மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1

draupadi gandhari kunti

Gandhari, Draupadi, Kunti

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 934 தேதி 26 மார்ச் 2014

(ஆங்கிலக் கட்டுரையில் பத்து மர்மங்களையும் ஒரே கட்டுரையாக கொடுத்துள்ளேன். தமிழில் மொழி பெயர்க்கையில் இரட்டிப்பு நீளம் வரும் என்பதால் தமிழ்க் கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.)

நான் லண்டன் பி.பி.சி. தமிழோசையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போது வாரம்தோறும் ஒரு பிரமுகரை பேட்டி காணும் நிகழ்ச்சி இருந்தது. இந்தியாவில் இருந்து வருவோரை பெரும்பாலும் நான் அல்லது சங்கர் அண்ணா என்பவர் பேட்டி கண்டு ஒலிபரப்புவோம். ஒரு இந்திய டாக்டர் வந்திருந்தார். பேட்டியின் ஒரு கேள்வியாக மஹாபாரத கால மருத்துவம் பற்றியும் நான் கேட்டேன். காந்தாரி பிரசவத்தை டெஸ்ட் ட்யூப் பேபி (சோதனைக் குழாய் குழந்தை) என்று கருதலாமா? என்று கேட்டேன். இளப்பமாகச் சிரித்து முடியவே முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார். பின்னர் ‘சோ’ அவர்கள் எழுதிய மஹாபாரதத் தொடரில் என்னைப் போலவே அவரும் கருத்து தெரிவித்ததைக் கண்டு மகிழ்ந்தேன்.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். பத்துலட்சம் சொற்களைக் கொண்ட மாபெரும் பொக்கிஷம். உலகில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாம் உள்ளன. ஐன்ஸ்டைன் சொன்ன பெரிய சார்பியல் கொள்கைக்கு மேலான விஷயங்களும் உள்ளன. இனி வரப்போகும் கண்டு பிடிப்புகளை நான் எனது இரண்டு பகுதி ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். இந்த இதிஹாசத்தில் இருபதுக்கும் மேலான பிறப்பு மர்மங்கள் உள்ளன. இதையே பத்து வருடத்துக்கு முன் படித்தபோது அவ்வளவு விளங்கவில்லை. இப்போது நான் லண்டனில் வாரந்தோறும் வரும் அறிவியல் சஞ்சிகைகளைப் படிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக புதிர் விடுபட்டு வருகிறது. ஒரு பத்து அதிசயங்கள், புரியாப் புதிர்கள், விடுகதைகள், சங்கேத மொழிகளை மட்டும் இப்போது ஆராய்வோம்.

முதலில் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில் வந்த இரண்டு விநோதச் செய்திகள்:

satyavati gandhari draupadi

பாட்டியே பேத்தியைப் பெற்றாள்!
ஒரு பெண் மலடி. அவள் ஒரு கரு முட்டையை கணவனின் விந்துவுடன் சேர்த்து அவளுடைய தாயாரின் கர்ப்பப் பையில் பதியம் வைத்தாள். அதாவது தனது தாயையே வாடகைத் தாயாகப் பயன்படுத்தினாள். அவள் குழந்தையையும் பெற்றுக் கொடுத்தாள். பாட்டிக்குப் பிறந்த இந்தக் குழந்தை அவளுடைய மகளா? பேத்தியா? யார் தாய்? என்ற பிரச்சனைகள் எழுந்துவிட்டன. ஆக யார் கருவையும் எந்த ஆண்மகனின் விந்துவுடனும் சேர்த்து எந்தப் பெண்ணுடைய கர்ப்பப்பையிலும் வைத்து குழந்தை பெறலாம். யார் உண்மையான தந்தை, யார் தாய் என்ற புதிய சட்டப் பிரச்சனைகள் மேலை நாடுகளில் உருவாகி வருகின்றன.

