தமிழுக்கு எத்தனை பெயர்கள்?

dwajasthamba

தொகுத்து எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014.

தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?

தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.

ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்!!

இதோ தமிழைப் போற்றும் சில பெரியோர்களின் பாடல்கள்:

annamalai ratham,fb

ஞானத் தமிழ்
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞான சம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேடவல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செலுவர் சீரருளாற்பெற லாஞ்சிவ லோகமதே
திரு ஞான சம்பந்தர் 1-117-12

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி பாடல் 2182

ganesh and mango

திருநெறிய தமிழ்
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
முதல் திருமுறை

அருந்தமிழ்
அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெமிறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
முதல் திருமுறை, சம்பந்தர்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று
வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவபாணி)

pulik kodi

செந்தமிழ்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல் உலகத்து
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
………….. ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர் – பாயிரம்)

பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே
முதல் திருமுறை, சம்பந்தர்

செந்தமிழ்த்திறம் வல்லிரோ?
அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

alagarkoil

தென் தமிழ்
தென் தமிழ் நன்னாட்டு தீது தீர் மதுரை
— சிலப்பதிகாரம்
வடதிசை மருங்கின் மன்னர்க்கெல்லாம்
தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை ஏற்ற வரைக — சிலப்பதிகாரம்

தென் தமிழ் உரைத்தோன் (கம்பன்)

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

21THIDOL_1524795g

தண்டமிழ்
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை (மணிமேகலை)

தள்ளாப் பொருள் இயல்பின்
தண் தமிழாய் வந்திலார்
கொள்ளார் இக்குன்று பயன் –(பரிபாடல் 9)

தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே –(சுந்தரர்)

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று
எழுவு தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே –(கம்ப இரா.அயோத்தி.சித்திர 28)

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை (மாணிக்கவாசகர், திருவாசகம்)

தன்னேர் இலாத தமிழ்
ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ் — (தண்டி அலங்காரம்)

26fr_Prabhu_Kudantharama

பசுந்தமிழ்
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ – (திருவிளையாடல், நாடு.57)

முத்தமிழ்
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்து முத்தமிழும் தந்து முற்றுமே –(கம்பன்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

அலகிறந்தனை தலை சிறந்தனை
அருள் சுரந்தனை இருள் துரந்தனை
உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை
( காசிக் கலம்பகம் )

15.-Uma-maheshwar,Bhimakichaktemple,-Malhar

சொற்றமிழ்
மற்றுநீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார் — (பெரியபுராணம், சேக்கிழார்)

தமிழ்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை அகத்தியன்………………. (பன்னிருபடலம்)

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
-சுத்தானந்த பாரதியார்

18.-Door-Jamb,-Large-Vishnu-Temple,-Janjgir

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை (சிறுபாணாற்றுப்படை)

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் (பிங்கலந்தை)

இன் தமிழ் இயற்கை இன்பம் (சிந்தாமணி 2063)

தமிழ் தழிய சாயலவர் சிந்தாமணி சுர.32)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமூலர் திருமந்திரம்)

chola Nataraja2
கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

சாறு சுவை எனக் கூற நின்று இட்ட
ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே
ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்
கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் (பொய்கையார்)

karikalan
தமிழால் வைதாரையும் வாழவைப்போன் (கந்தர் அலங்காரம்-22, அருணகிரிநாதர்)

பாரதியார், பாரதி தாசன் ஆகியோரின் பொன்மொழிகள் பாரதி பற்றிய கட்டுரைகளிலும், பாரதியுடன் 60 வினாடி பேட்டி, பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி ஆகிய கட்டுரைகளிலும் காண்க.

இசைத் தமிழ் அதிசயங்கள்

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

 

3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

 

4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

 

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

 

7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

 

8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்

திகுட திகுதிகு தீதக தொந்தத்

தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

 

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

 

10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

 

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 

11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!

Contact London Swaminathan at swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

Please read other 425 English and Tamil posts already uploaded by me.