By ச.நாகராஜன்
‘தி டாவோ ஆஃப் ம்யூசிக்’ என்னும் புத்தகத்தை எழுதிய ஜான் எம் ஆர்டிஸ் (தோற்றம் 31-1-1952 மறைவு 11-4-2012) இசையை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தி ஏராளமானோருக்கு உதவி புரிந்துள்ளார். மூட்டுவலியாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்த வயதான மூதாட்டியை பூரண குணமாக்கிய சம்பவத்திலிருந்து பல்வேறு வலியாலும் மன அழுத்தத்தினாலும் தூக்கமின்மையாலும் அவதிப்பட்ட ஏராளமான பேர்களை அவர் மீட்டிருக்கிறார்.
முதுமையை அடைந்து விட்டதால் கவலைப்படுவோரும் ஈடு செய்ய முடியாத இரத்த பந்தம் அல்லது சொந்தத்தில் இழப்பை அடைந்தோரும் இசையின் மூலமாக அற்புதமான ஆறுதலைப் பெற்று வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை ‘ம்யூசிகல் மெனு’ என்ற உத்தியின் மூலமாகத் தங்களுக்குரிய குணப்படுத்தும் முறையைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும்படி தங்கள் சிகிச்சைக்கான மெனுவைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் அளவு வழி காட்டியுள்ளார்.
அவரது அரிய ஆராய்ச்சிகளின் முடிவாக அவர் கண்டுபிடித்துள்ளவை: இசையானது 1) மகிழ்ச்சியைத் தரும் 2)உறவுகளை மேம்படுத்தும் 3) நோய்களைக் குணப்படுத்தும் 4)படைப்பாற்றலை ஊக்குவிக்கும் 5) உடலுக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும் 6) ஆத்ம திருப்தியை உண்டாக்கும்
நாடித் துடிப்பை சீராக்கி சுவாசத்தை ஒழுங்குபடுத்தி இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் சீராக்கி மூளை மின்னலைகளை சாந்த நிலைக்குக் கொண்டு செல்ல இசை ஒரு அற்புத வழியாகும் என்கிறார் அவர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே வைப்ரேஷன் எனப்படும் துடிப்பு என்பதால் இயற்கையின் லயத்திற்கு இணங்க இருக்கும் இசையை நாம் கேட்பதால் அளப்பரிய நன்மைகளைப் பெறலாம் என்கிறார் ஆர்டிஸ்.
டான் காம்பெல் என்னும் பிரபல உளவியலாளர் ‘தி மொஜார்ட் எபக்ட்’ என்று இசையின் ஆற்றலை விளக்கும் உலக பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். அதில் பல்வேறு இசை வகைகளைக் கேட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துள்ளார்.
க்ரிகாரியன் சாண்ட் (Gregorian chant) : மன இறுக்கத்தை நீக்கி மனதை சாந்தப்படுத்தும்
பாரோக் இசை (Slower Baroque) வகைகளான பாச் ஹாண்டல் விவால்டி ஆகியவை படைப்பற்றலை ஊக்குவித்து புதியனவற்றைக் கண்டுபிடிக்க உதவும்
க்ளாஸிகல் இசை (மொஜார்ட் போன்றவை) ஒருமுனைப்படுத்தலை ஊக்குவித்து நினைவாற்றலை மேம்படுத்தும் (மாணவர்களுக்கு உகந்தது)
காதல் (ரொமாண்டிக்) இசை ( ஷூபெர்ட் ஷூமென், ட்சாய்கோவ்ஸ்கி போன்றவை) நம் புலன்களைக் கூர்மையாக்கி காதல் உணர்வையும் இரக்க உணர்வையும் அதிகரிக்கும்.
ஜாஸ் நம் உணர்வுகளை மேம்படுத்தி ஆனந்தத்தை உருவாக்கி சமுதாயத்துடன் இணையும் ஆவலை ஏற்படுத்தும்.
மத சம்பந்தமான இசையோ நம்மை உடல் மற்றும் உள்ள வலியிலிருந்து மீட்கும்.
இப்படி இசை நிபுணர்கள் கூறுவதை அறிவியல் ஆராய்ச்சிகள் உண்மையே என்று கூறி நிரூபிக்கின்றன.