இன்னொரு தமிழ்ப் பெண் மலடி. செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பல ஆயிரம் பவுண்டுகள் செலவழித்து குழந்தை பெற்றாள். பிறந்ததோ கருப்புத் தோலுடைய குழந்தை! அந்த ஆஸ்பத்திரி மீது வழக்குப் போட்டுள்ளாள். ஏனெனில் அற விதிகளின்படி (எதிகல் ரூல்ஸ்) ஆஸ்பத்திரிகள் அந்த்தந்த இனத்துடன் கருவைச் சேர்த்து குழந்தைகளை உருவாக்கவேண்டும். இது மீறப்பட்டுவிட்டது.

ஆண்கள் குழந்தை பெற்றதாக மஹாபாரதத்தில் இரண்டு மூன்று கதைகளில் வருகிறது. இதுவும் நடக்குமா என்று பகுத்தறிவுப் பகலவன்கள் எள்ளி நகையாடிய காலம் உண்டு. ஆனால் இங்கு ஆண்களும் குழந்தை பெறத் துவங்கிவிட்டனர்!! ஒரு ஆணும் மற்றொரு ஆணும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பது பிரிட்டன் உள்பட பல நாடுகளில் சட்டம் ஆகிவிட்டது. ஆக அவர்கள் தங்கள் விந்துவைப் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்று விடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கணவன் — மனைவி ஜோடிக்கு என்ன சலுகை கொடுக்கிறதோ அத்தனையும் ஆண்—ஆண் குடும்பத்துக்கும் உண்டு. இந்தக் குழந்தை பள்ளியில் சேரும்போது “அப்பாவும் நீயே, அம்மாவும் நீயே” என்ற திரைப்படப் பாடலைத்தான் பாட வேண்டியிருக்கும்!!

இந்த விநோதங்கள், வக்ரங்கள், குதர்க்கங்கள் ஒரு புறம் இருக்க மஹாபாரதத்தில் உள்ள பத்து வியத்தகு விஷயங்களுக்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பதைக் காண்போம். வேத கால ரிஷிகள் “நாங்கள் வெளிப்படையாக எதையும் சொல்வதை விரும்ப மாட்டோம். மறை பொருளாகப் பாடுவதிலேயே எங்களுக்கு இன்பம்” — என்று பாடுகிறார்கள். இதை நன்கு அறிந்த சங்க காலத் தமிழர்கள் வேதங்களுக்கு ‘மறை’ (ரகசியம்) என்றும் ‘எழுதாக் கற்பு’ என்றும் அற்புதமான பெயர்களைச் சூட்டினார்கள். வேதம் என்றால் அறிவு , ஞானம் என்று பொருள். ஆனால் தமிழ் பெரியோர்கள் மறை (பரம ரகசியம்) என்றே மொழி பெயர்த்த்னர். எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவார்கள். அடையாள, சங்கேதச் சொற்களைப் பயன்படுத்துவர். ஆகையால் வியாசர் எழுதிய மஹாபாரதத்திலும் இப்படி மறை பொருள் இருப்பதில் வியப்பில்லை.

மர்மம் 1 திரவுபதி பிறந்தது தீயில்!!!

மஹாபாரத திரவுபதி மஹா அழகி, ஆனால் கருப்பாயி! அதனால் அவர் பெயர் கிருஷ்ணா. கிருஷ்ண என்றால் கருப்பன். இதையே நெடிலாக உச்சரித்தால் – கிருஷ்ணா—கருப்பாயி. அவளுடைய மற்றொரு பெயர் பஞ்சாபி. அந்தக் காலத்தில் பஞ்சாபுக்குப் பெயர் பாஞ்சாலம் என்பதால் இந்தப் பெயர்—பாஞ்சாலி. அவளும் அவருடைய சகோதரனும் பிறந்தது யாக குண்டத்தில். அவளுடைய தந்தை துருபதன் இந்த யாகத்தை ஏற்பாடு செய்தான். அவர்கள் யாக குண்டத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்தப் பிறப்பில் அவளுடைய அம்மாவுக்குப் பங்கு பணி உண்டா என்று தெரியவில்லை. எப்படி ராமாயணத்தில் ராம- லெட்சுமண- பரத- சத்ருக்னனின் தாயார்கள், யாக குண்டத்தில் இருந்து வந்த பாயசத்தைச் சாப்பிட்டு கர்ப்பம் அடைந்தார்களோ அப்படி துருபதனின் மனைவி கர்ப்பம் அடைது பெற்றதைதான் இப்படிச் சொன்னார்களோ என்று கருத வேண்டி உள்ளது.

