மான் பிடித்தீர், முயலை மிதித்தீர் -நமச்சிவாயப் புலவர் நிந்தாஸ்துதி (10,598)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,598
Date uploaded in London – – 26 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தனிப்பாடல் செல்வம்
மான் பிடித்தீர், முயலை மிதித்தீர், ஆடெடுத்தீர், உம்மைக் காண கழுக்கள் அல்லவோ வரும், காளத்தி நாதனே!
ச.நாகராஜன்

நமச்சிவாயப் புலவர் இறைவன் மீது நிந்தாஸ்துதியாகப் பாடுவதில் வல்லவர்.
இறைவனின் அருள் விளையாடல்களை வைத்தே அவரை நிந்தை செய்வது அவரது ஒரு உத்தி.


காளத்திநாதனைத் தரிசிக்கச் சென்றவர், “காளத்தி நாதா உன்னைக் கழுக்கள் அல்லவா வந்து தரிசிக்கும்!” என்று பாடுகிறார்.
நமக்குத் தூக்கி வாரிப் போடும், அட இறைவனை கழுகுகளா வந்து தரிசிக்கும், என்ன இந்தப் புலவர் இப்படிச் சொல்கிறாரே, என்று!
ஆனால் அவர் பாடலைப் பாடி அதன் அர்த்தத்தை விரிவாகப் பார்த்தால் நமக்கு அவர் பாடல் ஒரு நிந்தாஸ்துதியாக அமைந்திருப்பது தெரியவரும்.
காளத்தி நாதன் பாடலைப் பார்ப்போம்:

மான் பிடித்தீர் முயன்மிதித்தீ ரெவருங் காண
மன்றுதனி லாடெடுத்தீர் மகத்து வந்து
ஊன்பெருத்த யானையைக் கொன் றுரித்தீ ரையா
உரப்பான தலைக்கறிக்கு முவந்தீ ரையா
மீன்பொதிந்த விழிமடவா கொரு பங் கீந்தீர்
மேலான வேடனெச்சின் மிகவே கொண்டீர்
கான்பொதிந்த காளத்தி நாதா வும்மைக்
கழுக்கள்வந்து சுற்றுவதுங் காணத் தானே

பாடலின் பொருள் இது :
மான் பிடித்தீர் – மானைப் பிடித்தீர்கள்
முயல் மிதித்தீர் – முயலை மிதித்தீர்கள்
எவருங் காண – எல்லோரும் பார்க்கும் படி
மன்று தனில் – பொதுவில்
ஆடு எடுத்தீர் – ஆட்டை எடுத்தீர்
மகத்துவந்த – யாகத்தில் தோன்றிய
ஊன் பெருத்த யானையை – உடல் பெருத்த யானையை
கொன்று உரித்தீர் – கொன்று தோலை உரித்தீர்
இப்பால் – இதற்கு மேலும்
உரப்பு ஆன – உறுதியாகிய
தலைக் கறிக்கும் – தலைக் கறிக்காவும்
உவந்தீர் – விரும்பினீர்கள்
ஐயா – ஐயனே
மீன் பொதிந்த – மீனின் தன்மையை உடைய
விழி மடவாட்கு – கண்களை உடைய உமா தேவிக்கு
ஒரு பங்கு தந்தீர் – உடலில் ஒரு பாகம் தந்தீர்கள்
மேலான வேடன் எச்சில் – மேன்மையாகிய வேடனது எச்சிலை
மிகவே கொண்டீர் – அதிகமாகவே கொண்டீர்கள்
கான் பொதிந்த – காடு மூடிய
காளத்தி – திருக்காளத்திக்கு
நாதா – இறைவனே
உம்மைக் காணத்தானே – உம்மைத் தரிசிப்பதற்காக
கழுக்கள் வந்து சுற்றுவதும் – கழுகுகள் வந்து சுற்றுகின்றன!

இதில் ஒவ்வொரு லீலையாக எடுத்துப் பார்த்தால் பொருள் புரியும்.
முயல் என்பது இங்கு முயலகனைக் குறிக்கும். முயலகனை வதம் செய்த விளையாடல் இங்கு குறிப்பிடப்படுகிறது.
ஆடெடுத்தல் என்பது நடித்தல் என்ற பொருளில் வருகிறது.
மகத்து வந்த யானை என்பது கஜாசுரனைக் குறிப்பிடுகிறது. கஜாசுரன் வதம் செய்த விளையாடல் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
தலைக்கறிக்கு வந்தது என்பது சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றைக் குறிக்கிறது.
உமாதேவிக்கு உடலில் ஒரு பாகம் தந்தது அர்த்தநாரீஸ்வரராக அவர் இருப்பதைக் குறிக்கிறது.


வேடன் எச்சில் என்பது கண்ணப்ப நாயனார் அதிக பக்தி மேலீட்டால் தன் வாயில் கொணர்ந்த நீரால் அபிஷேகம் செய்ததைக் குறிப்பிடுகிறது.

ஆனால் கழுகுகள் ஏன் வர வேண்டும்?
மான், முயல், யானை, தலைக்கறி, வேடனது எச்சில் ஆகிய இவற்றிற்காகக் கழுகுகள் தானே வரும்!

ஐயாமீன் என்பதை ஐயனே, மீன் என்று பொருள் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஐ ஆம் மீன் என்று பிரித்து அழகாகிய மீன் என்ற அர்த்தத்தையும் பெற்று மகிழலாம்.

புலவரின் நிந்தாஸ்துதியில் தான் எத்தனை புகழ் வரலாறுகள் ஒளிந்துள்ளன! அவை அழகுறச் சுட்டிக் காட்டப்படுகின்றன!


tags– மான் பிடித்தீர், முயலை மிதித்தீர் ,நமச்சிவாயப் புலவர் ,