலே                                          

கபி கம்பித சாகாப்யோ குளுகுக் குளுகுக் குளு”

என்று சொல்லி நாவல் மரக் கிளையை குரங்கு அசைக்க கொம்பில் பழுத்திருந்த நாவல் பழங்கள் தடாகத்தில் விழுந்த போது எழுந்த சப்தம் குளுகுக் குளுகுக் குளு என்றான். போஜன் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தான். அனைத்துக் கவிஞர்களும் மக்களும் காளிதாஸரின் கவிதா சாமர்த்தியத்தை முற்றிலுமாக உணர்ந்தனர்.

உலகினர் காளிதாஸருக்கு அளித்த மரியாதையைக் கண்டு தண்டி முதலான பெரும் கவிஞர்கள் பொறாமை கொண்டனர். ஒரு முறை யார் பெரிய கவிஞர் என்ற பெரும் போட்டி ஏற்பட்டது. முடிவு எட்டாத நிலையில் அனைவரும் சரஸ்வதி தேவியின் முன் கூடினர். சரஸ்வதி தேவியை நடுவராகக் கொண்டு விவாதத்திற்கு முடிவு கட்ட அனைவரும் முனைந்தனர். சரஸ்வதியை வணங்கி யார் பெரிய கவிஞர் என்று கேட்க அசரீரி ஒன்று எழுந்தது. ‘கவிர் தண்டி கவிர் தண்டி! “தண்டியே கவிஞன் தண்டியே கவிஞன் – இந்த முடிவைக் கேட்ட அனைவரும்  ஆஹா ஆஹா என்று கூவினர். தண்டிக்கோ மிகுந்த சந்தோஷம். காளிதாஸர் திகைத்தார். “அப்போது நான்? என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் சரஸ்வதியைப் பார்த்துக் கேட்க அசரீரி ஒலி மீண்டும் எழுந்தது. ‘அஹம் த்வமேவ, அஹம் த்வமேவ் நானே நீ நானே நீஎன்ற இந்த ஒலியைக் கேட்டதும் தண்டி உட்பட்டோர் காளிதாஸரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். அப்படி சரஸ்வதியின் அருள் கடாக்ஷம் பெற்ற சரஸ்வதி தேவியின் அவதாரம் அவர் என்பது இந்தச் சம்பவத்தால் நிரூபிக்கப்பட்டது.

மஹாகவி காளிதாஸனைப் புகழ்வோர் அனைவரும் ‘உபமா காளிதாஸஸ்ய என்று உவமைக்கு ஒரு கவி காளிதாஸன் என்று கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம். ரகுவம்சத்தில் சுயம்வரத்தில் இந்துமதி தன் மணாளனை வரிப்பதற்காக வரிசையாக நின்றிருந்த ராஜகுமாரர்கள் அருகிலே செல்லும் போது ‘அவள் ஒளிச்சுடர் போல சென்றாள் (சஞ்சாரிணி தீப ஷிகேன ராத்ரௌ 6 -67) என்கிறார்.

சுடர் அருகே வந்தவுடன் நம்பிக்கையுடன் பிரகாசமாகும் மன்னர்களின் முகம் அவள் நகர்ந்தவுடன் இருண்டதாம்! அற்புதமான இந்த உவமையைப் பல வித அர்த்தங்களுடன் கூறி உலகம் கொண்டாடுகிறத்!                            ரகுவம்சத்தின் ஆரம்ப ஸ்லோகமே உலகைக் கவரும் ஒரு ஸ்லோகமாகும்.

வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்யதே|                      

 ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!

ஜகத்தைப் பரிபாலிக்கும் பார்வதியும் பரமேஸ்வரனும் ‘சொல்லும் பொருளும் போல’ என்று இங்கு காளிதாஸர் குறிப்பிடுகிறார். இதை பிற்காலக் கவிஞர்கள் ஏராளமானோர் அப்படியே எடுத்தாள்வதைக் காணலாம். எடுத்துக் காட்டாக அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் 28ஆம் பாடலில் ‘சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே’ என்று கூறுவதைச் சொல்லலாம்.

**

to be continued…………..

tags மஹாகவி, காளிதாஸ்! – 2

மஹாகவி காளிதாஸ்! – 1 (Post No.10,394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,394

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 29-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

மஹாகவி காளிதாஸ்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

மஹாகவி காளிதாஸ் என்றவுடனேயே இந்தியர்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். அப்படிப்பட்ட மாமேதை. உலகப் பெரும் கவி அவர். அவர் பிறப்பு பற்றிய பல்வேறு மாறுபட்ட வரலாறுகள் உள்ளன. அவருடைய தந்தையாரின் பெயர் சதாசிவம் என்றும் உஜ்ஜயினி நகருக்கு அருகில், சரஸ்வதி நதிக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில்  பிராமண குலத்தில் அவர் பிறந்தார் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. இளம் வயதிலேயே அவரது பெற்றோர் இறக்க, அவரை ஒரு மாட்டிடையன் வளர்த்து வரலானான். காளிதாஸன் ஒன்றுமே அறியாத முழு மூடனாக  வளர்ந்து வந்தார். அந்தக் காலத்தில் காசி நகரை பீம சுல்கா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வசந்தி என்ற அற்புத அழகுடைய புத்திசாலியான பெண் ஒருத்தி இருந்தாள். சிலர் அவள் பெயரை பிரியகுண மஞ்சரி என்றும் கூறுவர்.

 அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் “எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளை சைகை மூலம் கேட்க நினைத்து ஒரு விரலைக் காட்டினாள். ஒன்றும் புரியாத காளிதாஸன் இரண்டு விரல்களைக் காட்டினான். ‘பிரபஞ்சத்திற்கு, ஒரு காரணம் தானே’ என்று ராஜ குமாரி கேட்க உடனே அரசவை பண்டிதர்கள் காளிதாஸன் இரண்டு விரல்களைக் காண்பித்தது பிரபஞ்சத்திற்கு இரு வித காரணங்கள் உண்டு என்று அற்புதமான வியாக்யானம் தந்தனர். இது இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. ராஜகுமாரி சக்தி ஒன்றே என்பதைக் குறிக்க ஒரு விரலைக் காட்ட காளிதாஸன் இரு விரலைக் காட்ட அதற்கு சக்தியானவள் சிவமாகவும் சக்தியாகவும் இரு விதமாக இருப்பதாக பண்டிதர்கள் வியாக்யானம் கூறினர். பின்னர் ராஜகுமாரி தனது உள்ளங்கையை விரல்கள் நீட்டி இருக்கும் படி காடட காளிதாஸன் அவளைக் குத்துவது போல முஷ்டியைக் காட்டினான். இதற்கு பண்டிதர்கள் பூதங்கள் ஐந்து என்பதைச் சுட்டிக் காட்டியதாக ராஜகுமாரி கூறியதற்கு ‘ஆமாம் அந்த ஐந்து பூதங்களே உடலை உருவாக்குகின்றன என்று தன் முஷ்டியைக் காண்பித்தான்’ என்று கூறி வியாக்யானம் செய்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணம் செய்து கொண்டாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது! தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது. காளிதாஸனிடம் அவள் காசி நகரில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று வணங்குமாறு கூறினாள்.  மனம் நொந்த  காளிதாஸன் காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸர் கவி மழை பொழிய ஆரம்பித்தார். அது பாரதமெங்கும் பொழிந்து உலகெங்கும் விரிந்தது.

இந்தச் சம்பவத்தையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன.  காளி தேவி அனுக்ரஹத்தைப் பெற்ற காளிதாஸன் மீண்டும் ராஜகுமாரியைச் சந்திக்க, அவள், ‘அஸ்தி கஸ்சித் வாக் என்று கேட்டாள். அதாவது “இப்போது நீங்கள் வாக்வன்மையில் நிபுணரா என்று கேட்டாள். அவளை காளிதாஸன் வணங்கினான். ஆகவே, தான் தாரம் என்ற நிலையிலிருந்து தாயாக உயர்ந்துவிட்டதாக ராஜகுமாரி கூறி அவனை அனுப்பினாள். ராஜகுமாரி சொன்ன மூன்று வார்த்தைகளை முதலாகக் கொண்டு மூன்று காவியங்களைக் காளிதாஸன் அற்புதமாக இயற்றினான். அஸ்தி என்ற வார்த்தையைக் கொண்டு ‘அஸ்தி உத்தரஸ்யாம் திஷிஎன குமார சம்பவத்தையும் ‘கஸ்சித் என்ற வார்த்தையைக் கொண்டு ‘கஸ்சித் காந்தா என்று மேக தூதத்தையும் ‘வாக் என்ற வார்த்தையைக் கொண்டு ‘வாகர்த்தாவிவ என்று ரகு வம்சத்தையும் தொடங்கினான்.                                    இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸர் மனம்  நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழமழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.

காளிதாஸனின் காலத்தைப் பற்றி ஏராளமான விவாதங்களை சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பண்டிதர்களும் இன்றளவும் நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு என்று பலரும் சொல்ல சிலர் கிறிஸ்துவுக்கு முன்பே அவரது காலம் என்கின்றனர். அத்துடன் காளிதாஸன் என்ற பெயரில் மூன்று கவிகள் இருப்பதையும் பலர் உறுதிப்படுத்துகின்றனர். காளிதாஸன் விக்ரமாதித்தன் சபையில் ஆஸ்தான கவியாக இருந்ததைப் பல நூல்கள் கூறுகின்றன.

தனது நகரத்திலிருந்து யாத்திரையாகச் சென்ற காளிதாஸன் தாரா நகரத்தை அடைந்தான். தாரா நகரத்தை அப்போது ஆண்டு வந்த போஜ மஹாராஜனுக்கும் காளிதாஸனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உருவானது; அது ஆத்மார்த்தமானது.      

ச்சதஸ் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வப்னோவாபி வா |                  மா பூன்மத: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே ||                      

 “ஓ! கவிஞரே! இருக்கும் போதும் நடக்கும் போதும் தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் என்னுடைய மனம் உம்மை விட்டு அகலுவதே இல்லை என்று இப்படி போஜன் காளிதாஸரை நினைத்து உருகி ‘எப்போதும் உம்முடைய நினைவாகவே நான் இருக்கிறேன் என்கிறான்!

