
Written by London Swaminathan
Date: 16 September 2017
Time uploaded in London- 16-51
Post No. 4217
Pictures are taken from various sources; thanks.
வேதத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட மாக்ஸ்முல்லருக்கு பாம்பு போல இரட்டை நாக்கு; சில இடங்களில் வேதத்தைப் புகழ்வார்; சில இடங்களில் வேதத்தை இகழ்வார்; அவர் செய்தது கூலி வேலை. முதலில் கிழக்கிந்திய கம்பெனியும் அப்புறம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கூலி கொடுத்தன. அதாவது கூலிக்கு மாரடித்த குப்புசாமி! கூலி போட்டவர்களின் நோக்கம் என்ன? எப்படியாவது இந்துமதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் பாச்சா பலிக்வில்லை. வேதத்தில் உள்ள துதிகள் உலகையே வியக்கவைத்தன. பிக் பேங்(Big Bang) பற்றியும் உலக சமாதானம் பற்றியும், பூமித் தாய் பற்றியும், நதிகள் பற்றியும், இயற்கையின் விந்தைகள் பற்றியும், காலைக் கதிரவனுக்கு முன்னர் தோன்றும் உஷா தேவி பற்றியும்’ அளவற்ற வளம் படைத்த அதிதி தேவி பற்றியும், மாயாஜாலம் புரிந்து கடலில் சென்றவர்களை மீட்ட அஸ்வினி தேவர்களைப் பற்றியும், அக்கினி தேவன், வௌணன், உலக மஹா வீரன் இந்திரன் ஆகியோர் பற்றியும் சரமா என்ற நாய் பற்றியும், கணித வரிசைப்படி யாப்பு இலக்கணம் ( மீட்டர்) பற்றியும், டெஸிமல் ஸிஸ்டம் பற்றியும் வேத கால ரிஷிகள் பாடிய பாடல்கள்- அதுவும் மாக்ஸ்முல்லர் கணக்குப்படி 3200 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் எல்லோர் மூக்கிலும் விரல்களை வைத்து வியக்க வைத்தன.
துப்புகெட்ட மாக்ஸ்முல்லர் ஒரு தப்புக் கணக்குப் போட்டார். வேதத்துக்கு காலம் நிர்ணயிக்கிறேன் என்று கடலாழம் தெரியாமல் காலைவிட்டார்; உலகில் எல்லா மொழிகளும் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். புத்தமத வாசனையே இல்லாத உபநிஷதங்களுக்கு கி.மு 800 என்று காலம் சொல்வேன். அதற்கு முந்தைய ஆரண்யக, பிராமண நூல் களுக்கு கிமு.1000 என்று காலம் சூட்டுவேன்; அதற்கு முந்தைய சம்ஹிதையிலுள்ள துதிகளுக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்துவேன் என்றார்.
மொழிகள் மாறுமென்பது உண்மையே. புற நானூற்றுத் தமிழ் இன்று இல்லை; தொல்காப்பிய விதிகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை. ஆனால் மண்டு மாக்ஸ்முல்லர் தெரிந்தும் மறைத்த உண்மை- வேத மொழி மாறாதது; மாற்ற முடியாதது; அதில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் ரிஷிகள் சொன்னது சத்தியம் என்று சொல்லி யாரும் அதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக உலகம் வியக்கும் அதிசயமான கண பாடம், ஜடா பாராயணம் என்றெல்லாம் சொல்லைப் புரட்டிப் புரட்டி பாடம் கற்பித்தனர். உலகில் இந்த அற்புதத்தை வேறு எந்த மொழியிலும் காண முடியாது.
அது மட்டுமல்ல; திருட்டு மாக்ஸ்முல்லர், நுழை நரிக்குப் பிறந்த தந்திரசாலி மாக்ஸ்முல்லர், இன்னொரு உண்மையையும் மறைத்தார். அவர் சொன்ன 200 ஆண்டு மொழிமாற்றக் கணக்கை வேறு எந்த பழைய மொழிக்கும் ஒப்பிட்டுக் காட்டவில்லை. எடுத்துக் காட்டாக தமிழ இலக்கியத்தில இந்தக்கொள்கையை புகுத்தினால் பழைய நூல்களின் காலம் உல்டா (அந்தர் பல்டி) அடிக்கும். சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம், திருக்குறள் அதிகாரம் ஆகியன ஆறாம் நூற்றாண்டுக்குத் தவ்விக் குதிக்கும்! ஆக மாக்ஸ்முல்லர் போட்டது குத்து மதிப்பான பால்காரிக் கணக்கு!
