எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்! (Post No.10,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,030

Date uploaded in London –  30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!

ச.நாகராஜன்

தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!

தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!

அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.

அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.

  1. வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.

வாக்கிற்கு – அருணகிரி

கனிவிற்கு – மாணிக்கவாசகர்

தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்

நோக்கிற்கு – நக்கீர தேவர்

நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்

சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்

  • அடுத்த பாடல் இது

காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி

ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்

ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி

கூழுக்கிங் கௌவையெனக் கூறு

காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்

கருணைக்கு – அருணகிரிநாதர்

தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்

உவக்கப் பாடுபவர் – புகழேந்தி

கூழுக்கோ – ஔவையார்

  • மூன்றாம் பாடல் இது:-

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

      செயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

   வந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

   வசைபாடக் காளமேகம்

பண்பாக வுயர் சந்தம் படிக்காசு

   லாதொருவர் பகரொ ணாதே

 வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்

பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.

விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.

கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்

கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்

வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்

பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.

இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!

ஆதாரம் : பெருந்தொகை பாடல்கள் 1802, 1803, 1804

***

INDEX

அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், நக்கீரர், சுந்தரர், கம்பன், காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, ஔவையார். ஜெயங்கொண்டான்,இரட்டையர்கள், படிக்காசுப் புலவர்

Tags – அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், சம்பந்தர், கம்பன், காளமேகப் புலவர்

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Written by London swaminathan

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 10-26 AM

 

Post No.3473

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-

 

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்

கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்

கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்

டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதலந்தமில்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)

திருவாசகம் திருச்சதகம்

 

 

பொருள்:

கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம்  79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.

பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.

 

பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.

 

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.

 
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

 

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

 

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

 

இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.

 

–Subahm–

 

 

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)

Written by London swaminathan

 

Date: 17 December 2016

 

Time uploaded in London:- 7-21 AM

 

Post No.3457

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.

51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-

அச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.

 

பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்

 

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

 

பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

 

-திருவெம்பாவை 3 (திருவாசகம்)

 

 

பொருள்:-

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே! முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற!

 

அள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்

 

இதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்

 

மற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைதானே” — என்கிறார்.

அப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்

அவை:

1.விபூதி, உருத்திராக்கம் அணிதல்

2.குரு வழிபாடு

3.அன்புடன் சிவனைத் துதி பாடல்

4.மந்திர ஜெபம்

5.இறை வழிபாடு செய்தல்

6.யாத்திரை செய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்

7.சிவபுராணம் கேட்டல்

8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்

9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)

  1. தொண்டர்க்குத் தொண்டு செய்தல்

என்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.

 

இவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.

திருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.

 

–Subham–

 

 

 

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441)

Research Article Written by London swaminathan

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:-11-26 am

 

Post No.3441

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.

 

பாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.

தெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்!

 

பாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.

 

மாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.

 

ஓம்காரம்

 

திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்

 

இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்

 

1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)

 

2.உய்யுநெறிகாட்டுவித்திட்

டோங்காரதுட்பொருளை (அச்சோபதிகம்)

 

இனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:

 

1.ஓமெனப் பெரியோர்கள்- என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்

–பாஞ்சாலி சபதத்தின் துவக்கப்பாடல்

 

2.ஓமென்றுரைத்தனர் தேவர்- ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்

–பாஞ்சாலி சபதத்தின் முடிவுப்பாடல்

xxxx

 

மாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்

பாரதியார்  குயில்பாட்டு பாடினார்.

xxxx

 

மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில்

சாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்

காதல் காதல் , காதல்

காதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.

 

ஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.

 

 

xxx

திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:

 

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

திருவாசகம்

 

பாரதியும் ,

 

நக்கபிரானருளால் இங்கு

நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அணடங்கள் வளர்

தொகைபல கோடிபல் கோடிகளாம்

இக்கணக்கு எவர் அறிவார் – புவி

எத்தனை உளதென்பது யார் அறிவார்

என்று பாடி வியக்கிறார்.

 

xxxx

 

திருத்தசாங்கம் பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதியும் திருத்தசாங்கம் பாடினார்

 

 

இருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது

xxxx

 

மாணிக்கவாசகர்  போற்றித் திரு அகவல் பாடினார்.

 

பாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.

 

இவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.

 

–Subham–

 

இறைவன் ஏமாந்தான்!

siva, jabalpur

திருவாசக சுகம்

இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

 

Written by S Nagarajan

Post No.2242

Date: 14 October 2015

Time uploaded in London:  7-47 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it at least for a week.

 

.நாகராஜன்

 

தன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..?

ஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.

விஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.

பையனும் வந்து பவ்யமாக நின்றான்.

 

 

காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

தந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்? எப்படிக் கிடைக்கும்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

 

 

அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

பையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்?”