**

tags– மஹாகவி ,காளிதாஸ்,

தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -1 (Post No.8644)

S NAGARAJAN’S TALK IN GNANAMAYAM- ZOOM BROADCAST

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8644

Date uploaded in London – – 8 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

செப்டம்பர் 11: பாரதியார் நினைவைப் போற்றுவோம்; தமிழை வளர்ப்போம்!

தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -1

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.7-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியி பாரதியார் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி :-

தமிழ் அபிமானி யார் என்று பாரதியார் கூறுகிறார்? தமிழ் வாழ்க என்று கூச்சல் மட்டும் போடுவோர் பற்றி பாடல்களிலும் எழுத்துக்களிலும் அவர் சொல்லும் கருத்து என்ன?
 
தமிழ் அபிமானி பற்றி பாரதியார் ஒரு அருமையான கட்டுரையில் விவரமாகக் கூறியுள்ளார்.
அவரது பாடல்களிலும் பல கருத்துக்கள் இது பற்றி உள்ளன.
1917ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று நெல்லூரில் ஆந்திரமஹாசபை கூடியது. அதில் சபாநாயகராக – அதாவது தலைவராக – வெங்கடப்பய்ய பந்துலு என்பவர் தலைமை வகித்து ஒரு சொற்பொழிவை ஆற்றினார்.
அந்த உரையை வெளியிட்ட மகாகவி பாரதியார் மிக நீண்டதொரு கட்டுரையில் தெலுங்கரையும் தமிழரையும் ஒப்பிடுகிறார். தெலுங்கர்களுக்குத் தங்கள் மொழியின் மீதுள்ள பற்று போல தமிழருக்கு இல்லையே என்று அவர் வேதனைப் படுகிறார்.
அவர் கூறுகிறார்:

தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழிடம் இல்லை. தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலேயே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி… தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை…

இந்தக் கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917 தேதியிட்ட இதழில் ‘தெலுங்க மஹா சபை’ எனும் தலைப்பில் ‘சக்தி தாஸன்’ எனும் புனைப் பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.

மிகத் தெளிவாக பாரதியார் தமது கருத்துக்களைப் பல பாடல்களிலும் தெரிவித்துள்ளார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாப்பா பாட்டில் குழந்தைகளுக்கு அவர் அறிவுரை கூறுகிறார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்                                       இனிதாவதெங்கும் காணோம்                                             பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்                                 இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரென வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்லீர் என்று கேட்கும் அவர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற தன் உள்ளார்ந்த விருப்பத்தைத் தெரிவிக்கிறார். இப்படிச் செய்பவனே உண்மையான தமிழ் அபிமானி!

யாமறிந்த மொழிகள் என்று சொல்லும் போது பாரதியாருக்கு எந்தெந்த மொழிகள் தெரியும் என்பதையும் அறிய ஆவல் எழுவது இயல்பு.

இயல்பாலே அவருக்கு தமிழ் மொழி தாய்மொழி. காசியில் இருந்த போது சம்ஸ்கிருதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பத்திரிகை நடத்தியதால் ஆங்கிலத்தில் வருவதை பத்திரிகை வாயிலாகத் தமிழில் தரும் அளவு அற்புதமான ஆங்கில அறிவு அவருக்கு இருந்தது; இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்திலேயே அவர் கவிதைகள் இயற்றியுள்ளார். காங்கிரஸ் மகாசபைகளில் கலந்து கொள்ள வட மாநிலங்கள் சென்றதால் ஹிந்தி மொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. புதுவையில் மகான் அரவிந்தரது பழக்கத்தால் வங்காள மொழி நன்கு தெரிந்தது. ரவீந்திரநாத் தாகூரின் கட்டுரைகளை அவர் மொழி பெயர்த்தார். புதுவை பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சு மொழி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எப்போதும் ஒரு பிரெஞ்சு மொழி புத்தகத்தை அவர் கையில் வைத்திருப்பாராம். தெலுங்கு கீர்த்தனைகளில் ஆழ்ந்த அறிவு இருந்ததால் தெலுங்கு மொழி அவருக்குத் தெரிந்திருந்தது. இப்படிப் பல்மொழி வல்லுநரான அவர் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடிய போது அதில் அதிகாரபூர்வமான உண்மை வெளிப்படுகிறது.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்.

இது தான் அவரது அன்புரை. அறிவுரை. சொந்த ஆதாயத்திற்காக தமிழ் வாழ்க என்று உரத்த குரலில் கத்துவோரை அவர் தமிழ் அபிமானி என்று கொள்ளவில்லை. மாறாக, பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களை, கலைச் செல்வங்களைக் கொண்டு வருபவரே சிறந்த தமிழ்ப் பற்று கொண்டவர் என அவர் தெரிவிக்கிறார்.

TO BE CONTINUED……………………………….

TAGS- தமிழ் அபிமானி! -1,  மஹாகவி,  பாரதி விளக்கம்,