மாக்ஸ்முல்லர் கி.மு 1200 என்று ரிக் வேதத்துக்கு முத்திரை குத்தியவுடன் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய வேதம் படித்த வெள்ளையர்கள் அவர் மீது பாய்ந்து குதறினர். உடனே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னது இதற்கும் கீழாக எவரும் ரிக் வேத காலத்தைக் குறைக்க முடியாது என்பதே; உண்மையில் ரிக்வேத காலத்தை எவரும் சொல்ல முடியாது. அது 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கலாம் என்று பின்வாங்கினார்.

விஞ்ஞானிகள் நிரூபணம்
கடந்த 25 ஆண்டுகளில் பாபா அணுசக்தி ஆய்வுக் கேந்திர விஞ்ஞானிகள், நிலத்தடி நீர்க் கமிஷன் விஞ்ஞானிகள், பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் ஆகியோரும், விண்வெளி விண்கல புகைப்படமும் காட்டிய பேருண்மை, மாக்ஸ் முல்லருக்கும் இந்துக்களை மட்டம் தட்டும் மார்கசீய வாதிகளுக்கும் செமை அடி– அடி மேல் அடி — வகையடி- தொகையடி– கொடுத்தது. அதாவது ரிக்வேதம் 50-க்கும் மேலான இடங்களில் விதந்து ஓதும் பிரம்மாண்டமான, கடல் போன்ற சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் வட மாநிலங்க களை ள வளப்படுத்தி பாய்ந்தது என்றும் அது மறைந்த பின்னரே ஹரப்பா மொஹஞ்சதாரோ நாகரீகம் உச்ச கட்டத்தை அடைந்தது என்றும் காட்டினர்.
இது மேலும் ஒரு புதிரைப் போட்டது. சரஸ்வதி நதி ஆய்வுக்கு முன்னர், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு முறையில் கால வரிசைப்படுத்தினர். இப்பொழுது அவர்களுக்கும் அடி விழுந்தது. ஏனேனில் சரஸ்வதி நதியைப் புகழும் பகுதிகள் பல மண்டலங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன. ஆகவே அவை அனைத்தும் கி.மு.2000க்கு முன்னரே — அல்லது மிகமிக முன்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சியளர்கள் சரஸ்வதி நதிக் குறிப்பு களைக் கொண்டே வேதத்துக்கு காலம் நிர்ணயிக்க முடியும்.
போகிறபோக்கைப் பார்த்தால் வியாசர் கி.மு 3102 வாக்கில் (கலியுக துவக்கம்) வேததங்களை நான்காக வகுத்ததாக இந்துக்கள் நம்புவது விஞ்ஞான உண்மையே என்று முடிவு செய்து விடுவார்கள்.
வானவியல்
வேதத்தில் உள்ள வானவியல் குறிப்புகளைக் கொண்டு ரிக்வேதத்துக்கு கி.மு4000 என்று திலகரும், கி.மு 4500 என்று ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் கால நிர்ணயம் செய்தனர். இதை ப்யூலர், பார்த், வின்டெர்நீட்ஸ், ப்ளூம்பீல்ட் ஆகியோர் ஏற்றதாகவும் அவர்களுடைய கணக்கீட் டில் எந்த தவற்றையும் எவரும் காணவில்லை என்றும் திரு சட்டோபத்யாயா கூறினார். பேராசிரியர் சென் குப்தா பழங்கால இந்திய காலவரிசை என்ற நூலில் ரிக் வேதத்துக்கு கி.மு 4000 என்று காலம் காட்டினார்.
ஆக பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வு, ஐசடோப் ஆய்வு, கார்பன் 14 தேதி நிர்ணயம் — எல்லாம் சரியே; அவை அனைத்தும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னரே சரஸ்வதி நதி ஓடியது என்று காட்டுகின்றன.
இந்தியாவுக்கு 3 சாபக்கேடுகள்/ பரிசுகள்
சீன, எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, மாயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகத்துக்கும் ஒரு பெரிய வேறு பாடு உண்டு.