Kunti_Gandhari_Dhrtarashtra

மர்மம் 2 : மந்திரத்தில் பிறந்த அறுவர்!!

குந்தி என்ற பெண்ணீன் உண்மைப் பெயர் ப்ருதா. அவள், குந்திபோஜன் என்ற மன்னனின் வளர்ப்பு மகள். கோபத்தின் மொத்த உருவமாகத் திகழந்த துருவாசர்க்கு அவள் பணிவுடன் பணிவிடை செய்தாள். அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்த துருவாச மஹாமுனி, குந்திக்குச் சில மந்திரங்களை சொல்லிக் கொடுத்து பிள்ளை வேண்டும்போது பயன் படுத்து என்றார். அவளோ அவசரப்பட்டு மந்திரத்தைப் பிரயோகித்தாள். சூரிய தேவன் வந்தான். கர்ப்பமாகி கர்ணனைப் பெற்றாள். அவனை ஆற்றில் விட்டாள். பின்னர் இதே போல மேலும் மூவரைப் பெற்றாள். சக மனைவி மாத்ரிக்கும் இந்த மந்திரப் பிரயோகத்தைச் சொல்லிக் கொடுத்தாள். அவளும் நகுல சகாதேவனைப் பெற்றாள். ஆக ஆறு பேரும் மந்திரத்தில் உதித்தவர்கள். மந்திரத்தில் குழந்தைகள் உருவாகுமா? அல்லது கணவன் பாண்டுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதென்பதால் செயற்கை முறையில் சோதனைக் குழாய் குழந்தை பெற்றாளா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

ஏசு கிறிஸ்துவும் ஆண் தொடர்பில்லாமல் மேரிக்குப் பிறந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
மர்மம் 3 ஜராசந்தன் – ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை!

ஜராசந்தன் பிறந்த விஷயம் ‘சயாமிய இரட்டையர்’ கதை போல உள்ளது. இதை நான் ஏற்கனவே இரண்டு முறை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். குழந்தைகள் ஒட்டிப் பிறந்தால் பல மணி நேரம் ஆபரேஷன் செய்தே பிரிக்கமுடியும். ஜராசந்தன் இப்படிப் பிறந்ததால் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டாள் மஹாராணி. — அதை வேடிக்கைப் பார்த்த நாட்டு மருத்துவச்சி ஜரா என்பவள் அதை எடுத்து ஆபரேஷன் செய்து இரண்டு பகுதிகளை ஒட்டிக் கொடுத்தாள். உடனே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் அந்தப் பிள்ளைக்கே ஜரா- சந்தன் என்று பெயர் வைத்தனர். சங்க இலக்கியத்தில் சயாமிய இரட்டையர் பற்றி வரும் தகவல்களை இரட்டைத் தலைக் கழுகு: சுமேரிய- இந்திய தொடர்பு’ என்ற ஆங்கிலக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்

சிபிச் சக்ரவர்த்தியிடம் வேலை பார்த்த டாக்டர் சீவகன், கண்ணப்ப நாயனார் சரித்திரம் முதலிய பல கதைகளில் கண் அப்பரேஷன் பற்றி வருவதையும், பொற்கைப் பாண்டியன் கதையில் கை ஆபரேஷன் பற்றி வருவதையும் முன்னரே விரிவாக எழுதிவிட்டேன். சுஸ்ருதர் என்ற மாபெரும் அறிஞர் வடமொழியில் எழுதிய நூலில் செயற்கை மூக்கு முதலிய ‘காஸ்மெட்டிக் சர்ஜரி’ பற்றியும் இருப்பதால் இதில் ஒன்றும் வியப்பில்லை. சுஸ்ருதர், நூற்றுக் கணக்கான ஆபரேஷன் (சர்ஜரி) கருவிகள் பெயரை சம்ஸ்கிருதத்தில் கொடுக்கிறார்!!

