‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–

பட்டினத்தாரின் 31 முக்கிய பாடல்கள்

patti.temple
Sri Pattinathar Temple at Tiruvotriyur, Chennai

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 அக்டோபர் மாத காலண்டர்
(( பட்டினத்தாரின் முக்கிய பாடல் மேற்கோள்கள் ))

Post No. 1316; Date: 29 செப்டம்பர் 2014
Prepared by London swaminathan (copyright)

பட்டினத்தார் பாடல்களிலிருந்து முக்கிய 31 மேற்கோள்கள் இந்த அக்டோபர் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2: சரஸ்வதி பூஜை, 3 விஜய தசமி/தசரா; 22, 23 தீபாவளி (தமிழ் நாட்டில் 22, வடக்கில் 23).
அமாவாசை:23; சுபமுஹூர்த்த நாள்:– 30; பௌர்ணமி – 8, ஏகாதசி- 4, 19

My Previous Articles on Pattinathar:
1.Alexander and Tamil Saint Pattinathar, Posted on 19th June 2013
2.Miracles at Crematorium, Posted on 11th February 2013
3.God’s Notebook, Posted on 16th March 2014
4.Tamil Saint Pattinathar’s Warning, Posted on 4th April 2014
5.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி Posted on 25 ஜனவரி 2012

அக்டோபர் 1 புதன் கிழமை
பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

அக்டோபர் 2 வியாழக் கிழமை
“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

அக்டோபர் 3 வெள்ளிக் கிழமை
நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)

அக்டோபர் 4 சனிக் கிழமை
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

அக்டோபர் 5 ஞாயிற்றுக் கிழமை
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

pattinathar wrapper0002

அக்டோபர் 6 திங்கள் கிழமை
என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

அக்டோபர் 7 செவ்வாய்க் கிழமை
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

அக்டோபர் 8 புதன் கிழமை
காம்பவிழ்த்துதிர்ந்த கனியுறுக் கண்டு / வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று / புரி‘குழல்தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவர்’’

அக்டோபர் 9 வியாழக் கிழமை
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 10 வெள்ளிக் கிழமை
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை
போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

pattinathar3

அக்டோபர் 11 சனிக் கிழமை
உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே
விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்
வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

அக்டோபர் 12 ஞாயிற்றுக் கிழமை
வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

அக்டோபர் 13 திங்கள் கிழமை
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அக்டோபர் 14 செவ்வாய்க் கிழமை
முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

அக்டோபர் 15 புதன் கிழமை
ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

pattinathar2

அக்டோபர் 16 வியாழக் கிழமை
வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை
ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்
உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்
விளக்கு இருக்க தீ தேடுவீர்

அக்டோபர் 18 சனிக் கிழமை
நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

அக்டோபர் 19 ஞாயிற்றுக் கிழமை
உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

அக்டோபர் 20 திங்கள் கிழமை
ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் / பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே
குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக் / கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல் / பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

pattinathar1

அக்டோபர் 21 செவ்வாய்க் கிழமை
நரிக்கோ கழுகு பருந்தினுக்கோ வெய்ய நாய் தனக்கோ
எரிக்கோ விரையெதுக்கோ விறை வாகச்சி ஏகம்பனே

அக்டோபர் 22 புதன் கிழமை
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 23 வியாழக் கிழமை
சொன்னபடி நில்லார் அறத்தை நினையார் நின் நாமம் நினைவிற் சற்றும் இலார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 24 வெள்ளிக் கிழமை
பட்டப் பகலில் வெளிமயக்கே செயும் பாவையர் மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் விறை வாகச்சி ஏகம்பனே

அக்டோபர் 25 சனிக் கிழமை
உருகி எலும்பு கருகி அடங்கி ஓர் பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

pattinathartemple19

அக்டோபர் 26 ஞாயிற்றுக் கிழமை
பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கிரங்கிப்
பரவையாருடைய மாற்ற ஏவலாளாகி இரவெலாம்
உழன்ற இறைவனே ஏக நாயகனே

அக்டோபர் 27 திங்கள் கிழமை
உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்

அக்டோபர் 28 செவ்வாய்க் கிழமை
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி /
பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர் / காப்பதற்கும் வழி அறியீர் கைவிடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே / ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்து உழல அகப்பட்டீரே.

அக்டோபர் 29 புதன் கிழமை
முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

அக்டோபர் 30 வியாழக் கிழமை
ஆசைக் கயிற்றிலாடு பம்பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
மக்கள் வினையின் மயக்குந் திகிரியை- – – –
அம்பலத்தரசே அடைக்கலம் உனக்கே

அக்டோபர் 31 வெள்ளிக் கிழமை
“தம்மை மறந்து நின்னை நினைப்பவர் / செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பல வாண!——————– / நிந்தமர் பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள் / ஆனை வைப்பில், காணொனா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்.”

—-பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலை

Pictures are taken from pattinatharkasi.blogspot.com and other sites;thanks.
contact swami_48@yahoo.com