இந்திய நாகரீகத்தை தடயங்களை மூன்று விஷயங்கள் அழித்தன
பருவக்காற்று- தென் மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் ஆண்டுதோறும் மழையைக் கொட்டி, நதிகளை வெள்ளப் பெருக்கெடுக்க வைத்து பல ஊர்களை அழித்தன. நாம் அசோகர் காலத்துக்கு முன்னர் கல்லில் எதையும் வடிக்காததால் தடயங்கள் அழிந்தன. பருவக்காற்றுகளை இயற்கை தந்த பரிசு என்றும் சொல்லலாம். ஜீவநதிகளால் பாசனம் பெருகியது

இரண்டாவது சாபக்கேடு; நில அதிர்ச்சி/ பூகம்பம்
நமது காலத்திலேயே தென்னாட்டில் தனுஷ்கோடி கடலுக்குள் போனதைப் பார்த்தோம். நேபாளக் கோவில் கோபுரங்கள் உருண்டோடி மொட்டைக் கோபுரம் ஆனதைக் கண்டோம். 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை உண்டாக்கும் மாபெரும் பூமி அதிர்ச்சி நதிகளைப் பிறட்டி,உருட்டி அட்டஹாசம் செய்தன. ஆகையால் நமது நாகரீக தடயங்கள் அழிந்தன. மொஹஞ்சதாரோவில் கல்லில் முத்திரை களை உருவாக்காவிடில் நாம் முக்கிய தடய ங்களை இழந்திருப்போம்.
மூன்றாவது சாபக்கேடு வெளி நாட்டினரின் படை எடுப்பும் அவர்களின் அழிவு வேலைகளும் ஆகும். நமது கண்ணுக்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியன் குகை புத்தர் சிலைகளை — மிக உயரமான புத்தர் சிலைகளை –அழித்ததைக் கண்டோம். கிமு ஆறாம் நூற்றாண்டு டேரியஸ் (Darius) காலம் முதல் 2600 ஆண்டுகளாக இந்தியா தாக்குதலுக்கு உள்ளானது; கஜினி முகமதுகளும் மாலீக்காபூர்களும் உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடு இந்தியா என்பதை அறிந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்துச் சென்றனர். இது வெள்ளையரின் கோஹினூர் வைரக் கொள்ளை வரை நீடித்தது.
உலக மஹா எஞ்சினீயர் பகீரதன், அகத்தியன்!
இவ்வாறு சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயே (கி.மு3102) வற்றி பூமியில் மறையவே கங்கை என்னும் நதி புனிதம் பெற்றது. அதன் தடைபட்ட பாதையை மாற்றி அதை உத்திரப் பிரதேச, வங்காள பூமியில் திசை திருப்ப பல இந்து மன்னர்கள் முயன்றனர். இறுதியில் உலகப் புகழ்பெற்ற — உலகின் முதல் நதி நீர் பொறியியல் வல்லுனன்– பேரரசன் பகீரதன் அந்த கங்கை நதியை மாற்றினான். அதைக் கடல் வரை- வங்காள விரிகுடா சாகர் தீவு வரை பாய வைத்தான். அவனது எஞ்சினீயரிங் வேலலைகளை நாம் இன்றும் புராணக் கதைகளாகப் படிக்கிறோம். இதைப் பார்த்து அகத்தியர் என்னும் எஞ்சினீயர்/ முனிவர் காவிரி நதியையும் திசை திருப்பி கர்நாடகம், தமிழ் நாடு வரை பாயவைத்தார். விந்திய மலை மீது முதல் முதல் நில மார்க்க சாலைகளைப் போட்டார் அகத்தியர். இதை விந்திய கர்வபங்கம் என்ற புராணக் கதைகளாக நாம் படிக்கிறோம். மூன்றாவதாக தென் கிழக்காசியாவுக்கு கடல் வழி மூலம் இந்து நாகரீகத்தை எடுத்துச் சென்றார். இதனால் அவரது சிலைகள் தென் கிழக்காசியா முழுதும் பரவிக்கிடக்கின்றன.
மார்கஸீயத் திருடர்கள்!
இந்திய கல்வித்துறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு அடிவருடிகள்– மார்கஸீயத் திருடர்கள் கைகளில் இருந்ததால் பல தொல்பொருத்துறை உண்மகைள் எழுதப்படவில்லை. போர்னியோவில் மனிதரே நுழைய முடியாத காட்டில் நாலாம் நூற்றாண்டு மூலவர்மனின் யூபஸ்தம்பம் இருந்தது. துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கோய் நகரத்தில் வேத மந்திரம் எழுதிய க்யூனிபார்ம் கல்வெட்டு கண்டுபித்தது, தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களில் சிரியா-துருக்கியை இந்து மன்னர்கள் ( மிடன்னி நாகரீகம்) ஆண்டது முதலியவைகளை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உரைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டும் கூட கல்வித்துறை கயவர்கள் நமது சரித்திரப் புத்தகத்தில் அதைச் சேர்க்கவே இல்லை. வெள்ளைத் தோல் அறிஞர்களும் மிட்டனி நாகரீகம் குறித்தோ இந்திரன், மித்திரன், வருணன் ஆகிய வேத கால தெய்வங்களின் பெயரில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதையோ பேசாமல் ‘கப் சிப்’ என்று வாய் மூடி இருந்தனர்.
