மூன்றாம் கடிதம்:மாமிகளின் துயரமும் மருமக்களின் கொண்டாட்டமும் (Post No. 2570)

ATTU URAL

Compiled  by London swaminathan

 

Date: 24 February 2016

 

Post No. 2570

 

Time uploaded in London :–8-25 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 
(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்றும், அதற்கு முந்திய நாளும் 2 மாமிகளின் கடிதங்கள் வெளியானது. இது மூன்றாவது கடிதம்)

 

 

என்னருமைக் குமாரத்தியே,

 

நான் இக்கடிதம் எழுதும்போது என் மனம் என்னை விட்டுச் சென்று எங்கெங்கோ அலைகின்றது. இவ்விடத்தில் நான்படும் துயரங்களையெல்லாம் கடிதத்தின் மூலம் எப்படித் தெரிவிக்க முடியும்? ஆயினும் யானடைந்திருக்கும் துன்பங்களைப் பிறரிடம் கூறினால் என் மனது சற்றே தேறுதலடையுமென்றே இச்சிறு கடிதத்தை வரையலானேன்.

 

என்னுடன் பிறந்த அண்ணனுக்கு நான் தேடிவைத்த தேவியால் நான் அடைந்த துன்பம் போதும். அதை நினைக்க நினைக்க என் மனம் பகீர் பகீரென்று திடுக்கிடுகின்றது.

 

கல்யாணமாகுமுன் நீங்கள் எனக்குச் சொன்ன நற்புத்திகளெல்லாம் துற்புத்திகளாகத் தோன்றின. பட்டபின் புத்தி வந்துவிட்டது,.ஐயோ என் தலைவிதியை என் சொல்வேன்? நமது பந்துக்களில் ஒரு பெண்ணைக் கட்டியிருந்தால் அவள் மாமியார் என்னும் பக்தி விசுவாசத்தை வைத்து சற்று கீழ்ப்படிந்து  நடந்து எனக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்திருப்பாள். அல்லது நாட்டுப் புறங்களிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டுவந்திருந்தால் அவள் கள்ளம்,கபடின்றி இருந்திருப்பாள். உன் அண்ணன் நாட்டுப்புறங்கள் எல்லாம் உதவாது, ‘நான்சென்ஸ்’ என்று சொல்லிவிட்டபடியால், பட்டினத்தில் பெண்ணைக்கொள்ள வேண்டியதாயிற்று.

 

அவள் யாதொரு வீட்டு வேலையும் செய்கிறது கிடையாது .எல்லாம் நானே செய்துதீர வேண்டும். அதிகாலையில் எழுந்து மற்ற பெண்களைப்போல அலுவலைப் பார்க்காமல், , அவள் நன்றாகப் பொழுது விடிந்த பின், சுமார் எட்டு மணிக்கு எழுந்து, பள்ளியறையை விட்டு வெளியே வந்து பல் துலக்கிக்கொண்டு, ஒழுங்காகத் தலையைச் சீவி மினுக்கி, தளுக்குப் பொட்டிட்டுக்கொண்டு, அண்டை அயலார் பெர்ரியோர், சிறியோர் என்ற மரியாதையை கிஞ்சிற்றேனும் கவனியாமல் உன் அண்ணன் எதிரே நின்று கொஞ்சிக் குலாவி வார்த்தையாடிய பின், பலகாரம் சாப்பிட வருவாள்.

 

இதற்குள்ளாக நான் அதிகாலையில் எழுந்திருந்து, வீடு பெருக்கி, பாத்திரம் சுத்தம் செய்து, காப்பி போட்டு, ஏதேனும் பலகாரம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் உடம்பு சரியில்லாததால், அதிகாலையில் எழுந்து காப்பிபோடாவிட்டாலும், என்னை முகத்தால் சுட்டு, ஜாடை மாடையாகத் திட்ட ஆரம்பிப்பாள். இதென்ன இழவு, தின்கிறதற்கு ஆட்கள் இருக்கிறார்களேயொழிய, வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாதா? ஒருதரம் சொன்னால் உரைக்காதா? எந்நேரமும் இந்த வீட்டில் பெரிய ரோதனயாய்விட்டது. படுக்கையிலிருந்து எழுந்தவுடன் காப்பி சாப்பிட்டோம், சந்தோஷமாக இருந்தோம் என்பதே இல்லை. இங்கே நாங்கள் என்ன லட்சாதிபதிகளா? கையால் உழைத்தால் தானே கூலி கிடைக்கும். காலை நீட்டிக்கொண்டு, கணக்கு வழக்குப் பார்க்காமல் உனக்கென்ன, எனக்கென்ன, கணக்கென்ன, வழக்கென்ன என்று இப்படி இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்? என்று சரமாரியாகப் பொழிவாள். இன்னும் சொல்லொணாத வார்த்தைகளையும் பொழிவாள். நானவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு, “பகவானே! என் தலைவிதி இப்படியாயிற்றே,மருமகள், மருமகளென்று மகிழ்ந்தேனே. இப்போது என் மகிழ்ச்சியெல்லாம் இகழ்ச்சி ஆய்விட்டதே. சர்வ ஜீவ தயாபரனே! என்னை இரட்சித்தல் வேண்டும்” என்று வேண்டி காலத்தைக் கழித்து வருகிறேன்.