ட்ரினிடி காலேஜில் பேராசிரியராகப் பணியாற்றும் டான் லாய்ட் இசை பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் மூளைகளில் பல்வேறு விதமான மெல்லிய உணர்வுகளை எழுப்புவதாகக் கூறுகிறார்.இதற்கு மூளையை ஸ்கேன் செய்து மியூசிகல் இன்ஸ்ட்ருமெண்ட் டிஜிடல் இண்டர்பேஸ் ((MIDI) மூலம் ஏராளமான தரவுகளை (டேட்டா) சேகரித்தார். இதன் மூலம் ஒரு நோயாளியின் சீரற்ற செயல்பாடுள்ள மூளைக்கும் சாதாரண நிலையில் இருக்கும் மூளைக்கும் உள்ள வேறுபாடுகளை அவரால் சுலபமாக இனம் காண முடிந்தது.
நமது பாரம்பரிய இசையில் உள்ள பல்வேறு ராகங்கள் பல நோய்களைத் தீர்க்கும் அரிய விஷயத்தை அனைவரும் நன்கு அறிவர்.
பைரவி ராகம் பக்க வாத நோயைத் தீர்க்கும், காய்ச்சலைப் போக்கும்; எப்போதும் உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ‘ராக ஆராய்ச்சி மையம்’ மூலமாக பைரவியின் பெருமையைக் கண்டுணர்ந்த பிரபல இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன் இதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிஜமாக நடந்த சம்பவங்கள் வாயிலாக விரிவாகக் கூறியுள்ளார்.
1933ஆம் ஆண்டு ப்ளோரென்ஸ் நகரில் நடந்த ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரபல இசை விற்பன்னர் ஓம்கார்நாத் தாகூரை (1897-1967) இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி (1883-1945) சந்திக்க விருப்பம் தெரிவித்துத் தன் காரை பிரத்யேமாக அனுப்பி வைத்தார். ஓம்கார்நாத் தாகூர் ஹிந்தோள ராகத்தை அனுபவித்துப் பாடிக் காட்ட முஸோலினி அதில் உள்ள வீர ரஸத்தை அனுபவித்து உச்ச கட்டத்தில் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று கூவினார்.அவர் வியர்வையில் மூழ்கி கண்கள் சிவக்க வீரத்தைக் காண்பிக்கும் கம்பீரத்தின் உச்சத்தில் இருந்தார்.
இப்படியும் ஒரு இசை இருக்க முடியுமா என்று வியந்த முஸோலினிக்கு அடுத்து ஓம்கார் நாத் தாகூர் சாயாநாட் என்னும் துன்ப நிலையைச் சுட்டிக் காட்டும் ராகத்தைப் பாடிக் காட்ட முஸோலினி கண்ணீர் அருவியாகப் பொழிய இசையின் வலிமையைக் கண்டு அசந்து போனார். தூக்கமில்லாமல் தான் தவிப்பதைக் கூறிய முஸோலினிக்கு பூரியா ராகத்தை தாகூர் இசைக்க அரை மணி நேரத்திலேயே வெகு நாட்களாகத் தூங்காத முஸோலினி அசந்து தூங்கினார். பாரத இசையின் வலிமையை தானே நேரில் அனுபவித்த முஸோலினிக்கு வியப்புத் தாளவில்லை.
சர்வாதிகாரி என்றாலும் கூட இசையில் அபார பிரியம் கொண்ட முஸோலினி சைவ உணவை சமைத்து ஓம்கார் நாத்தைத் தன்னுடன் உணவருந்தி விட்டே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.பின்னர் ஓம்கார்நாத் தாகூர் பிரியா விடை பெற்றார்!
இன்னும் இலக்கியம் மற்றும் சரித்திரம் கூறும் சில செய்திகளையும் சம்பவங்களையும் காண்போம்.
(அறிவியல் துளிகள் என்ற தொடர் பிரபல டைரக்டர் திரு.கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பாக்யா வார இதழில் 4-3-2011 இதழில் துவங்கியது.19-7-2013இல் 125 அத்தியாயங்களைக் கொண்டு வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுத் தொடர்கிறது. இதில் 21-9-2012 இதழில் 82ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இரண்டாம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்)
Please Read earlier posts on music written by London Swaminathan:
1.Rain Miracles: Rain and Fire by Music
2.மழை அற்புதங்கள்
3.இசைத் தமிழ் அதிசயங்கள்
4.சங்கீத ரகசியம்: இளமையில் கல்
5.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
6.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்
Contact swami_48@yahoo.com
படங்கள் பல வெப்சைட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி.
You must be logged in to post a comment.