
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 4 October 2018
Time uploaded in London –8-55 am (British Summer Time)
Post No. 5505
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை; பர்த்ருஹரி, வள்ளுவர் உடன்பாடு (Post No.5505)
பர்த்ருஹரி எழுதிய 300 ஸம்ஸ்க்ருதப் பாடல்களில் 100 பாடல்கள் நீதி சதகத்தில் இருக்கின்றன. பாடல் 11, 12, 13, 14, 15 ஆகியவற்றின் பொருள் உணர்ந்து தெளிவு பெறுவோம்.
மூர்க்கன் என்றால் தமிழில் முரட்டுப் பயல், ரௌடி என்று நினைப்போம். ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் மூர்க்கன் என்றால் முட்டாள் என்று பொருள்; உண்மைதான்
மூர்க்கர்கள் முட்டாள்கள்;
முட்டாள்கள் மூர்க்கர்கள்.
பர்த்ருஹரி சொல்கிறார்—
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥
சக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக் ச்சத்ரேண சூர்யாதபோ
நாகேந்த்ரோ நிசிதாங்குசேனஸம்தா தண்டேன கோ கர்தபௌ
வ்யாதிர் பேஷஜ ஸங்க்ரஹைர்ஸ்ச விவிதைர் மந்த்ரப் ப்ரயோகைர் விஷம்
ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி சாஸ்த்ரவிஹிதம் மூர்க்கஸ்ய
நஸ்த்யௌஷதிம் 1-11
பொருள்
நெருப்பை நீரால் அணைக்கலாம்;
சூரிய ஒளியை குடையால் மறைக்கலாம்;
அங்குசத்தால் யானையை அடக்கலாம்;
மாடு, கழுதையை குச்சியால் அடக்கலாம்;
நோய்களை மருந்தால் தீர்க்கலாம்;
விஷக்கடிகளை மந்திரம் மூலம் நீக்கலாம்;
இவை எல்லாவற்ரையும் நூல்கள் செப்புகின்றன.
ஆனால் முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை.

2000 ஆண்டு பழமையான சங்கத் தமிழ் நூல் உரைப்பது என்ன?
நன்னன் என்ற மன்னனின் அரண்மனைத் தோட்டத்தில் கீழே விழுந்த மாம்பழத்தை எடுத்த சிறுமிக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். ஊரே கெஞ்சியது- மன்னித்து விடப்பா என்று. ஆயினும் அவன் இணங்க வில்லை. எடைக்கு எடை தங்கக் கட்டிகளைத் துலா பாரம் தருகிறோம் என்றனர். அப்போதும் கேட்கவில்லை முட்டாள் நன்னன்; மூர்க்கன் நன்னன்; உன்னை எங்கள் தலை முறை இனி பாடாது; உன் தலை முறையில் வருவோரையும் பாடோம் என்று சபதம் செய்தனர் தமிழ்ப் புலவர்கள்.
400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மொகலாய மன்னன் அவுரங்க சீப் முரடன், வெறியன். இசை, கலைகள் எதுவுமே பிடிக்காது. அக்பருக்கு நேர் மாறானவன்.
இதோ இன்னும் ஒரு பாடல்:
साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥
இலக்கியத்தையும் இசையையும் விரும்பாதவன் மிருகம்தான்;
அவனுக்கு கொம்பும் வாலும் இல்லை;
புல்லைத் தின்னாவிட்டாலும் அவனுக்கும் மாட்டுக்கும்
வித்தியாசம் இல்லை
xxx

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥
யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம்
ஞானம் ந சீலம் ந குணோ ந தர்மஹ
தே மர்த்யலோகே புவிபார பூதா
மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ் சரந்தி
தவமோ தானமோ இல்லாமல்
கல்வியோ ஞானமோ இல்லாமல்
குணமும் ஒழுக்கமும் இல்லாமல்
வாழ்பவர்களின் உருவம் வேண்டுமானால்
மனிதன் போல இருக்கலாம்;
ஆனால் அவர்கள் மனித ரூபத்தில் உலவும் மாடுகளே.
வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர் – குறள் 410
நல்ல நூல்களைக் கற்று விவேகம் அடைந்தோர் மக்கள்;
அவைகளைக் கல்லாதவர் விலங்குகள்.
உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாஸனை போஜ மன்னன் மதிக்காதபோது அவன் நாட்டைவிட்டு வெளியேறினான். பின்னர் போஜ மன்னன் சிரமப்பட்டு அவனைத் தேடிக் கண்டுபிடித்து நாட்டிற்கு அழைத்து வந்தான்.
கம்பன் பாடுகிறான்
கம்பனுக்கும் சோழ மன்னனுக்கும் நடந்த சண்டை சச்சரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
கம்பனின் மகனான அம்பிகாபதியை, சோழ மன்னன் கொன்றவுடன்
கம்பன் பாடினான்,
மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? – என்னை
விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்து உண்டோ? சோழா
குரங்கு ஏற்றுக் கொள்ளாத கொம்பு.
இந்த உலகில் நீ ஒருவன்தான் மன்னனா?
உன் நாடு மட்டும்தான் வளமையான நாடு என்று எண்ணுகிறாயா?
உன்னை நம்பித்தான் நான் தமிழ் கற்றேனா?
என்னை ஏற்றுக் கொள்ளாத நாடு உண்டா?
குரங்கை ஏற்றுக் கொள்ளாத மரக்கிளை உண்டா? (இல்லை)

xxx
वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥
வரம் பர்வத துர்கேஷு
ப்ராந்தம் வனசரை ஸஹ
ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ
ஸுரேந்த்ர பவனேஸ்வபி
பொருள்
முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட
காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழும் காடு நன்றே- வெற்றி வேற்கை

xxx
शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥
சாஸ்த்ரோபஸ்க்ருத சப்த ஸுந்தர கிரஹ சிஷ்யப்ரதேயாகமா
விக்யாதா ஹா கவயோ வசந்தி விஷயே யஸ்யப்ரபோநிர்தனாஹா
தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்வர்தம் விநாபீஸ்வராஹா
குத்ஸ்யாஹா ஸ்யுஹு குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஹ பதிதாஹா
பொருள்
சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால்,
அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;
பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின் பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!

கம்பன் பாடுகிறான்
காதம் இருபத்து நான்கு ஒழியக் காசினியை
ஓதக் கடல் கொண்டு ஒளித்ததோ?– மேதினியில்
கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா! நீ முனிந்தால்
இல்லையோ எங்கட்கு இடம்?
உலகத்தின் சுற்றளவு 25,000 மைல்; உன் சோழ நாடோ 240 மைல்தான் (காதம்= 10 மைல்); மற்ற நாடுகள் எல்லாம் சுனாமி யில் மூழ்கி விட்டது என்று நினைத்தாயா; சோழ நாட்டில் தேன் சொட்டும் கொல்லி மலையை ஆளும் அரசே (மூடா) ! நீ கோபப் பட்டால் எனக்குப் போவதற்கு இடமே இல்லையா?
ஆக கவிஞர்கள் யாருக்கும் அஞ்சாத தீரர்கள். ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்’ போன்றவர்கள்; மூடர்களையோ மூர்க்கர்களையோ ஏற்க மாட்டார்கள்.

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-
குறள் 834, 835
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்- 834
நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு-835
ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.
–சுபம்–