என்றாள்.

நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றார் தந்தை!

*

 

 IMG_6892 (2)

படம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

எப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டுநரியைப் பரியாக்கிய புகழ்மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.

ஒன்று கொடுத்தார்; ஒன்றை வாங்கினார்.

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை!”

இப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்?

யார் கொலோ சதுரர்?

எனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்!

உனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்?

 

 

நானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்!

நம்மில் யார் சதுரன்? உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்!

கோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை

சங்கரா ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்?!

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறை சிவனே!

எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

*

 

 siva head

தந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்? தந்தையா, பையனா?

இங்கே மணிவாசகரா, சிவபிரானா!

இப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பது தான் பதில்!

எதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

–சுபம்–

மாணிக்கவாசகரின் காலம்—2

delhi mus.manikka2

By London Swaminathan
Post No. 882 Date: 3-3- 2014
Part 2 of Age of Manikkavasagar in Tamil

மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கு முந்தியது என்றும் அவருடைய பெயர் சத்தியதாசன் என்றும் ஊர்க் கடவுளரின் பெயரான வேதபுரீஸ்வரர் (வாதவூரர்) மற்றொரு பெயர் என்றும் முதல் பகுதியில் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது மேலும் சில தகவல்களைத் தருகிறேன்.

1.அவர் சம்பந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்திருக்கலாம். மாணிக்கவாசகர் மீது அரசாங்கப் பணம் கையாடல் சுமத்தப்பட்டதாலும் அப்போதைய அரசர்கள் சமண மத ஆதரவாளர்கள் என்பதாலும் சம்பந்தர், அப்பர் முதலானோர் அவரைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

2. மாணிக்கவாசகரின் திருவாசகம் கண்டெடுக்கப்பட்டது தேவாரக் கண்டுபிடிப்புக்கும் பின்னர் நிகழ்ந்ததால் சேக்கிழார் முதலானோர் அவரை விட்டிருக்கலாம். எட்டாம் திருமுறையாக திருவாசகம் எப்போது சேர்க்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இவை எல்லாம் ஊகங்களே. இதைவிட வலுவான அகச் சான்றுகளைக் காண்போம்.

3.ஆகமங்கள் பற்றி மாணிக்கவாசர் பாடியதால் அவர் பிற்காலத்தவர் என்பது பசையற்ற வாதம். சம்பந்தருக்கு முந்தைய திருமூலர், ஆகமங்கள் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.

4. ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைக்கும் மிக மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பாவை என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பாட்டு என்பதால் இப்படி ஒற்றுமை இருக்கலாம் என்பது சரியல்ல. மாணிக்கவாசகர் தனது பாடல்களில் உபநிஷதக் கருத்துக்களை அபரிமிதமாகப் பொழிந்து தள்ளியதை சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய உரைகள் மூலம் அறிகிறோம். ஆனால் ஆண்டாள் ஓர் ‘டீன் ஏஜ் கேர்ள்’ என்பதால் உபநிஷதத்துக்கு இணையான உயர் தத்துவங்களைக் காணமுடியவில்லை. அவர் மிகவும் ‘பிராக்டிகலா’கப் பாடி இருப்பதை பல கட்டுரைகளில் முன்னரே குறிப்பிட்டேன். ஆக, அவருடைஅய நாச்சியார் திருமொழி என்பது திருக்கோவையாரை மனதில் வைத்துப் பாடப்பட்டதாகவும், அவருடைய திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை வைத்துப் பாடப்பட்டதாகவுமே கருத வேண்டியுள்ளது. இரண்டு பாவைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஆராய்ந்தால் நான் சொல்லுவது நன்கு புரியும்.

5. மற்றொரு அகச் சான்று பிள்ளையார் பற்றி அவர் எங்கும் பாடாதது ஆகும். அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடிய கணபதி வழிபாடு, மாணிக்கவாசகர் காலத்தில் பெரிய அளவில் இல்லை. இதனாலும் அவர் காலத்தால் முந்தியவரே.

Thiruvathavur,December 1997-2

6. பிற்காலத்தில் பாடல்களில் குறிப்பிடப்படும் லிங்க வழிபாடும் இது போன்றதே. கணபதி, லிங்க வழிபாடு அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இவை எல்லாம் பாடல்களில் இடம்பெறும் அளவுக்குப் பெரிதாகவில்லை.

7. மாணிக்கவாசகர் பயன்படுத்திய அகவல்பா முதலியன முற்காலத்தியவை. பின்னர் வந்தவர்கள் வெண்பாக்களாகப் பாடித் தள்ளிவிட்டனர். இவர் ஏழு அந்தாதிகளைப் படி இரூக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் இப்படி அந்தாதி பாடி யிருப்பதால் அவர்கள் காலத்தில் இவரும் இருந்திருக்கலாம். தனி ஒருவர் என்று எடுத்துக் கொண்டால் மாணிக்கவாசகர் மட்டுமே அதிகம் அந்தாதி பாடி இருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களைப் பாராட்டும் வகையில் பாடல்களில் பூதம், பேய், பொய் என்ற சொற்களைப் பிரயோகிக்கிறார்.