mahabharata

மர்மம் 4: காந்தாரிக்கு 100 டெஸ்ட் ட்யூப் பேபீஸ்
காந்தாரி பத்து மாதம் சுமந்த பின்னரும் டெலிவரி நேரம் வரவில்லை. இடுப்பு வலி வராத கோபத்தில் வயிற்றில் ஓங்கிக் குத்தினாள். நூறு துண்டுகள் வெளியே வந்தன. வியாசர் வந்து அவளைத் திட்டினார். இருந்த போதிலும் நூறு துண்டுகளையும் நெய் ஜாடியில் பதியம் வைக்கச்சொல்லி நூறு குழந்தைகளை உருவாக்கினார் என்பது கதை. இது மந்திரத்தில் மாங்காய் உண்டாக்கியது போல் இருக்கிறது . ஆனால் இப்போது மேல் நாட்டில் ‘ஸ்டெம் செல்’ என்னும் மூல ‘செல்’- ல்லை வைத்தே ஒரு உறுப்பு அல்லது ஒரு உயிரை உருவாக்க முடியும் என்று கண்டு பிடித்து விட்டனர். ஆக 100 துர்யோதணாதிகளும் சோதனைக் குழாய் குழந்தைகளாகவோ, ஸ்டெம் செல் டெக்னிக் மூலம் பிறந்தவர்களாகவோ இருக்கலாம். காலம் செல்லச் செல்ல மேலும் விளக்கம் கிடைக்கலாம்.
காந்தாரி, ஆப்கனிஸ்தானைச் சேர்ந்த பெண். இப்போது காண்டஹார் என்று அழைக்கப்படும் ஆப்கன் நகரமான காந்தாரத்தில் இருந்து வந்தவர்.

மர்மம் 5 : குழந்தை பெற விஷேச உணவு!!
பிருகு என்ற முனிவர் இரண்டு பெண்களுக்கு இரண்டு குவளைகளில் விஷேச உணவு கொடுத்து இதைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்றார். இரண்டும் அவரவர் குண நலன்களை ஒட்டி தயாரிக்கப்பட்ட தனி உணவு. இதை அறியாத இருவரும் குவளையை மாற்றீக் கொண்டனர். கோபத்தில் பிருகு சபித்துவிட்டார். இதனால் அந்தக் குலத்தில் உதித்த பிராமணர் பரசுராமருக்கு, க்ஷத்ரிய குணங்கள் இருந்தன. 21 அரசர்களைக் கொன்றுவிட்டார். இது போன்ற விஷேச உணவு மட்டும் நமக்குத் தெரிந்தால் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம். மேல் நாட்டில் கர்ப்பம் அடையத் தவிக்கும் பெண்களுக்கு ‘’பாலிக் ஆசிட்’’ தருவார்கள். ஆனால் மலடியைக் கர்ப்பம் அடைய வைக்கும் எந்த உணவும் கண்டு பிடிக்கப் படவில்லை. ராமாயண, மஹாபாரதக் கதைகளைப் படிக்கையில் இப்படி ஒரு உணவு இருந்தது தெரிகிறது. மேல் நாட்டில் மலடிகளாக இருப்போர் பல்லாயிரக கணக்கில் செலவு செய்து எப்படியாவது கர்ப்பம் அடையத் துடிக்கிறார்கள். நமது ரிஷி முனிவர்கள் நமக்குச் சொலித் தராமல் போய்விட்டார்களே!!
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் ஐந்து சுவையான பிறப்புகள் ஆராயப்படும்.

தொடரும்………………………..
contact swami_48@yahoo.com