ரமண பக்தையைக் காத்த நாகம்! (Post No.5337)

Written by S Nagarajan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 6-17 AM  (British Summer Time)

 

Post No. 5337

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!

 

ச.நாகராஜன்

 

பகவான் ப்ரியா மா பிரோஜா தலயார்கான் (Ma Firoza Taleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.

 

ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.

ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.

ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.

 

திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

 

திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.

தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். பாம்பு பாம்பு என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.

திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான்  ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர்.

சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார்.

திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.

அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.

அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் அவர்.

 

அவர் உடனடியாக ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.

 

பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.

 

இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.

 

“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.

ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!

வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.

 

ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும்  வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.

முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.

 

அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.

 

இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில்  நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.

****