கிக்குலி என்பவன் துருக்கி நாட்டில் (துரகம்= குதிரை) வடமொழியைப் பயன்படுத்தி கி.மு 1400ல் குதிரைப் பயிற்சி கொடுத்த நூல் கிடைத்துள்ளது.
இது தவிர எகிப்திய மன்னன் மூன்றாவது அமெனோபிஸ்ஸுக்கு தசரதன் மகளை மணம்புரிவித்து, அவன் எழுதிய தசரதன் கடிதங்கள் இன்னும் எகிப்தில் உள்ளன. இவை அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சிக்கால கயவர்கள்- திருடர்கள் – வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்காமல்- மார்கஸீயவாதிகள் எழுதிய அசிங்கங்களையும் வெள்ளைக்காரர்கள் தங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து எழுதிய விஷயங்களையும் மட்டும் சிலபஸில் சேர்த்தனர்.
ராமாயாண தசரதனையும் இந்த தசரதனையும் குழப்பிக்கொண்டு விடாதீர்கள் மாமன்னர் அசோகனின் பேரன் பெயர் கூட தசரதன்தான்.
மேற்கூறிய கட்டுரையின் சாரம்:–
பாபா அணுண்சக்தி ஆராய்ச்சியாலரின் அறிவியல் கூற்றுகளும்
திலகர் ஜாகோபியின் வானவியல் கூற்றுகளும்
பொகஸ்கோய் க்யூனிபார்ம் கல்வெட்டு தரும் தொல்பொருத் துறை ஆதாரங்களும்
எகிப்திலுள்ள தசரதன் கடிதங்களும்
ரிக் வேதத்திலுள்ள சரஸ்வதி நதியின் பிரம்மாண்ட வர்ணனைகளும்
மாக்ஸ்முல்லரின் வேத காலக் கொள்கைகளைப் பொடிப் பொ டியாக்கி பொய்யாய் பழங்கதையாய்ச் செய்துவிட்டன.
வேத காலம் என்பது வியாசரின் காலத்துக்கும் (கி.மு.3102) முந்தையது என்பது நிரூபிக்கப்ப ட்டுவிட்டது.
வேத காலத்துக்கு இந்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்ட தேதி
ஜி.கே பிள்ளை- கி.மு4000 முதல் கி.மு 3000 வரை
ராஜேஸ்வர் குப்தா- கி.மு 4000
உ.வி.ராவ்- கி.மு.5000
வெளிநாட்டு அறிஞர்கள்
எஹ்.டி.கிரிஸ்வால்ட்- கிமு 1200 முதல் கி.மு 4000
டி.பர்ரோ- கி.மு 1200
இவர்களுக்கு எல்லாம் அ ண்மை க் கால சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிகள் தெரியாததால் அறியாத பிள்ளைகளை மன்னித்துவிடலாம்.
சிலர் குதிரை, இரும்பு பற்றிய குறிப்புகள் இருப்பதால் வேதங்களை கி.மு1500 க்கு முன்னர் வை க் கமுடியாதென்று வாதிடுவர். ஆனால் அந்த குதிரைக்கும் இரும்புக்கும் தேதி நிர்ண யிப்பது வெள்ளைத் தோல், உள் நோக்கப் பேர்வழிகள். இவை இரண்டும் இந்துக்களின் கண்டுபிடிப்பு; உலகம் முழுதும் சென்றது இந்தியாவில் இருந்துதான். நாம் நிர்ண யிக்கும் தேதியே சரி. மேலும் அஸ்வ (குதிரை) அயஸ் (பொன்) என்பது பல பொருள் உடைத்து.
இதையெல்லாம்விட மிக முக்கிய சான்று சங்கத் தமிழில் உள்ளது. புற நானூற்றின் முதல் பாடல் முதல் கடடைசி பாடல் வரை வேதக் குறிப்புகள், வேதச் சடங்கு குறிப்புகள் உள. இவை 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாட்டில் இமயம் முதல் குமரி வரை – போர்னியோவின் மூல வர்மன் ஆட்சி வரை- வியட் நாமின் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வரை ஒரே கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வேண்டும் என்றால்– போக்குவரத்தும் இன்டெர்நெட்டும் மொபைலும் இல்லாத காலத்தில் பரவ வேண்டுமானால் – அதற்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளாவது ஆகும்.
எல்லாவித தடயங்களையும் சான்றுகளை யும் ஒட்டு மொத்த முகமாக நோக்குமிடத்து பாபா அணு சக் தி ஆய்வுகளும் வியாசரும் சொல்லுவதே சரி.
TAGS: மாக்ஸ்முல்லர், வேத காலம், தேதி
–சுபம்—