வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***