8. சொல்லாட்சி: பல பழைய சொற் பிரயோகங்களையும், வழக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது. ஆக அவர் சங்கம் மருவிய காலத்தில், ஒருவேளை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தேவார மூவருக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.
9. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சில க்ஷேத்திரங்கள் எது என்றுகூடத் தெரியவில்லை. அவர் சொல்லும் மண்டோதரி சம்பவம் முதலியன மற்றைய இடங்களில் கானப்படவில்லை. மதுரையில் நடந்த பல திருவிளையாடல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர் சம்பந்தருக்குப் பின்னால் வாழ்ந்திருந்தால் அதைத்தான் முதலில் குறிப்பிட்டிருப்பார்.

10. மாணிக்கவாசகர் பாடல்களில் திருக்குறளின் தாக்கமும் தெரிவதால் வள்ளுவவர் காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) ஒட்டியே வாழ்ந்திருக்க வேண்டும்

11. பொன் அம்பலம், காஞ்சி செம்பொற் கோவில் ஆகியன எல்லாம்பாட்டில் வருவதால் பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். ஐயடிகள் காடவர்கோன் (கி.பி 550-575) என்ற பல்லவ மன்னன் பொன் வேய்ந்ததை நாம் அறிவோம்.

12.இவர் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!!!

13.சம்பந்தருக்கு முந்தி வாழ்ந்த கண்ணப்பர், சண்டீசர் ஆகியோரை மாணிக்கவாசகர் பாடுகிறார். சம்பந்தருக்குப் பிற்பட்ட யாரையும் பாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது
14. மாணிக்கவாசகர், தமிழ்ச் சங்க காலத்தைஒட்டி வாழ்ந்தவராக இரூக்கவேண்டும் திருக்கோவையில் ‘உயர் மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகள்’ என்றும் திருவாசகத்தில் ‘தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே’ என்றும் பாடுவது இவர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்று காட்டுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தால் இப்படிப் பாடி இருக்க மாட்டார். கடந்தகாலத்தில் நடந்ததை ‘இறந்த கால’த்தில் பாடி இருப்பார்.

Thiruvathavur,December 1997-3
15.சிதம்பரத்துக்கு ஆதித்ய சோழன் பொன் வேயும் முன்னர் காடவர்கோன் (பல்லவ மன்னன்) பொன் வேய்ந்ததாக அறிகிறோம். ஆக திருமூலரும், மாணிக்கவாசகரும் குறிப்பிடும் பொன் அம்பலம் மிகப் பழைய பொன் அம்பலமே.

16. அப்பர் போல நேரடியாகக் குறிப்பிடாமல் சம்பந்தர், மாணிக்கவாசகரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: இரண்டாம் திருமுறையில் ‘தெரிந்த அடியார் திசைதோறும் குருந்த மரும் குரவின் அலரும் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்’ — என்று பாடுகிறார். மாணிக்கவாசகர், குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் உபதேசம் பெற்றதால் குருந்த மரத்தை அடிக்கடி குறிப்பிடுவது முக்கிய தடயமாகும்.

17.கோவைக்கு இலக்கணமாக இவர் எழுதிய திருக்கோவையாரையே பேராசிரியர் போன்ற உரைகாரர்கள் குறிப்பிடுவதால் மாணிக்கவாசகர், பாண்டிக்கோவைக்கு மிகவும் முந்தியவர்.

18. நவீன எழுத்தாளர்கள் மாணிக்கவாசகரை வரகுணன் காலத்தவர் என்று சொன்னாலும் இஅர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் மந்திரியாக இருந்தவர் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதையும் கவனிக்கவேண்டும்.

19.மாணிக்கவாசகரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சி நரி – பரி ஆன லீலை ஆகும். அவரை பாண்டிய மன்னன் அனுப்பியது குதிரை வாங்குவதற்கே. குதிரை வியாபாரம் நமது கடற்கரையிலும், அருகில் இலங்கையிலும் நடந்தது சங்க இலக்கியக் குறிப்பாலும் இலங்கையில் தமிழ்க் குதிரை வியாபாரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தெரிகிறது.
Thiruvathavur,December 1997

20. மதுரையின் முக்கியப் பெயர்களில் ஒன்று ஆலவாய். இதை மாணிக்கவாசகர் பயன்படுத்தவில்லை ஆனால் சம்பந்தர் பயன்படுத்துகிறார். ‘ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று சம்பந்தர் பாடுவது, தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி– என்ற மாணிக்கவாசகரின் வரிகளின் எதிரொலியாகத் திகழ்கிறது

தொடரும்………………..
Contact swami_48@yahoo.com