bags on back of women

அதிகாலையிலெழுந்து யான் காப்பி, பலகாரம் தயாராக வைத்திருந்தால், அவள் அதை எடுத்துக்கொண்டு அன்ன நடை நடந்து, அலங்காரமாகத் தன் பள்ளியறைக்குச் சென்று மேஜை மீது வைத்துவிட்டு, எதிர் எதிராக உன் அண்ணனுடன் உட்கார்ந்து ஆனந்தமகத் தின்று தாம்பூலமருந்தியபின், இருவரும் அவ்வறையைவிட்டு வெளியே வருவார்கள். யான் வேலைக்காரியைப் போல, அவ்வறைக்குள் போய் சுத்தம் செய்யவேண்டும்.பிறகு சமையல் வேலை.

 

உன் அண்ணன், என்னைத் தாயார் என்று சற்றேனும் யோசியாமல், வேலையாளை நியமிக்காமல், துரை போலத் தன் மனைவியுடன் ஆனந்தமாகக் காலம் கழித்துவருகிறான். ஈசன், இறுதி நாளில் எனக்கு இந்தக் கஷ்டத்தை வைத்தான். மாமியார் என்ற பட்டம் எனக்குக் கிடையவே கிடையாது. ஏதாவது நற்புத்தி கூறப்புகின், உனக்கென்ன பெரியதனம்? மூலையில் நாரிக்கிட, இதற்காகவா உன்னை அழைத்தது? என்று உன் அண்ணன் சொல்லி விடுகிறான். அப்புறம் அச்சிறுக்கி என்னை எப்படி மதிப்பாள்? அவளும் என்னை அலட்சியம் செய்கிறாள்.

 

அந்தச் சிறுக்கியோ பட்டினத்துப் பெண்ணாகையால் தினமும் தவறாமல் ஒழுங்காக ஸோப் பூசிக்கொண்டு குளித்துவிட்டு நைஸாக உடையை உடுத்திக்கொண்டு சல்லா முந்தாணியைப் பின்புறம் சொருகாமல் தாசிகளைப்போல

தொங்க விட்டுக்கொண்டு, முழங்கைக்குக் கீழ் குச்சி ரவிக்கையை அணிந்து மேனா மினுக்கியைப்போல காலம் கழிக்கிறாள். நான் புழுக்கைச் சிறுக்கியைப்போல கரித்துணியைக் கட்டிக்கொண்டு அடுப்பண்டையி லிருக்கவேண்டியதுதான். எனக்குத் துணிமணி இருக்கிறதா என்று கவனிப்பதேயில்லை. யானே அச்சிறுக்கிக்குத் தெரியாமல் உன் அண்ணனிடம் என் மனக்கவலையைச் சொன்னாலும் “டுஷ், டாம், கூஸ், அதெல்லாம் என் காதில் போடாதே. உனக்கிஷ்டமிருந்தால் இங்கேயிரு. இப்படி வீண் கதையை வளர்த்துக்கொண்டு என் மானத்தை வாங்குவதாயிருந்தால் வீட்டை விட்டு ஒருவரிடமும் சொல்லாமல் வெளியே போய்விடு” என்கிறான். என் பிள்ளையே எனக்கு சத்ருவாக இருந்தால் என்னை யார் காப்பாற்றுவார்கள்? யான் இவ்விடத்தில் இருக்கும் துன்பங்களையொழித்துவிட்டு, உன்னிடம் வந்து, இருக்கும் பணக்காசுடன் வாழலாமென்றாலோ பிள்ளையைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை. ஒரே பிள்ளை யென்று யான் சீராட்டி பாலூட்டி வளர்த்த பெருமை எனக்குத் தெரியுமேயொழிய வேறு யாரறிவார்கள்? அவந்தான் அவள் மாய்கையில் மூழ்கி தாய் என்ற விசுவாசம் இல்லாமலிருந்தால் யான் அப்படியிருக்க என் மனம் சகிக்கவில்லையே. பிறரை நோவானேன்? அவரவர் வினையை அவரவர் அனுபவிக்க வேண்டு மாகையால் யானிதைப்பற்றி வருத்தப்படுவதால் என்ன பயன்?

a aa i ii

 

அழுதாற் பயனென்ன, நொந்தால் பயனென்ன வாவதில்லை 

தொழுதாற் பயனென்ன நின்னையொருவர் சுடவுரைத்த

பழுதாற் பயனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோ

னெழுதாப்படி வருமோ சலியாதிரு யென்னேழை நெஞ்சே!

 

என்றன்றோ ஆன்றோர் கூறியிருக்கின்றனர். என்றைக்கு என் துன்பமொழியுமோ, என்னைக் கடவுள் ரட்சிப்பாரோ? யானறியேன். என் பிள்ளையைப் பற்றி பலரிடம் இகழ்ச்சியாகக் கூறினால் எனக்கே அவமானம். ஆகையால் ஒருவரிடமும் சொல்லாமலும், இவ்விடத்தைவிட்டு நீங்காமலுமிருக்கின்றேன்.

 

உன் அன்புள்ள தாயார்

மாணிக்கவல்லி

 

–சுபம்–