Written by London Swaminathan
Date: 1 JUNE 2018
Time uploaded in London – 10-58 AM
Post No. 5066
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
BE THE CHANGE YOU WANT SEE IN THE WORLD—MAHATMA GANDHI
ஒரு ஊரில் ஒரு அழகி; அவளுக்கும் ஒரு அழகனுக்கும் கல்யாணம்; தேன் நிலவு (ஹனி மூன்) நிறைவு; சுக போக வாழ்க்கை!
ஆனால் ரோஜாச் செடி முள் போல, ஒரு மாமியார்; வந்தது பிரச்சனை; புற்று நோய் போலப் புரையோடத் துவங்கியது. ‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்ற பழமொழிக்கு இணங்க, பையன் வேறு, புதுப் பெண்ணைப் புகழ்ந்து தள்ளினான். அவள் சமைத்தது எல்லாம் அமிர்தம் என்றான். பெத்த வயசு கேட்குமா? வயிற்று எரிச்சல் அதிகரித்தது. பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
அந்த வயிற்றெரிச்சலை எல்லாம் புகார் மனுவாக மாற்றி பையன் காதில் ஊதினாள் மாமியார்; அதாவது பையனின் அம்மா.
அவனுக்கு அது ஏறுமா? அது ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல’ இருந்தது.
மாமியாரின் கோபம் எல்லாம் மருமகள் மீது பாய்ந்தது.
நாள் ஆக நாள் ஆக மருமகளுக்குப் பொறுக்க முடியவில்லை; அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். இந்தப் பெண்ணும் அந்த சாமியார் காலில் விழுந்தாள்; காதில் ஓதினாள்.
சாமியார் சொன்னார்:
“மகளே அஞ்சற்க; என்னிடம் மாமியாரைக் கொல்லும் அரு மருந்து இருக்கிறது. ஆனால் இது மெதுவாகக் கொல்லும் விஷம்; கூட இருந்தே ‘கழுத்தை அறுக்கும் உறவினர் போலக் கொல்லும்’ சக்தி வாய்ந்தது; நண்பன் போலவே நடித்து ‘பின்னுக்குக் குழிபறிப்பவன் போல’ உன் மாமியாருக்குக் குழி பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இந்தா, சின்ன (BOTTLE) பாட்டில்; ஆனால் ஒன்று சிறுவர் கையில் இது சிக்கி விடக் கூடாது. மாமியார்க்குத் தெரியாமல் தினமும் ஒரு சொட்டுக் கலந்து விடு அவள் சாப்பாட்டில்; பின்னர் பார்; உன் வாழ்வில் இன்பம் செழிக்கும்” என்றார்.
மருமகளுக்கு ஏக சந்தோஷம்; பாட்டிலை சாமியாரின் கையிலிருந்து பிடுங்காத குறைதான்; விரைவாக வெளியே ஓடினாள். சாமியார் சொன்னார்:
பெண்ணே நில்! நில்! இரண்டு முக்கிய நிபந்தனைகள் உண்டு.
இதில் உள்ள விஷம் உன் மாமியாருக்குத் தெரியாமல் இருப்பதற்காக நீ தினமும் இரண்டு காரியம் செய்ய வேண்டும்:–
- காலையில் எழுந்தவுடன் அம்மா! என்று சொல்லி அவள் காலில் விழுந்து நம்ஸ்காரம் செய்து ஆஸீர்வாதம் பெறு!
2இரண்டாவதாக, அம்மா! உங்களுக்கு இன்று என்னம்மா சமைக்க? உங்களுக்குப் பிடித்த கறி, காய், கூட்டு, பலகாரம் சொல்லுங்களம்மா!! என்று அன்போடு கேள்; டி.வி ஸீரியல், சினிமா நடிகைகளை விட நன்றாக நடி; வெற்றி நமதே! ஒன்பதே மாதம்!”
பெண்ணும் ஓடினாள்; கன கச்சிதமாக காரியங்களைச் செய்தாள். மாமியாருக்கு முதலில் கொஞ்சம் சம்ஸயம் (DOUBT); ஈதென்னடா; இப்படி அதிசயம்! என்று ஆச்சர்யத்தாள்; ஆனால் நாளடைவில் பழகிப் போயிற்று; நம்பிக்கையும் பிறந்தது.
மாதங்கள் உருண்டோடின; மருமகள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த கணவனின், மருமகளின் நண்பர்களிடம் எல்லாம் மாமியார் மருமகளைப் புகழ்ந்து தள்ளினாள். இது மெதுவாக மருமகள் காதுக்கும் எட்டியது. அவளுக்கும் அதிசயம்; என்னடா இது, புகார் பட்டியல் போய், புகழ்ச்சிப் பட்டியல் வருகிறதே என்று.
