Written by S.NAGARAJAN
Date: 27 NOVEMBER 2017
Time uploaded in London- 6-28 am
Post No. 4436
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
தமிழ் இலக்கியம் : பெண்களின் நுட்பமான அறிவு
மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!
ச.நாகராஜன்
1
நள தமயந்தியின் சரித்திரம் பாரதம் முழுவதும் தெரிந்த அற்புதமான ஒரு சரித்திரம். இதை வெண்பா பாக்களினால் தமிழில் புகழேந்திப் புலவர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்.
வடமொழியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் நைஷதம் என்ற மஹாகாவியத்தை இயற்றியுள்ளார். இது ஐந்து பெருங்காவியங்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது.
இந்தக் காவியத்தின் அழகில் ஈடுபட்டான் தமிழ் மன்னன் ஒருவன்.
அவர் பெயர் அதிவீர ராம பாண்டியர்; பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர். கொற்கையிலிருந்து அரசாண்டதாகத் தெரிகிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பெரும் கவிஞர். வடமொழியில் விற்பன்னர். சிற்றின்பப் பிரியர். தமிழில் கொக்கோகத்தை எழுதியவரும் இவரே.
இவரது மனைவியாரும் சிறந்த தமிழ் அறிஞர்.
வடமொழிப் புலமையால் அதில் இருந்த நூல்களில் புலமை கொண்ட அதிவீர ராம பாண்டியன் நைஷத காவியத்தில் மனதைப் பறி கொடுத்து அதைத் தமிழில் இயற்றினார். இதில் 1172 செய்யுள்கள் உள்ளன.
இதை அரங்கேற்றம் செய்த போது நடந்த ஒரு சம்பவத்தை இங்குக் காணலாம்
2
நைடத காவியம் அரங்கேற்றம் ஆரம்பமானது. புலவர்கள், ரஸிகர்கள் அவையில் கூடினர். அதிவீர ராம பாண்டியன் தன் காவியத்தை அரங்கேற்றும் செய்யும் விதமாகச் செய்யுள்களைப் படித்து அதை அறிஞர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
முதல் படலமான நாட்டுப் படலம் முடிந்தது. அடுத்து நகரப் படலம் ஆரம்பமானது.
அதில் தான் இயற்றிய செய்யுளைப் படிக்கலானார் அதி வீர ராம பாண்டியன்.
வாய்ந்த மின்னைம டந்தைய ராக்கிவிண்
பேர்ந்தி டாமலன் றோமலர்ப் புங்கவன்
சாந்த ணிந்தத மனியக் குன்றென
ஏந்து வெம்முலைப் பாரமி யற்றினான்
நகரத்தை வர்ணிக்க வந்த போது அமைந்த பாடல் இது.
இதன் பொருள் :- தாமரைப் பூவில் இருக்கின்ற நான்முகக் கடவுள் (புங்கவன்) மேகத்தின் கண் பொருந்திய மின்னற் கொடிகளை மங்கையராக்கி மீண்டும் அம்மேகத்தினிடத்தே போகாமல் இருத்தற்கன்றோ சந்தனத்தைப் பூசி அமைக்கப்படுகின்ற, விருப்பம் செய்கின்ற, பாரமாகிய பொன்மலையைப் போல (தமனியக் குன்று) அந்த நன்முலைகளை (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்) அந்த மங்கையருக்கு உண்டாக்கினான்.
பிரம்மா மங்கையருக்கு ஏன் முலைகளை அமைத்தான் என்பதைக் கற்பனை நயம் படப் பாண்டியன் கூறி முடித்தார்.
இதைப் பாண்டியன் கூறி முடித்தவுடன் அவையிலிருந்த புலவர் ஒருவர் எழுந்தார்.
“அரசே! மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம்? இது பொருத்தமற்றதாக அல்லவா உள்ளது. இதை விளக்க வேண்டும்” என்றார்.
மங்கையரின் கொங்கைகளை ஏன் பிரமன் அமைத்தான் என்பதைச் சொல்லப் போய் வம்பில் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்த பாண்டியன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அந்தச் செய்யுளுடன் அன்றைய அரங்கேற்றத்தை முடித்து, “நாளை இதைத் தொடருவோம்” என்றான்.
அரண்மனைக்கு மீண்ட மன்னன் ஓயாத சிந்தனையில் ஆழ்ந்தான். இந்தப் பாடலுக்கு எப்படிப் பொருள் சொல்வது. மேகத்தில் தோன்றி மறையும் மின்னலுக்கும் மலைக்கும் எப்படி ஒரு சம்பந்தத்தை உருவாக்குவது என்ற கவலையில் ஆழ்ந்தான்.
அந்தப்புரம் வந்த மன்னன் படுக்கையில் உறக்கமின்றி முகம் வாடிப் படுத்தான்.
மஹாராணியார் பெரும் புலமை வாய்ந்தவர். நல்ல கவிஞர். அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்து காலையில் நடந்த அரங்கேற்ற சம்பவத்தையும் நினைத்து அவனது முகம் வாடி இருக்கும் காரணத்தை அறிந்தாள்.
மெல்ல மன்னரிடம் பேச்சை ஆரம்பித்தாள். “நீங்கள் பாடிய பாடல் மிக அருமை” என்றாள்.
மன்னனோ, “அது எப்படி? மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் கூறுவது?” என்றான்.
“அது சுலபம். அது இயல்பாய் அமைந்த ஒன்று தானே” என்றாள் சர்வ சாதாரணமாக ராணி.
ஆர்வம் மேலோங்க, “எங்கே, அர்த்தம் சொல்லேன்” என்றான் பாண்டியன்.
ராணி விளக்கலானாள் : “ மின்னலுக்கும் மலைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டால் கூட இயைபு உண்டாக்கவன்றோ சூசுகமாகிய இருப்பு ஆணியை விதியோன் அடித்தான்” என்றாள் ராணி.
மன்னன் முகம் மலர்ந்தது. ராணி என்ன சொன்னாள் என்பதை கண நேரத்தில் அவன் புரிந்து கொண்டான்.
அதாவது மின்னல் போன்ற ஒடிந்த இடையை உடைய மங்கையருக்குக் கணத்தில் மறைகின்ற தன்மையை உடைய மின்னல் மறையாது இருக்க, அம்மலை முலைகள் மீது, ‘முலைக் கண்களாகிய’ இருப்பு ஆணிகளை பிரமன் அடித்தான் என்றாள் ராணி.
மறு நாள் அவை கூடியது. பாண்டியன் பெருமிதம் பொங்க (ராணியாரின்) விளக்கத்தைக் கூற அனைவரும் அதைச் சிறப்பான விளக்கம் என்று பாராட்டி ஏற்றுக் கொண்டனர்.
காவியம் தொடர்ந்தது.
பாண்டியன் தன் மஹராணியை எப்படிப் போற்றி இருப்பான் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை, அல்லவா!
3
பாரதம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இது போல ஆணுக்குச் சமமாக அறிவில் பெண்கள் ஓங்கி இருந்த வரலாறுகள் ஏராளம் உண்டு. தொகுப்பின் பெருகும். அத்தோடு மட்டுமின்றி செக்ஸ் எனப்படும் பாலியலில் – தாம்பத்ய உறவில் – அவர்களின் அறிவு மிகவும் நுட்பமாக இருந்தது என்பதையும் அறிய முடியும்.