நாள் தோறும் நமஸ்காரம்; வேளை தோறும் பிடித்த தளிகை. மாமியாருக்கு ஒரே மகிழ்ச்சி.
அட வீட்டுக்கு வந்த லெட்சுமியே! என் மகனைப் போல அதிர்ஷ்டசாலி உலகில் யாரும் இல்லை, நீ வீட்டுக்கு வந்த மகராசி! என்றெலாம் மாமியார் பகிரங்கமாக, பல்லோர் முன்னிலையில், புகழ்பாடத் துவங்கினாள். ‘நீ ஒரு அழகி; உனக்கு என் மகனை விட்டு வைர நெக்லஸ் வாங்கித் தரச் சொல்லி இருக்கிறேன்’ என்றாள் மாமியார்.
மருமகளின் மனதும் இளகத் துவங்கியது; ஓடினாள், ஓடினாள், ஓடினாள் சாமியாரின் ஆஸ்ரமத்துக்கு ஓடினாள் .
வா, மகளே வா, ” வந்து விட்டாயா; ஏறத்தாழ ஆறு மாதம் ஆகி விட்டது ; இன்னும் மூன்றே மாதம்தான்; பின்னர் மாமியார் தொல்லை என்பதே இல்லை என்றார்.
“இல்லை, குருவே……………………. என்று இழுத்தாள் மருமகள். என் மனச் சாட்சி என்னை உறுத்துகிறது; மாமியார் கொடியவள் அல்லள்; அவளைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை……”
சாமியார் இடை மறித்தார்
“பெண்ணே மருந்தை நிறுத்தி விடாதே; அது தெய்வக் குற்றம்; அபசாரம்; தொடர்ந்து நான் சொன்னபடி செய்; ஒன்பது மாதம் கழித்து வா; பின்னர் உன் குற்ற உணர்வு போகவும், பாபம் தொலையவும் இதை விட சக்தி வாய்ந்த மருந்து தருகிறேன்” என்றார்.
அவளும் வருத்தப் பட்டுக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள்; தினசரி நம்ஸ்காரம் செய்து கதையைத் தொடர்ந்தாள்;
ஒன்பது மாதம் போயின.
ஓடினாள்; சாமியார் ஆஸ்ரமத்துக்கு.
குருவே! மிகவும் மனக் கவலை; ஒரு நல்ல ஆத்மாவைக் கொன்று விட்டு நான் உயிர் வாழ விரும்பவில்லை; எனக்கு உடனே இறக்கும் மருந்து கொடுங்கள்; என் மாமியார் இறந்தால் நான் ஒரு கணமும் உயிர் வாழேன்; அவள் ஒரு புனிதவதி” என்று சொல்லி அழுதாள் மருமகள்.
சிரித்தார்! சாமியார் சிரித்தார்!! கூரை அதிரச் சிரித்தார்!!
“பெண்ணே! உன் மாமியார், இன்று போல என்றும் நலமாக இருப்பாள்; நான் அவளுக்கு மருந்து கொடுக்கவில்லை; உனக்குத்தான் மருந்து கொடு த்தேன்; இரண்டு கட்டளைகள் என்ற ரூபத்தில்!
மாமியாருக்குக் கொடுத்த பாட்டிலில் இருந்தது வெறும் டானிக்; வைட்டமின் மருந்து!!
உன் மனம் மாறுவதற்கும் அதன் மூலம் மாமியார் மெச்சிய மருமகள் என்று பெயர் கிடைக்கவும் உன்னை தினமும் நமஸ்காரம் செய்ய வைத்து நல்ல உணவு வகைகளைச் சமைக்க வைத்தேன்.
பிரச்சனை என்பது வெளியே இல்லை; நம்மிடம்தான் உள்ளது; எந்த ஒரு பிரச்சனைக்கும் உலகி மருந்து உண்டு. அதன் மூலம் பிரச்சனைகளையே வரமாக மாற்ற இயலும்; தீயோரையும் திருத்த இயலும்; இந்தா! பிரஸாதம்! என்று குங்குமம், பழங்களைப் பெண்ணின் கையில் போட்டார்.
“தீர்க்க சுமங்கலி பவஹ” என்று ஆசீர்வதித்தார்.
மருமகளின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் போலக் கரை புரண்டு ஓடியது.
(தென் ஆப்ரிக்கவில் இருந்து வந்த அங்க ஜ ன் என்ற பேச்சாளர் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவில் ஆங்கிலத்தில் சொன்ன கதை; தமிழில் பிழிந்தவர்- லண்டன் சுவாமிநாதன் )
–சுபம்–
You must be logged in to post a comment.